Thursday 18 January 2018

சிறுகதை - நினைவைப் புதைத்தல் ( இணைய மாத இதழில் வெளிவந்தது )


நேற்றுவரை தன்னுடன் விளையாடி மகிழ்ந்த தாத்தாவுடன்தான் இருந்தான் சுடலை. ஆனால் இப்போது அவர் குளிர்ந்து விறைத்த தேகமாக. மிகவும் நீண்ட உருவம். எப்படியும் எண்பது வயது தாண்டியிருக்கும். அம்பாசிடர் காரின் பின்புறம், மடியில் அவரது கால்கள். காலில் இருந்த அழுக்கு அப்படியே தான் இருக்கிறது. நகம் நீளமாக என்பதை விட அளவோ அழகோ இல்லாத ஒரு அழகில் அவர் கால்களில்.
சுடலை பள்ளிக்கூடம் போய்விட்டு பக்கத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு நேராகச் சென்றதே குறைவு. சாயங்காலம் வாசலில் அவன் தென்பட்டவுடன் ‘ஓடிவாடியே’ என்று மனைவியை அழைப்பதுதான் தாத்தாவின் தினவழக்கம். அவரது கத்தி அழைக்கும் குரல் மற்றும் புளங்காகிதமே பக்கத்து வீட்டில் இருக்கும் அம்மாவுக்கு அவன் வருகையை உணர்த்திவிடும். பாட்டி நடந்து வரும்போதே சாப்பிடுவதற்கு அவனுடைய வாயும் வயிறும் தயாராகிவிடும்.
ஒருமுறை பாட்டியை எட்டி உதைத்ததை பார்த்தவுடனே அவனை அறியாமல் அழுதுவிட்டான். பாட்டியும் உதையை வாங்கிக்கொண்டு முனகிக்கொண்டே ஒரு மூலையில் போய் அமர்ந்து ‘இந்த சவத்து கிழவனுக்க காலு வெளங்காத போவ. காலனுக்க விளி இதுக்கு வரல்லியே,’ என்றவாறே சுடலையை அழைத்து அணைத்துக்கொண்டாள் . கண்ணீர் நிற்காமல் வடிந்துக்கொண்டே இருந்தது. அவளும் துடைத்துக்கொண்டே இருந்தாள். அது நடந்து ஏழெட்டு வருடங்கள் இருக்கலாம்.
சுடலை அவன் தாத்தா நகம் வெட்டுவதற்கென இருக்கும் நகவெட்டியை உபயோகித்து பார்த்ததேயில்லை. எப்போதும் கையில் கொண்டு நடக்கும் சிறு வெட்டுக்கத்தியால்தான் லாகவமாக வெட்டுவார் . ஆனால் ஒரு நாள் கூட வெட்டிய நகங்களை வயலில் வீசவே மாட்டார். அவன் சொல்லியும் பார்த்தான், “பக்கத்தில் ஓடும் சிறு ஓடையில் வீசுங்க”, என. அவர் அதற்காக திட்டியதுடன் தண்ணீரில் எக்காரணத்தைக் கொண்டும் எச்சில் துப்பவோ, குப்பைகளை வீசவோ கூடாது என்றும், நகம் மூதேவியின் அம்சம் என்பதால் அதை யாருடைய காலடியும் பதியாத இடத்தில்தான் களைய வேண்டும் என்றதும் அவனுக்கு நினைவுள்ளது .
இதையேதான் பாட்டியும் சொன்னாள், நகங்கள் காளானாய் உருமாறும் என. அதை வயலில் போட்டால் சாமிகள் கோபமாவார்கள் என்றும், நீரில் போட்டால் தண்ணீர் கிடைக்காமல் கடைசி காலத்தில் இறக்க நேரும் எனவும்.
தாத்தா நகங்களை சிறு காய்ந்த இலையில் சேகரித்து எடுத்து வந்து தார்ச்சாலையின் ஓரத்தில் போடுவார், அல்லது இவனிடம் போடச்சொல்வார். இவன் பயத்தால் ஒரு நகத்தைக்கூட சிந்தாமல் அவ்வளவு தூரம் நடந்து வந்து போட்டுச் செல்வான். அவரும் அதை தொலைவில் இருந்து கவனிப்பார். பாட்டி சொல்வாள், நகக்கண்ணில் தோன்றும் வெள்ளைப்புள்ளிகள் அதிர்ஷ்டத்தின் வருகை என. ஒவ்வொரு புள்ளிக்கும் புதுத் துணி கிடைக்கும் எனவும், கிடைத்தவுடன் புள்ளிகள் மறைந்துவிடும் என்றும். நகம் அவனுக்கு வேகமாக வளரும். ஆனால் தங்கைக்கு அப்படி அல்ல. பள்ளி விடுமுறைக் காலங்களில் அதில் அவ்வளவு அழுக்கு படியும். அதே கைகளுடன் சாப்பிடவே பாட்டி விடமாட்டாள். ஆனால் அப்போதெல்லாம் தாத்தா தான் அவனுக்காக பேசுபவர்.நேற்று இரவிலும் இவன் வெற்றிலை பாக்கை கல்லில் வைத்து இடித்துக் கொடுத்தான். இரவு பதினொரு மணிவாக்கில்தான் கண் திறக்க முடியவில்லை என பாட்டியை கூப்பிட்டார். பாட்டி ஓடிச்சென்று அவரை எழுப்பப் பார்க்கும்போதே நிலைகுத்திய பார்வை. பாட்டியின் அரட்டல் கேட்டுத்தான் சுடலை எழுந்தான். பக்கத்து வீட்டில் இருக்கும் அப்பாவை அழைக்க ஓடினான். அவர் அதற்கு பக்கத்து வீட்டில் இருக்கும் டிரைவர் அண்ணாச்சியை கூப்பிட ஓடினார். அவரது கருப்பு அம்பாசிடர் காரில்தான் தூக்கிச் சென்றனர். ஆஸ்பத்திரியில் சேர்க்கும்போதே தாத்தா செத்துப்போவார் என சுடலைக்கு தோன்றியது. அதுதான் நடந்ததும். ஒரு மணி அளவில் உடம்பை எடுத்துப் போகச் சொல்லிவிட்டனர்.

இப்போது அவனது அப்பாவும், பாட்டியும் இவனுடன் அழுது கொண்டே வந்தனர். வாகனம் வந்து நின்றதும் சுடலையின் அம்மாவின் அழுகையும், அந்த இரவில் எதிரொலிக்கத் தொடங்கியது. மரங்களில் இருந்த காகங்கள் கத்திக்கொண்டே பறந்தது. தாத்தாவின் காலை இவன் பிடித்துக் கொண்டான். பிணத்தை அப்புறப்படுத்தி அதை வீட்டு வெளி வராந்தாவில் வைத்தனர். வெற்றிலைக் கறைகூட அவர் உதட்டில் இருந்தது.
பக்கத்து வீடுகளில் இருந்து ஒவ்வொரு ஆளாக வரத்தொடங்கினர். சுடலையின் அப்பாவிடம் பேசிவிட்டு ஒவ்வொரு ஆட்களையும், சுடலையை ஒத்த பதின்வயதுடைய பசங்களையும் ஒரு பெரியவர் ஒவ்வொரு ஊருக்கும் சென்று தகவல் தெரிவிக்க பிரித்து வழி சொல்லி, பெயர் சொல்லி, அடக்கம் செய்யப்போகும் நேரத்தைச் சொல்லி அனுப்பிக்கொண்டிருந்தார்.
சுடலை மட்டுமே இப்போது அவ்விடத்தில் இளவயதில் இருப்பவன். அவனது அப்பா வேகமாக வந்து தாத்தாவின் நண்பரிடம், புகைப்படத்தையும் இறப்புச் செய்தியையும் பத்திரிக்கைகளில் போடவேண்டும், என்றார். அதற்கு, தம்பி கொஞ்சம் பணம் ஆகுமே என்றவரிடம், எவ்வளவு செலவானாலும் அது மட்டும் செய்யாமல் இருக்கவே முடியாது, என்று கொஞ்சம் ஆவேசமாக சொன்னார் அப்பா.
ஏதாவது பழைய புகைப்படம் ஒன்றை தேடி எடுத்துவரச் சொன்னார் சுடலையிடம். தாத்தாவின் பாதி உடைந்த அலமாரியில் எதுவும் இல்லை. வீட்டில் பெரிது பெரிதாக காந்தி, நேரு, இந்திரா, ஏன் லால் பகதூர் சாஸ்திரியின் புகைப்படம்கூட இருந்தது. ஆனால் அவரின் ஒரு புகைப்படமும் சிக்கவில்லை. நினைவில் வந்தவனாய், அப்பாவின் கல்யாண படத்தில் அவர் பாட்டியுடன் உட்கார்ந்துகொண்டு இருப்பதைப் போன்ற படத்தை எடுக்க வீட்டுக்குச் சென்று கொஞ்சம் மங்கிய அந்த கருப்புவெள்ளை படத்தை எடுத்துக்கொண்டு பெரியவரிடம் காட்டினான். அவர் கையில் இருந்த நீண்ட டார்ச் லைட்டை அதன்மேல் அடித்துப்பார்த்தார். இது அவ்வளவு தெளிவில்லையே தம்பி, வேற இருக்குதாணு பாருப்பா, என்றார். அப்பா அதை பார்த்துக்கொண்டே வேகமாக அருகில் வந்து, இந்த ஒண்ணுதான் கொஞ்சம் தெளிவா இருக்கு, என்றார்.
சரி… என்றவர், இப்போ பத்திரிக்கை ஆபீஸ் அனுப்ப வேற ஆள் இல்லை, தம்பியை போகச் சொல்லலாமா, என்றவாறே அப்பாவைப் பார்த்தார். சரி, என்றவர் கையில் கொஞ்சம் காசை திணித்துவிட்டு நடந்தார். சுடலை புகைப்படத்துடன் பல பத்திரிக்கை அலுவலகங்கள் இருந்த நாகர்கோவிலின் முக்கிய சாலையை அடைந்தான்.
முதலில் இருந்த ஆங்கில பத்திரிக்கை அலுவலகத்தின் வாசலிலேயே இறப்புச் செய்திகளுக்கு இப்போது ஐந்து சதவிகித தள்ளுபடி விலையில் பதிப்பித்து தருவதாக எழுதப்பட்டிருந்தது. இறப்புச் செய்தி அவ்வளவு சந்தோசமான செய்தி என எப்படி இந்த மடையர்கள் யோசித்தார்கள்? ஒரு வேளை செத்தவர்கள் செத்த பின்னும் பிள்ளைகளுக்கு சேமித்துக்கொடுக்கிறார்கள் என்ற நினைப்பில் எழுதி வைத்திருக்கலாம். அந்தச் செய்தியே அவனுக்கு கோபத்தையும், கசப்பையும் அந்த பத்திரிக்கை மேல் தோன்றச் செய்தது. தாத்தா எக்காரணத்தைக் கொண்டும் அந்த பத்திரிக்கையில் மட்டும் வரவே கூடாது என்று முடிவெடுத்தவனாய் பக்கத்து அலுவலகத்துக்குச் சென்றான்.
அங்கு இப்போது இது சேவை என்பதால் சரியான காசுக்கு பதிலாக இருபத்தைந்து சதவிகிதம் விலை குறைத்துள்ளதாக பறைசாற்றி எழுதி வைத்திருந்தது. மனிதாபிமான செயல் தான் என்பதால் உள்ளே சென்றான். அங்கிருந்தவரிடம் விவரத்தை சொன்னபின் அவர் சொன்ன விளம்பர விலை இவன் கையில் வைத்திருந்ததைவிட இருபத்தைந்து சதவிகிதம் அதிகமாகதான் இருந்தது.
அப்பா ஏன் பத்திரிக்கையில் போட பிரியப்படுகிறார், சுடலைக்குத் தெரிந்து அந்த ஊரில் அப்படி யாருமே போடுவது வழக்கமில்லை. ஒருமுறை சுடலை வீட்டு வராண்டாவில் விளையாடிக்கொண்டிருந்த நேரம் வெற்றிலைக்கான புகையிலை வாங்கி வந்த பொட்டலத்தில் இருந்த பழைய செய்தித்தாளை பார்த்துக்கொண்டே தென்னைக்கு உரமேற்ற குழி தோண்டிக்கொண்டிருந்த அப்பாவிடம், இதற்கெல்லாம் ரொம்ப காசு கேப்பானுகளோ?, என்று செய்தித்தாளில் இருந்த யாரோ ஒருவரின் மரண அறிவிப்பை பார்த்துக்கொண்டே கேட்டார். அப்பாவும் பெரிய சிரத்தையில்லாமல், ஆமா… கொஞ்சம் கேப்பானுவ, என்றார். போட்டு எதுக்கு? யாருக்காக?, என அப்பா முணுமுணுத்ததும் நினைவுக்கு வந்தது. ஒருவேளை தாத்தாவின் ஆகப்பெரிய கடைசி கனவாக தன் புகைப்படமும் பெயரும் மரணத்துக்குப் பின் செய்தித்தாளில் வரவேண்டும் என்பதாகவே இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் ஏன் அந்த செய்தித்தாளின் கிழிந்த துண்டை கூரையின் இடையில் திருகி வைத்துக்கொண்டார்.
இப்படிச் செய்வதால் சுற்றியிருக்கும் பத்தோ பதினைந்தோ கிராமங்களைத் தாண்டி எங்குமே செல்லாத, யாரையுமே தெரியாத, எந்த சொந்த பந்தமும் இல்லாத, தாத்தாவை யார் அடையாளம் காண்பார்கள். அப்படி பார்த்து ஒருவர்கூட வருவார் என நம்பிக்கை சுடலைக்கு ஒரு துளி கூட கிடையாது. இதைவிட பெரிய விஷயம் இவர்கள் வீட்டில்கூட செய்தித்தாள் வரவழைப்பதும் இல்லை. ஏன் பக்கத்து வீடுகளிலும் இதே தான் நிலை.
அப்பாவுக்கு ஆங்கிலமும் தெரியாது. தமிழும் தட்டுத் தடுமாறிதான் வாசிப்பார். தாத்தாவுக்கு ஒரு எழுத்தாவது தெரியுமா என்பது சந்தேகம். அப்படியிருந்தும் ஏன் இதற்கு விருப்பப்படுகின்றனர். சந்தேகத்துடனே இவன் அடுத்திருந்த பத்திரிக்கை அலுவலகத்தில் நுழைந்துவிட்டான்.
அங்கிருந்தவர் என்ன என்பது போல் தலையை மட்டுமே ஆட்டிக் கேட்டார். இவன், செத்த செய்தி போடணும், என்றான். அவர் மெதுவாக எழுந்து வெளியே சென்று வாயில் இருந்த வெற்றிலையை துப்பினார். நெருங்கி அருகில் வந்து தோளில் கைவைத்து உட்காரச் சொன்னார்.
பெயர், விலாசம், வயது போன்ற தகவல்களை கேட்கத்தொடங்கினார். சுடலைக்கு பயம் வந்துவிட்டது. வெருக்கென எழுந்தவன், எவ்வளவு ஆகும், எனக் கேட்டான். அவர் பதிலே சொல்லாமல் அமரச் சொன்னார், சைகையில். தயக்கத்துடனே இரும்பு நாற்காலியில் மீண்டும் அமர்ந்தான். அவர் கையை நீட்டி வாயைக் குவித்து தலையை கொஞ்சம் மேலாக தூக்கிக்கொண்டு, போட்டோ இருக்கா?, என்றார்.
இவன் கையில் இருந்த போட்டோவை நீட்டினான். அவர் அந்த போட்டோவை பார்த்துவிட்டு, தாத்தா உன்னை போலதான், என்றார். பின் மெதுவாக உள்ளறைக்கு எழுந்து நடந்தார். சுடலை அறையின் சுற்றும் முற்றும் தெளிவாக பார்த்தான். அங்கு கிடந்த பத்திரிக்கைகள், படங்கள் எதிலும் தமிழ் எழுத்தே இல்லை. அவனுக்கு அப்போதுதான் உறைக்கத்தொடங்கியது அது மலையாள பத்திரிக்கை விளம்பர அலுவலகம் என்று. என்ன செய்வது என்று நினைக்கும்போதே அவர் வந்து போட்டோவைத் திருப்பி கையில் கொடுத்துவிட்டு கிளம்பச் சொன்னார். நாளைய பத்திரிக்கையில் செய்தி வரும் என்றவர் மீண்டும் வெற்றிலை துப்ப வெளியே சென்றார். அவர் உள்ளே வரும்வரை காத்திருந்துவிட்டு, காசு எவ்வளவு, எனக் கேட்டான். இதற்கு இலவசம் தானே, அவர் சாவதானமாகச் சொல்லிவிட்டு மீண்டும் உள்ளறைக்கு திரும்பினார்.
சுடலைக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. நாளைக்கு மலையாள பத்திரிக்கைகள் உலகம் முழுவதும் சென்று தாத்தாவின் இறந்த செய்தியை அறிவிக்கும். மரண செய்தி கேட்டு பல பேர் நிச்சயம் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் ரோட்டை கடந்து நடக்கத்தொடங்கினான்.
**********************************************************
இக்கதை இணைய இதழில் சிறந்த கதை என தெரிவுச்செய்யப்பட்டு        தனித்தன்மையுடன்கூடிய இணைய பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.   https://padhaakai.com/2018/03/10/burying-memories/
இதேபோல் பலரது சிறந்த கதைகளை படிக்க பதாகை  இணையத்தளத்தை பார்வையிடவும்.