Wednesday 3 June 2015

இலங்கை : பிளந்து கிடக்கும் தீவு - புத்தக விமர்சனம்

                         புத்தகத்தின் தலைப்பே உள்ளிருக்கும் முழுத் தகவல்களையும் சொல்லிவிடுகிறது. இந்தப் புத்தகத்தைத் திறக்க விழையும்போது மனம் நம்மையறியாமல் ஒரு விதமான வருத்தத்தை, தயக்கத்தை மற்றும் மனக்குமுறலை வெளிப்படுத்துகிறது என்பதே நிதர்சனம்.

                     இந்தியாவின் கீழே இருக்கின்ற குட்டியோண்டு தேசமான இலங்கை 1948 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்றது முதல் 2010 ஆம் ஆண்டு முடிய நடந்த மிகப்பெரிய கவனத்தில் கொள்ளவேண்டிய செய்திகளை காலவரிசையில் ஒரு தொகுப்பாகவே ஆசிரியர் முன்னமே தெரிவித்துவிடுகிறார்.

                    இந்நூலை ஆசிரியர் ஒரு பயணக்கட்டுரை போலவே கொடுத்துள்ளார் என்பது நாமும் அவருடன் பயணித்து அவர் கண்ட, பேசிய, சந்தித்த விஷயங்களில் ஒன்றிப்போவதற்கு இலகுவாக இருக்கிறது. இது ஒரு மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்பது சொல்லிதான் தெரியவேண்டி இருக்கிறது, அல்லாமல் நிச்சயம் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை என்பதே உண்மை. இம்மூல நூலின் ஆசிரியரும் ஒரு தமிழர் என்பது கருத்தில் கொள்ளவேண்டிய விடயம்தான்.


                      இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்துத் தகவல்களும் ஆசிரியர் தான் நேராகவே பல முறை இலங்கைக்கு பல காலகட்டங்களில் பயணித்து அங்குள்ள பல மக்களையும், விடுலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களையும், தமிழ் இராணுவ அதிகாரிகளையும், அங்கு வாழும் புத்த பிக்குகளையும், இஸ்லாமிய சகோதரர்களையும் நேர்காணல் செய்து எழுதியுள்ளதே இப்புத்தகத்தின் மதிப்பையும் உண்மைத்தன்மையையும் அதிகப்படுத்துகிறது.

                          இலங்கையின் உள்நாட்டுத் தமிழர்களுக்கிடையே இருந்த ஒற்றுமையின்மையும், மத அடிப்படையில் ஏற்பட்ட பிளவுகளும் அதன் மூலம் அவர்கள் சந்தித்த அடக்குமுறைகள் ஆகியவற்றை இந்நூல் கச்சிதமாக விளக்குகிறது. விடுதலைப்புலிகளின் மிக நேர்த்தியான திட்டமிடலையும், அவர்களின் தாக்குதல்களையும், அதில் சிலர் தப்பிப் பிழைத்த நிகழ்வுகளையும் நம் கண்முன்னே ஒரு திரைப்படம் பார்ப்பதுபோல் விவரித்துள்ளார்.

                           இப்போது போர் முடிந்தாலும் அங்கே நிலவி வரும் மக்களின் அச்சவுணர்வு, நம்பிக்கையின்மை மற்றும் தினம் தினம் உலவும் பலவிதமான வதந்திகள் என முதல் சில பக்கங்களிலேயே அந்நாட்டின் இன்றைய நிலை தெளிவாகத் தெரிந்துவிடுகிறது. இலங்கையில் புத்த மதத்தின் வளர்ச்சி, அதன் ஆதிக்கம் மற்றும் மற்ற மத மக்களின் நிலை என பல செய்திகளை சுருங்கச் சொல்லிக்கொண்டே போகிறது.

                            இலங்கையில் முதன்முதலாக தமிழ் மக்களுக்கு எதிராகக் கிளம்பிய கலகங்கள், அவை உருவான விதம், அதன் மூலம் தமிழ் மக்களைக் கொன்று குவித்த நிகழ்வுகள், அதற்கு பதிலடி கொடுக்க உருவான விடுதலைப்புலிகள் அமைப்பின் வரலாறு, அதன் போர் முறைகள், பிரபாகரன் அவர்களின் முதல் கொலை மற்றும் அவர் பின்பற்றிய சில சட்டதிட்டங்கள், அவர்களின் தாக்குதல்கள், மற்றும் அது நடைபெற்ற இடங்களும் அதன் இன்றைய நிலையையும் அதில் இறந்த மனிதர்களின் தகவல்கள் என சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான காலச்சக்கரத்தை நம் கண்முன்னே விரிக்கிறது இப்புத்தகம்.

                           அதேபோல் விடுதலைப்புலிகளின் அமைப்பில் ஏற்பட்ட சில பிளவுகள், அந்த அமைப்பில் இருந்து கருத்து வேறுபாட்டால் பிரிந்து மனைவியுடன் கனடா சென்று அங்கு வாழ்ந்துவரும் ராகவன் என்பவரின் நேர்காணல் மற்றும் பலரது நேர்காணல்களும் நமக்கு சில பல அதிர்ச்சிகளைத் தரக்கூடியதாகவே உள்ளது. நாம் முன்னால் கேட்டு, படித்திருந்த தகவல்களுக்கு நேரெதிராகவே பல விஷயங்கள் நிஜத்தில் உள்ளது. ஒரு இடத்தில் ராகவன் இப்படிச் சொல்கிறார், “பத்தே ஆண்டுகளில் தேவை என்று நினைத்த விஷயத்துக்காக கொலை செய்வதிலிருந்து விளையாட்டாக கொலை செய்யும் நிலைக்கு புலிகள் வந்திருந்தனர்” போன்ற பல விடயங்கள் வியப்பையும், அதிர்ச்சியையும் நல்குவதாகவே உள்ளன.

                 ஒரே ஒரு தமிழராக துரைராஜா என்பவர் இலங்கை இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவர் தரும் பலவிதமான தகவல்களும் வேறொன்றாகவே இருக்கிறது. அங்கு இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்கள் ஆகியவை பற்றி ஐ.நா சபையின் கேள்விக்கு கோத்தபய ராஜபக்சே ஆகஸ்ட் 2010-ல் சமர்ப்பித்த அறிக்கையின் சில பகுதிகளும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. அங்கு நடைபெற்ற பல விதமான மனித உரிமை மீறல்கள் பற்றியும், கொடூரக்கொலைகளைப் பற்றியும் படிக்கும்போது நம் கண்களைத் திறக்க முடியாத அளவுக்கு கண்ணீர் பெருக்கெடுக்கிறது என்பது உண்மை. அதிலும் தமிழ் மக்களின் நிலைமையை தமிழ் இராணுவ அதிகாரியான ரவி அவர்கள் சொல்லும் தகவல்கள் நம்மை வாய்விட்டே அழ வைத்துவிடுகிறது. ஒரு இடத்தில் ஒரு செய்தி சொல்கிறார், “நீங்கள் எல்லோரும் ஒரு ஆளை எப்படிக் கொல்வது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஆகவே அதற்கு ஒரு தமிழனைத் தேர்ந்தெடுத்து அவனைக் கொன்று பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்” என அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டதைப் பற்றி.

                              அதேபோல் வேறு அத்தியாயத்தில் வடக்கு மாகாணத்தைப் பற்றியும், யாழ்ப்பாணத்தைப் பற்றியும் அங்கு வாழ்ந்த மக்களைப் பற்றியும் அவர்களின் கடந்த கால வாழ்க்கையையும், இன்றைய நிலைமையையும், அவர்களின் மறக்க முடியாத நினைவுகளையும் சேகரித்துத் தந்துள்ளார் ஆசிரியர். அதேபோல் “ஸ்ரீ” என்ற ஒரு குறியீடின் மூலம் அங்கு ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகள் நமக்கு சந்தோஷத்தைத் தருவதாகவும் அதே நேரம் அம்மக்கள் தமிழ் மேல் கொண்டிருந்த காதலை விளக்குவதாயும் உள்ளது.

                             அம்மண்ணில் வாழ்ந்த முஸ்லிம் சமுதாய மக்கள் அனுபவித்த கொடுமைகள், விடுதலைப்புலிகள் அவர்களுக்குக் கொடுத்த இன்னல்கள் மற்றும் உயிர் வேண்டி பொருள்களை, பிறந்த வீட்டை விட்டு ஓடிய பலரின் அனுபவங்களை அறியும்போது ஒன்று புலப்படுகிறது, புலிகளும் அதிகார அத்துமீறல்கள் செய்தார்கள் என்பதும் இதன்மூலம் சாமானிய மக்களின் ஆதரவையும் சிறுகச் சிறுக இழந்துகொண்டே வந்துள்ளனர் என்பதையும்.

                               இன்று போர் முடிந்த பின் இருக்கும் இலங்கை தேசம், அங்கு வாழும் தமிழ் மக்களின் நிலை மற்றும் புத்த மதத் திணிப்புகள், மகிந்தா ராஜபக்சேவின் புகழ்பாடும் டிவிக்கள், புத்த மடங்கள் மற்றும் இந்தியாவுடனான வரலாற்றுத் தொடர்பை மாற்றுவதற்கான முற்படலையும், வரலாற்றைத் திருத்தி திருப்பி எழுதவும் பழைய எச்சங்களை மறக்கடிக்கவும் செய்ய நடக்கின்ற முயற்சிகளையும் ஆசிரியர் நேரடியாக களக்காட்சியைப் பார்த்து பதிந்துள்ளார்.

                                  உலகில் உள்ள முக்கியமான மதங்களில் ஒன்றான புத்த மதம் இங்கு பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப் படுகிறது. அதேநேரம் புத்த மதத்தைப் பின்பற்றும் மக்களின் நம்பமுடியாத, மிகக் கொடூரமான, அசிங்கமான முகத்தை இந்தப் புத்தகம் தோலுரித்துக் காட்டுகிறது. அன்பு, அமைதி, அரவணைப்பு என நாம் நினைப்பதற்கு நேரெதிராகவே இன்று இலங்கையில் நடக்கிறது என்பதும் அங்கு மத ஒற்றுமையோ, சக மனிதனை மதிக்கும் பண்போ இல்லை என்பதும் புத்த பிட்சுகளே ஆட்சி அதிகாரத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தமிழ் மக்களை வேருடன் அழிக்க புறப்பட்டுள்ளனர் என்பதை சந்தேகமின்றி இப்புத்தகம் நிரூபிக்கிறது.

                            இப்புத்தகத்தில் உள்ள ‘இறுதி ஆட்டம்’ என்ற கடைசி அத்தியாயம் நிச்சயம் ஒரு  பதற்றமான ஒரு மனதை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. அதிலும் ஆனந்தி மற்றும் சந்தியா என்ற இரு பெண்களின் வாழ்க்கையை அவர்களின் வாயிலிருந்தே சொல்ல வைத்து அப்படியே பதிவு செய்திருப்பது நமக்கு துக்கத்தை பதின் மடங்கு அதிகரிக்கச் செய்கிறது. இனியேனும் இவர்களுக்கு நல்லதொரு நிம்மதியான குறைந்தபட்ச சந்தோஷமான வாழ்க்கையையேனும் கடவுள் கொடுக்க வேண்டும் என மனம் பிரார்த்திக்கிறது. இலங்கை என்ற கண்ணீர்த் துளி போல உருவம் கொண்ட தேசத்தின் கண்ணீர்க் கதைகள் இனியேனும் முடிவு பெறவேண்டும் என்றே இப்புத்தகத்தை முடிக்கும் தருணத்தில் நம் மனது ஏங்குகிறது.

                              ஒரு இன மக்களின் வீரம், அடக்குமுறை, அதன் சிறப்புகள், சண்டைகள், வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள் என ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து துல்லியமாகப் புரிந்துகொள்ள இப்புத்தகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

                                 இப்புத்தகத்தின் சிறப்பு என்னவென்றால் எளிய சொற்கள், அழகிய நுண்ணுணர்வு மிக்க வார்த்தைப் பிரயோகங்கள் ஒரு வித உயிர்ப்புடன் கூடிய அற்புதமான நடையுடன் ஒவ்வொரு பக்கமும் முன்னகர்கிறது. பல ஆழமான மனதைத் தூண்டுகிற செய்தியையும் அனாயசமான பல நிகழ்வுகளையும் நமக்கு அதிக வேதனையை மட்டுமே தராமல் துடிப்பும், உணர்வும் கலந்து ஒவ்வொரு பக்கத்தையும் விவரித்துள்ளார் ஆசிரியர். தன்னுடைய ஒவ்வொரு பயணத்திலும் கண்ட நிதர்சன உண்மைகளை, எதார்த்தத்தை மீறாத வகையிலும் அதே நேரம் இன்னும் நீளமாக பல கட்டுரைகளை எழுதுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும் சிக்கனமான, கச்சிதமான வார்த்தைகளை உபயோகப்படுத்தி தெளிவான கோர்வையில் உள்ளதை உள்ளபடி நம் கண்முன்னே நிறுத்தியுள்ளார்.

                                   இலங்கையைப் பற்றிய முழு வரலாறும் இருநூறுக்கும் குறைவான பக்கங்களை மட்டுமே கொண்டுள்ள இந்த ஒரு புத்தகத்தின் மூலமே அறிந்துகொள்ள முடியும் என்பது பெரிய விஷயமேதான். ஒவ்வொரு தமிழ் இளைஞனும், வெற்றுப் பேச்சு பேசித் திரியும் தமிழ் மக்கள் காவலர்களும் நிச்சயம் படிக்கவேண்டிய, உண்மைகளைப் புரிந்துகொள்ள கிடைக்கும் அரிய ஒரு களஞ்சியம் என்று இப்புத்தகத்தைச் சொன்னால் அது மிகையல்ல. அதேநேரம் இப்படைப்பை தைரியமாக தமிழில் கொண்டுவந்து நல்கிய ஆசிரியருக்கும், வெளியீட்டாளர்களுக்கும் தமிழன் என்கிற முறையில் நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்பதும் உண்மையே.
ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-93-8414-902-4.html
ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

No comments:

Post a Comment