Wednesday, 22 April 2015

கோயிலுக்குள் நுழையாதே - புத்தக விமர்சனம்

                                தென்னிந்தியா சமூக வரலாற்றின் பக்கங்களில் உள்ள பல தெரியாத நிஜங்களை புரியவைக்கவே எழுதப்பட்ட ஒரு நூல் என்பதை ஆசிரியர் முதலிலேயே தெரியப்படுத்துகிறார். இன்றைய காலகட்டத்தில் பல வரலாற்று நிகழ்வுகளை தங்களுக்கு சாதகமாக வளைத்தும், இல்லாததை வரலாற்றில் இருப்பதாகவும் சொல்லித் திரியும் அனைத்து சமூக விரோதக் கும்பல்களுக்கும் இந்நூல் ஒரு சம்மட்டியடி என்றால் பொய்யல்ல.

                           இந்நூல் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி (கௌமுதி) என்ற ஒரு ஊரில் நடந்த சம்பவத்தையும் அதன் மூலம் ஏற்பட்ட இருசாரார்க்கான பிரச்சனைகளையும் பற்றிதான் சொல்கிறது. அதேநேரம் அந்தப் பிரச்சனைகளின் மூலச்சரடையும், அதன் பின் தொடர்ச்சியாக நடந்த நீதிமன்ற வழக்கின் சாராம்சத்தையும் ஆண்டுவாரியாக, நாள் வாரியாக முழுமையாக ஒரு வழக்கின் மொத்த நிகழ்ச்சிகளையும் தெளிவுபட அனைத்து வாதி, பிரதிவாதிகளின் வாக்குமூலங்கள் அதற்கு அப்போதைய நீதியரசர் வழங்கிய தீர்ப்புகள் மற்றும் அந்தத் தீர்ப்புகளின் நுண்ணரசியல் என ஒவ்வொரு விடயத்தையும் அலசி ஆராய்ந்து நடுநிலைமையுடன் எழுதப்பட்ட ஒரு புத்தகம்தான் இது.

                         அதிலும் இப்போது தமிழ்நாட்டில் நிலவிவரும் சில பல எழுத்தாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் பிரச்சனைகளை நினைக்கையில் இவ்வாசிரியர் எந்தவொரு நிகழ்ச்சியையும் மறைக்காமல் வரலாற்று எழுத்தாளன் கடைப்பிடிக்க வேண்டிய அத்தனை நேர்மையையும், அதற்கான பெரியதொரு ஆதாரங்களையும் திரட்டி எழுதியிருப்பது பாராட்ட வேண்டிய விஷயம்தான். நம் நாட்டில் நம்மைப் பற்றி வேற்று நாட்டு ஆங்கிலேயன் எழுதுவதுதான் உண்மை என்று நம்பித் திரியும் இன்றைய சமூகத்தின் முன் நம் நாட்டில் இருக்கும் இது போன்ற ஆசிரியர்களின் முயற்சி மனமுவந்து பாராட்டுக்குரியதே.

                        இந்நூல் கமுதி என்ற ஊரில் இருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குள் சான்றோர் அல்லது நாடார் எனப்படும் சமூகத்தினர் நுழைந்து வழிபடுவதை தடுக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மொத்த விவரம், அதற்கு மதுரை சார் நீதிமன்றத்தில் 1899-ஆம் ஆண்டு நீதிபதி டி. வரதராவ் அவர்கள் வழங்கிய தீர்ப்பு ஆகியவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். அந்த ஊரில் இருந்த தேவர்கள் மற்றும் சான்றோர் மக்களிடையே இருந்த ஒற்றுமையையும் பின்னர் வந்த சிறு உரசலை வைத்து சென்னை உயர்நீதிமன்ற ஆங்கிலேய நீதிபதிகள் எப்படி பிளவை பெரிதுபடுத்தினர் என்பதை இந்நூல் நமக்கு விலாவாரியாக புரியவைக்கிறது. அதேபோல் மதமாற்றத்துக்கு இதைப் போன்ற பல சூழ்நிலைகளை ஐரோப்பியர்கள் எப்படி தமதாக்கி மதமாற்ற அறுவடையை திறம்படச் செய்தனர் என்பதையும் அறிய முடிகிறது.

                          ஒவ்வொரு சாதி மக்களின் பலதரப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் மூலம் நமக்கு அந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு சாதி மக்களின் தினசரி வாழ்க்கை முறை, அவர்களின் சம்பிரதாயங்கள், சடங்குகள் மற்றும் ஊர் மரியாதை மற்றும் வன்முறைகளையும் புரிய முடிகிறது. இன்று தென் இந்தியாவில் மிக பெரும்பான்மையான நாடார் சமூகத்தினர் திட்டமிட்டு மதம் மாற்றப்பட்டனர் என்பதும் அவர்கள் தங்களின் முன்னோர்களின் பெருமைகளை அறியவே முற்படவில்லை என்பதும் இப்புத்தகத்தில் நூற்றுக்கணக்கான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

                       இன்று அரசியல் ஆதாயம் தேட பலர் சொல்லித் திரிவதைப் போல சான்றோர் சமூகத்தினரை கோயிலுக்குள் நுழைய அனுமதி கொடுக்கப்படவில்லை என்பது முழுப் பொய் என்பதை ஆசிரியர் மிக பலமான உண்மையான ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார். கி.பி. 13 ஆம் நூற்றாண்டிலேயே திருச்செந்தூர் பகுதியில் மிகப்பெரிய மளிகை வணிகக் கிடங்குகள் வைத்திருந்து ஏற்றுமதியிலும் உள்நாட்டு வணிகத்திலும் சான்றோர்கள் ஈடுபட்டிருந்தனர் என்பதைப் போன்ற பல தகவல்கள் இதில் கூறப்பட்டுள்ளது. நாயக்கர் ஆட்சியின் வரவினால் அக்காலத்தில் அரசியல் அதிகாரத்தை சான்றோர் இழந்தனர். அதேபோல் அந்நேரம் வேறு சமூகத்தினர் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் கட்டமைத்துக் கொள்ளத் தொடங்கினர். அதை முறியடிக்கவும் தங்களின் சமய அந்தஸ்தினை மீட்டெடுக்க நடந்த முயற்சியினையும் ஒப்பிட்டு நோக்கும்போது இந்த கோயில் நுழைவு விவகாரம் சற்றென நமக்கு விளங்கிவிடுகிறது.

                        1870 ஆம் ஆண்டிலேயே விருதுநகரில் சத்திரிய பானு வித்யாசாலா என்ற பள்ளியை சான்றோர் சமூகத்தினர் நடத்தி வந்தனர் என்பதும் அப்பள்ளியில் அனைத்து சமூகத்து மாணவரும் படித்து வந்தனர் என்பதும் நாம் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கிய தகவல். சான்றோர் சாதியினரைப் பார்த்தாலே தீட்டு என்று வேற்று சமூகத்தினர் ஒதுக்கி வைத்திருந்தனர் என்பது எவ்வளவு பெரிய பொய் என்பதும் அப்படி ஒரு வழக்கம் இருந்திருந்தால் இப்பள்ளியில் எப்படி மற்ற சமூகத்து மக்கள் பிள்ளைகளை அனுப்பினர் என்பதும் யோசிக்கவேண்டிய விடயம்தானே? கண்டாலே தீட்டு என்ற நிலையில் சான்றோர் மக்கள் இருந்தனர் என்றால் எப்படி இவ்வளவு பெரிய பொருளாதார வசதியுடன் இவர்கள் இருந்திருப்பார்கள் என்ற கேள்வியையும் அதற்கான பல தரவுகளுடன் கூடிய விடையையும் இந்நூல் சொல்கிறது.

                    அதேநேரம் இந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பில் நாயன்மார்களின் சாதிகள் விஷயத்தில் பிராமணர், சத்திரியர், வைசியர் மற்றும் வேளாளர் என்ற பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும்கூட தமிழகத்தில் நான்கு வர்ணங்கள் இருந்ததை உறுதிபடுத்துகிறது. இதேபோல் பண்டைய இந்தியாவில் திராவிடம் வேறாகவும் சேர தேசம், சோழ தேசம் மற்றும் பாண்டிய தேசம் ஆகியன வெவ்வேறாகவும் இருந்தன என்பது போன்ற தகவல் புதியதாகவே உள்ளது. கால்டுவெல் போன்றவர்கள் அவர்கள் அறிந்த சில விஷயங்களையும், புரிந்துகொண்ட சில பல தகவல்களையும் முன்வைத்து சில முடிவுகளை அலசி ஆராயாமல் எழுதியுள்ளனர் என்பதும் புலனாகிறது. திருமணம் போன்ற சான்றோர்களின் நிகழ்வுகளின்போது பல்லக்கு பவனி வருவதும் அவர்களின் பல்லக்கை மறவர்கள் சுமப்பதும் வழக்கம் என்பதும் அது ஒரு சடங்காகவும் இருந்ததையும், அது இரு சமூகத்தினர் அங்கீகரித்த ஒரு செயல் என்பதோடு மட்டுமில்லாமல் இரு வேறு சமூகத்தினரின் அந்நியோன்யமான ஒரு வாழ்க்கை முறையும் அந்த ஊர் மக்களுக்கிடையில் இருந்ததையும் தெளிவாகச் சொல்கிறது.

                        சான்றோர்கள் தங்களை சத்திரியர்கள் என்று கூறிக்கொண்டதையும் அதை வேற்று சமூகத்தினர் அங்கீகரித்தும் இருந்தனர் என்பது, இவர்கள் மிகவும் கவுரவமாகவும் மரியாதையுடனும்தான் இருந்தனர் என்பற்கு எடுத்துக்காட்டாகும். அதேபோல் பிராமண புரோகிதர்கள் நாடார்களின் சுப-அசுபச் சடங்குகளை நிகழ்த்தி வைப்பதும் அப்போது வழக்கத்தில் இருந்ததையும் பலரது வாக்குமூலங்கள் தெளிவாக்குகின்றன. மிகச் சிறந்த அமைப்பாகும் திறன் கொண்ட சான்றோர் சமூகத்தினரும், உயிருக்கு அஞ்சாத போர்க்குணம் கொண்ட மறவர்களும் ஒரு அணியில் இருந்தால் வருங்காலத்தில் தங்களுக்கு அது பெரிய தொல்லையாக மாறும் என்பதை சரியாக கணித்து ஒரு பதற்றமான சூழ்நிலைகளை உருவாக்கி வைத்துக்கொண்டு இரு சமூகத்தினரையும் வேறுபடுத்தினர் ஆங்கிலேயர்கள்.

                         சிவகாசியிலும் இந்த சமகாலத்தில் சான்றோர் சமூகத்துக்கு எதிராக மறவர் சமூகத்தினர் மிகப்பெரும் தாக்குதல் நடத்தினர் என்பதும் அந்நேரத்தில் ஏற்பட்ட ஒரு சமூக ஸ்திரமின்மையை கோடிட்டுக் காட்டுகிறது. இதன் பின்னால் இருந்த பல சூழ்ச்சிக்காரர்களைப் பற்றியும் இந்நூல் விவரிக்கிறது. செட்டியார் சாதி, பிராமண சாதி, மற்றும் பல சாதி மக்களின் வாக்குமூலங்கள் என இந்நூலில் பல அரிய உண்மைத் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. பத்ரகாளியம்மன் சத்ரியர்களின் கடவுளாகும். சான்றோர் சமூகத்தவரை காளி புத்திரர்களாக வலங்கைமாலைக் குறிப்பிடுகிறது போன்ற அனைத்துத் தகவல்களையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

                       இந்த வழக்கு நடைபெற்றபோது மற்ற மாவட்டங்களில் நாடார் சமூகத்தினர் வாழ்ந்த விதம், அவ்வூரில் இருந்த நடைமுறைகள் மற்றும் இந்து மக்களின் வரலாறு, சாதி அடுக்கின் நிலைப்பாடுகள் என பலதரப்பட்ட ஆய்வறிக்கைகளும் இதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. பல கோயில்களில் இருந்த நடைமுறைகள், பூஜை முறைகள், அதை செயல்படுத்தும் உரிமை கொண்ட சாதிகள் மற்றும் வேறுவேறு மாவட்டங்களில் இருந்த வித்தியாசமான பழக்கங்கள் மற்றும் சாதி மக்களின் முன்னுரிமைகள் என பல விடயங்களை ஒரே புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். ஆதலால் மிக அதிகமான தகவல் நிரம்பி வழிவது நமக்கு நினைவில் வைத்துக்கொள்ள கொஞ்சம் சிரமமாகவே உள்ளது.

                          இதை ஒரு புத்தகம் என்ற முறையில் வாசிப்பதை விட அக்காலகட்டத்தின் கண்ணாடி என்ற முறையில் ஒவ்வொரு பக்கத்தையும் நிதானமாகப் புரிந்து யோசித்து வாசிக்க வேண்டிய தேவை உள்ளது என்பதே உண்மை. இப்புத்தகத்தை எழுதுவதற்கு ஆசிரியர் எவ்வளவு தகவல்களைச் சேகரித்து இருப்பார் என்பதை நினைக்கும்போது மலைப்பாகவே உள்ளது. ஆனால் அதை மிக நேர்த்தியாக நமக்கு வழங்குவதற்கு எடுத்திருக்கின்ற சீரிய முயற்சியும் இப்புத்தகத்தில் தெளிவாகக் காண முடிகிறது. இதேபோல் இன்னும் பல புத்தகங்கள் வரவேண்டும் என்பதே நமது விருப்பமாகும்.

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0000-808-3.html
ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234