Thursday 7 May 2015

பாலித்தீவு – இந்துத் தொன்மங்களை நோக்கி…- புத்தக விமர்சனம்

                           ஈழத் தமிழரான கானா பிரபா ஆஸ்திரேலியாவில் வசிப்பவர். அவரது பயண அனுபவமே பல கட்டுரைகளாக இச்சிறு புத்தகத்தில் விரிகிறது. பொதுவாக நல்லதொரு பயணக்கட்டுரை தொகுப்பு தமிழில் வருவது மிக குறைவு என்பது ஒரு குறையாகதான் இருந்து வருகிறது. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பன்னிரண்டு தொடர் உலா கட்டுரைகள், இந்தோனேசியா என்ற நாட்டில் இருக்கும், பழைய இந்து கலாச்சாரங்கள் மற்றும் தொன்மங்களால் நிறைந்திருக்கும் அழகிய தீவான பாலியை பற்றியவை.
                    இந்தப் புத்தகத்தை முதலில் கையில் எடுத்தவுடன் நமக்கு ஆச்சரியத்தை நல்குவது அதன் வடிவமைப்பு மற்றும் தாள்களின் மேன்மையான தரம். இந்தப் புத்தகத்தில் மொத்தம் 150-க்கும் குறைவான பக்கங்களே உள்ளன. ஆனால் ஒவ்வொரு பக்கத்திலும் கொடுக்கப்பட்டுள்ள ஒளிப்படங்கள் நம்மை நேராகத் தூக்கிக்கொண்டு போய் அத்தேசத்தில் உலவ விடுகின்றன. மிக மிக உணர்வுப்பூர்வமான ஒரு புத்தகமாக இதை மாற்றியதில் புகைப்படங்களுக்கு மேலான பங்கு உள்ளதை இப்புத்தகத்தை காணும் யாரும் மறுக்க முடியாது. அதேப்போல் சில நொடியேனும் கனவுகள் போல் இப்படங்கள் ஒவ்வொன்றும் விரிவதையும் யாராலும் நிறுத்த முடியாது.
                      இந்தோனேசியா என்ற ஓர் இஸ்லாமிய தேசத்தில் இருக்கும் ஒரு மாநிலம் தான் பாலித்தீவு. இதன் தலைநகரமாக Denpasar என்ற ஒரு ஊர் இருக்கிறது. அங்கு செல்லவேண்டுமானால் செய்துகொள்ளவேண்டிய நடைமுறைகள், சட்டதிட்டங்கள் மற்றும் பயண விவரங்களுடன் மிக எளிதாகக் கட்டுரையை ஆரம்பிக்கின்றார் ஆசிரியர். போகப்போக விறுவிறுப்புடன் அவரது பயண சாகச அனுபங்களை மிகச் சரியான எடுத்துக்காட்டுகளுடன் கோர்வையாகத் தந்து நம்மையும் அவருடன் கையிழுத்துக் கூட்டிச்சென்று அவர் அனுபவித்த இன்பத்தை நமக்கும் தருகிறார்.

                          பாலித்தீவு என்ற பெயரே மகாபலி என்ற இந்தியக் கதையில் வரும் அசுரனின் பெயருடன் தொடர்புடையது என்ற தகவலுடன் தமிழர்கள் பெருமைகொள்ளும் விதம் நம் முன்னோர்கள் அங்கு ஆண்ட நாட்களை ஆண்டு வாரியாக, அரசர்களின் பெயர் வாரியாகத் தந்துள்ளார் ஆசிரியர். அத்தேசம் நம் மூதாதையர்கள் ஆண்ட தேசம் என்பதே நம்மை மிகவும் கர்வம் கொள்ள வைக்கிறது. அதனூடே அங்கு கட்டப்பட்டுள்ள கோயில்களும் நம்மவர்கள் கட்டியது என்பது நமக்கு மேலும் பெருமை கொள்ளச் செய்வதாகவும், வியப்பில் ஆழ்த்துவதாகவும் உள்ளது என்பது உண்மை. அப்பிரதேசத்தில் இன்றும் சூட்டப்படும் பெயர்கள் தமிழ் மொழியை சார்ந்துள்ளதையும் அதற்குப் பல எடுத்துக்காட்டுகளையும் எடுத்தியம்பி உள்ளார் ஆசிரியர். அதேபோல் தமிழ்த் திரைப்படங்களும் ஒரு காலத்தில் அங்கு திரையிடப்பட்டன போன்ற தகவல்கள் வரை பலர் அறியாத நிறைய சுவையான தகவல்களை பிரபா பதிவு செய்துள்ளார்.
                                 அங்கு இந்து கலாச்சாரம் வேரூன்றி உள்ளதையும், இப்போதும் மகாபாரதம் மற்றும் இராமாயணக் கதைகள் நடித்து காட்டப்படுவதையும், மக்களின் இந்து மத நம்பிக்கைகளின் ஆழத்தையும் மிகத்தெளிவாகத் தந்துள்ளார். அவர் அங்கு கண்டு களித்து, ஆச்சரியமாக ரசித்துப் போய் வந்த பலப்பல கோயில்களின் வரலாறு மற்றும் அதிசயங்களைப் பட்டியல் இட்டுள்ளார். அதே போல அங்கு அவர் போன சரணாலயங்கள் மற்றும் கடற்கரைகளைப் பற்றியும் பதிவு செய்துள்ளார்.
                            இந்த பாலித்தீவின் கலாச்சார இடமாகவும் மிக அதிகமான வரலாற்று பின்புலம் கொண்ட UBUD என்ற இடத்தை பற்றி அவ்வளவு தகவல்களை தந்து நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகிறார் ஆசிரியர். அதேபோல் இவ்விடங்களைப் பற்றி வேற்று தேசத்தவர் எழுதிய புத்தகங்களையும் அதன் சிறப்புகளையும் நமக்கு இடையிடையே சொல்லிக்கொண்டே செல்கிறார். அங்கு இருக்கும் சிவன் கோவில், விஷ்ணு கோயில், சரஸ்வதி கோயில், தண்ணீர் கோயில், யானை குகை கோயில் மற்றும் கடலினுள் இருக்கும் Tanah lot என்ற பெயர் கொண்ட கோயில் எனப் பல கோயில்களின் அமைப்பு மற்றும் கட்டடக் கலையைப் பற்றியும் மிக செறிவான விளக்கத்தை படிக்கும் அனைவரும் புரிந்துக்கொள்ளும் வண்ணம் தந்துள்ளார். அங்கு செல்பவர்கள் வாங்கி வரவேண்டிய கலைப்பொருட்கள் மற்றும் அவை வாங்கவேண்டிய இடங்கள் மற்றும் உணவு விடுதிகளின் தரம் மற்றும் சேவைகள் என ஒரு வாசகன் மற்றும் சுற்றுலா செல்ல விழைபவர் எதிர்நோக்கும் அத்தனை தகவல்களையும் ஒருங்கே தெளிவாக தந்துள்ளார் ஆசிரியர். அதேபோல் ஆசிரியர் சந்தித்த பிரச்சனை மற்றும் அதைத் தீர்க்கும் எளிதான வழிமுறைகளையும் இப்புத்தகத்திலேயே கூறியுள்ளார் ஆசிரியர். இதேப்போல் இன்னும் பல உலாத்தல் கட்டுரைகள் அடங்கிய புத்தகங்கள் நிறைய தமிழில் வெளிவர வேண்டும் என்றே இதைப் படிக்கும் அனைவரும் விரும்புவர். அத்தகைய சிறப்பானதொரு புத்தகமாகவே இது வெளிவந்துள்ளது. இந்த புத்தகத்தையே இதே போன்று எதிர்காலத்தில் வெளிவரும் பயணக்கட்டுரை புத்தகங்களின் தரச்சான்றின் குறியீடாக கொள்ளலாம் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0002-466-8.html
போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234