Friday 27 March 2015

மருந்தில்லா மருத்துவம் - புத்தக விமர்சனம்

                                                 நம் குழந்தைகள் பிற்காலத்தில் எவ்வாறு இருக்கும் என்பது நாம் இன்று வளர்க்கும் முறையில்தான் இருக்கிறது என்பது நாம் அறிந்ததே. ஆனால் பொதுவாக கண்ணுக்குத் தெரிந்த உடலையும் அதன் வளர்ச்சியையும், அயற்சியையும்தான் கவனத்தில் கொள்கிறோம். அவர்களுக்குத் தேவையான உணவையும் உடையையும் பற்றி தான் பெரிதாக சிந்திக்கிறோம். ஆனால் நம் கண்களுக்குப் புலப்படாத உயிருக்கும் உடல் வளர்ச்சிக்கும் மூலமான மன ஆரோக்கியத்தையும், மன நெருக்கடிகளையும் பற்றி பெரிதாக யோசிப்பதே இல்லை. அவர்களின் உள்மனதின் அலைகளை கண்டுகொள்வதே இல்லை என்று இந்நூலின் ஆசிரியை ஆதங்கம் கொள்கிறார்.





                                 இந்தப் புத்தகத்தில் ரெய்கி என்கிற மிக வலுவான மருத்துவமுறை மூலம் இந்தக் குழந்தைகளின் பிரச்சனைகளுக்கும் அதோடு மட்டும் அல்லாமல் இன்றைய நவீன காலத்தில் எல்லா வயதினர்க்கும் வரும் விதவிதமான நோய்களுக்கும் மிக எளிய சிகிச்சை மூலம் நிவாரணம் கிடைக்கப் பெறலாம் என்பதையும் கூறியுள்ளார்.

                            அதிலும் ஒரு குடும்பத்தில் இருக்கும் சிறுவர்கள், இளைஞர்கள், குடும்பத்தலைவி, அலுவலகங்களில் வேலை செய்யும் நடுத்தர வயதுக்காரர்கள், முதியோர்கள் என அனைத்து வயது மனிதர்களுக்கும் வருகின்ற வியாதிகளையும் தீர்க்கும் என்பது “ரெய்கி” இயற்கை சக்தி மருத்துவத்தின் சிறப்பு என்றே சொல்லவேண்டும். அதுவும் எந்தவிதமான அறுவைசிகிச்சையோ, மாத்திரைகளோ, ஊசியோ, பக்கவிளைவுகளோ இல்லாமல் உடலை சில தொடுதல்கள் மூலமும் தொடாமல் காற்றின் சக்தியைப் பாய்ச்சுவதன் மூலமும் தீராத நாள்பட்ட வியாதிகளையும் குணப்படுத்த முடியும் என்பது அனைவருக்கும் ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தையே தரும். இதில் எந்த விதமான அமானுஷ்ய சக்தியோ, மந்திர தந்திரங்களோ இல்லாமல் முழுவதும் அறிவியல் முறைப்படி தான் “ரெய்கி” என்கிற மருத்துவ சிகிச்சை முறை நடைபெறுகிறது என்பது மேலும் நம்பகத்தன்மையைக் கூட்டுவதாகவே இருக்கிறது.

                             அதிலும் இந்த மருத்துவ முறைகூட இந்தியாவில் இருந்து பழங்காலத்தில் தெற்காசியாவின் பல நாடுகளுக்கும் பரவியது என்பதும் நாம் மறந்து, மறைந்துபோன ஒரு மருத்துவமுறை மீண்டும் டாக்டர் மிகாவோ யுஸி என்ற மேதையால் உயிர்பெற்று பல தேசங்களில் பரவி நம் நாட்டிலும் இப்போது வளர்ந்துகொண்டே வருகிறது.இப்புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் வாசித்துக்கொண்டே போகையில் மனம் பரபரக்கிறது என்பதே நிஜம். அதற்குக் காரணம் இதில் கூறப்பட்டுள்ள நோய்களின் பட்டியல், அது வருவதற்கான காரணம், அதன் விளைவுகள், அதனால் உருக்குலைக்கப்படும் உடல் உறுப்புகள் என்பன போன்ற தகவல்கள் நமக்கு ஒரு முன்னெச்சரிக்கை என்பது திண்ணம். ஆனால் ஆசிரியை அடுத்தடுத்த பக்கங்களில் அதற்கான எளிய தீர்வையும் சட்டென அனைவரும் புரிந்துகொள்ளும் படியும் எளிய தமிழில் ஆங்கிலப் பெயர்களைச் சொல்லி பயமுறுத்தாமல் தந்துள்ளது நிச்சயம் இப்புத்தகத்தின் சிறப்பேயாகும்.

                               அதிலும் ஆசிரியை இப்புத்தகத்தில் மனித உடம்பில் இருக்கும் ஒவ்வொரு பகுதியையும், உறுப்புகளையும் பகுத்தாய்ந்து அதை பாதுகாக்க வேண்டிய வழிமுறைகளையும் தெளிவாக விளக்கியுள்ளார். ஒரு பெண் கர்ப்பம் ஆகும் நாள் முதல் செய்ய வேண்டிய குழந்தைக்கான நோய் தடுப்புமுறைகள், மற்றும் பிறப்பு முதல் இருபத்தியொரு வயது வரை உள்ள ஒவ்வொரு பருவத்திலும் எது செய்யலாம், செய்யக்கூடாது என்பதையும் நேர்த்தியாக எடுத்துக்காட்டுகளுடனும் சொல்லியுள்ளார். அதேபோல் ஒரு தாயின் கருவறையில் குழந்தை இருக்கும்போது உருவாகும் உயிர் சக்தியின் சக்கரங்களையும், குழந்தை பிறந்தபின் உருவாகும் சக்கரங்களையும், அச்சக்கரங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் உடல் உறுப்புகளையும் (ஆங்கிலப் பெயர்களுடனும்) படிப்பவர்க்கு புரியும்படியும் விவரித்துள்ளார்.

                                 மனித உடம்பில் இருக்கின்ற ஏழு விதமான சக்கரங்களையும் அதை சரியாகப் பேணாமல் இருந்தால் வரும் நோய்களையும் அதற்கு அறிவியல் முறைப்படி செய்யும் “ரெய்கி” சிகிச்சை முறைகளையும், பின்பற்ற வேண்டிய தியான முறைகளையும், பயிற்சி முறைகளையும் ஐயம் திரிபட விளக்கியுள்ளார். இன்றைய மக்களின் பழக்கவழக்கங்கள் அதன் மூலம் வளரும் தலைமுறை படும் அல்லல்களும் அதற்கான பரிகாரங்களையும் ஒரு அம்மா தன் பிள்ளைக்குச் சொல்வதைப் போல ஆலோசனையும் அதேநேரம் அக்கறையுடன் கூடிய கோபத்தில் சில வினாக்களையும் வினவியுள்ளார்.

                               நம் முன்னோர் உடம்பைப் பேண கற்றுத் தந்த எளிமையான வழிமுறைகளையும் உணவு முறைகளையும் அதன் அறிவியல் விளக்கங்களையும் தெளிவுபடக் கூறி இன்றைய அறிவியல் நூறு சதவிகிதம் நம்பும்படியானது அல்ல என்பதை நாசாவா? நாசமா? என்னும் தலைப்பில் நாசூக்காக நையாண்டியுடன் நம் இளம்தலைமுறையினர் உணரும்படி சொல்லியுள்ளார். இதற்கும் மேல் இப்போது இந்தியாவையே பீதியில் அலற வைத்துக்கொண்டிருக்கும் பன்றிக்காய்ச்சலைப் பற்றியும் அதைத் தடுப்பதற்கான எளிய ஆலோசனையும் கூறப்பட்டுள்ளது.

                                 இப்புத்தகத்தின் பல இடங்களில் திருமூலர் மற்றும் திருவள்ளுவர் ஆகியோரின் செய்யுள்களையும் அதன் பொருள்களையும் எடுத்தியம்பி ஒவ்வொரு கட்டுரையின் தன்மைக்கேற்ப விளக்கியிருப்பது நம் முன்னோர்களின் பெருமையையும் நூல் ஆசிரியையின் பரந்த அறிவையும் கண்ணோட்டத்தையும் காட்டுவதாகும். இப்போது இருக்கும் நிலையில் ஒருவர் மருத்துவமனைக்கு ஒரு நாள் சென்று வந்தால்கூட ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்யவேண்டும் என்பது ஊரறிந்த உண்மை. இந்நிலையில் நாம் வரும்முன் காப்பதே சிறந்தது என்பதையும் அதற்கான பல துணுக்குகளையும் ஆசிரியை பல இடங்களில் விதறி உள்ளார் என்பது இப்புத்தகத்தில் ஒரு சிறந்த விடயம் தான்.இந்தப் புத்தகத்தில் சில எழுத்துப் பிழைகள் இருப்பதும், அதேபோல் இன்னும் சில படங்களையும் இணைத்து இருந்தால் முதல் முதலாக உடலைப் பற்றிய ஒரு புத்தகத்தைப் படிக்கும் இளம் வயதினர்க்கும் சிறு சந்தேகங்கள் கூட எழாதபடி தெளிவாக இருந்திருக்கும்.

                                 இந்நூல் ஆசிரியை டாக்டர் பி.எஸ். லலிதா அவர்கள் மிக நுட்பமான அறிவியல் சிக்கல்களைப் பற்றியும், உடம்பின் கூறுகளைப் பற்றியும், நோய்களின் வகைகளைப் பற்றியும் தடுப்புமுறைகள் பற்றியும் அதன் பெயர்களையும் மிக இலகுவான நடையில் அனைவரும் புரிந்துகொள்ளும்படியும் எழுதியிருப்பது நிச்சயம் சமீபத்தில் வெளிவந்த பல மருத்துவப் புத்தகங்களில் இருந்து இதை வேறுபடுத்திக் காட்டுகிறது என்பதே உண்மையாகும்.
ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-366-8.html
ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234