Tuesday 30 September 2014

மனித உணர்வு

                                      மனித உணர்வு


                          உணர்வு என்ற சொல் எங்கேயாவது பார்த்தாலோ கேட்டாலோ கூட மனித மனம் உடனே உடல் சார்ந்தே அதை பொருட்படுத்தி பார்க்கிறது அல்லது யோசிக்கிறது. இதில் காதல் ,காமம் என்ற உணர்வுகள் தான் பல மனங்கள் எப்போதும் அசைபோடும். இந்த உணர்வுகள் ஏன் வந்து பலபேர்களின் வாழக்கையை புரட்டிப்போட்டுவிட்டு செல்கிறது என்று பல பேர் பல நேரங்களில் யோசித்ததுண்டு.ஏன் அதோடு நில்லாமல் பல அழகான, அன்பான மனிதர்களை கல்லறைக்கும் அனுப்பிய பெருமை உள்ள உணர்வுகள் இவைத்தான். கமல்ஹாசன் ஒரு பாடலில் இதை அழகாக பதிவு செய்திருப்பார் . “காதல் ஒன்னும் கடவுள் இல்லையடா, இந்த எழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா” என்று. ஆனாலும் யாரும் அதை நம்பவும் அதை உட்கொள்ளவும் தயாராக இல்லை.ஏன் என்றால் அதை இப்போதும் பலபேர் தெய்வீகத்துடன் ஒப்பிடுகின்றனர். அது அப்படிப்பட்டதா என்று இப்போது பல ஆராயிச்சிகள் செய்து ஒரு தெளிவான முடிவுக்கு மருத்துவ உலகம் வந்துள்ளது. ஏன் இப்படி மனித மனம் ஒரு வித பதற்றத்துடன் இதை கைக்கொள்ளுகிறது என்றும் ஆராய்ந்து முடிவுகளை கண்டறிந்துள்ளனர்.

                                                   
                                      தனியாக மனித உடலில் உள்ள இரசாயன சுரப்பிகள் பல விதமான இராசயனங்களை பல நேரங்களில் சுரக்கின்றது.அது மனிதன் உண்ணுகின்ற உணவை செரிமானம் செய்ய வைப்பது முதல்  உடலில் ஏற்படுகின்ற காயங்களை செரி செய்வது வரையான பல செயல்களை மனிதனின் மனம் கூட அறியாவண்ணம் செவ்வனே செய்து கொண்டிருக்கிறது. இதேப்போன்றதொரு சுரப்பிகள் சுரக்கின்ற ஒருவித இரசாயனம் தான் “ஓக்ஸ்ஸிடோசின்” மற்றும் “டோபமைன்”.  இதை மருத்துவ விஞ்ஞானிகள் இப்போது தனித்தனியாக பிரித்து எடுத்துள்ளனர் .இந்த இரு மூலக்கூறின்/இரசாயனத்தின் வேலைகள் சிறிது அல்ல. 


                           இந்த இரு மூலக்கூறு தான் மனிதனை காமப்பார்வை வீச வைப்பதும், காம களியாட்டங்கள் செய்ய தூண்டுவதும்,பங்காளியிடம் நம்பிக்கையுடன் நடந்து கொள்வதற்கும் , சில பல நேரங்களில் அடி ஆழ மனதில் ஒரு அழகான காதலை அல்லது ஒரு வித பாசத்துடனான நட்பை கூட தூண்ட செய்கிறது.இதை விட பயங்கரமான ஒரு வித காம தாபத்தையும் , ஒரு வித ஆக்ரோஷமான அல்லது ஒரு பெண்/ஆணை அடைய வேண்டும் என்றும் புணர வேண்டும் என்றும் ஒரு விதமான அடங்கா தேடலையும் கொள்ள செய்வது இந்த மூலக்கூறுகள் தான்.இந்த மூலக்கூறை 1990-ஆம் ஆண்டு வாக்கில் கண்டுப்பிடித்து விட்டனர்.ஆனால் அப்போது இது தாய்மை உணர்வை தூண்டக்கூடிய ஒரு இரசாயனம் தான் என்று கணித்தனர். ஆனால் இப்போது அதை பற்றிய விரிவான ஆராய்ச்சிகளின் பயனாக இந்த தகவல்கள் வெளிப்பட்டுள்ளது.


                            இப்போது இதை கண்டுபிடித்ததற்கு அவர்களை பாராட்டுவதைவிட திட்டுவதே செரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் . ஏன் என்றால் இனி காதலர்கள் தெய்வீக காதல் என பொய் சொல்லவும் முடியாது. ஏன் என்றால் தெளிவான ,விவரமான “யோக்கியர்கள்” உனக்கு “ஓக்ஸ்ஸிடோசின்” கொஞ்சம் அதிகமா சொரக்குது கொஞ்சம் நல்ல டாக்டரா பார்த்து கட்டுப்பெடுத்த ஊசி போட்டுக்கோ அப்படின்னு சொல்ல போகிறார்கள்.

                      
                                                       இதை இனி மாத்திரை போட்டு விற்பார்கள்.     பல கணவன்மார்கள், மனைவிகள் மற்றும் காதலர்கள் இதை வாங்கி தின்னவும் செய்வார்கள் இன்னும் சில வருடங்களில். இனி பல பல உணர்வுகளுக்கும் தனி தனியாக மாத்திரைகள் விற்பனைக்கு வரும். எந்த உணர்வு கொஞ்சம் கம்மியாக இருப்பதாக உணர்கிறோமோ அதை வாங்கி வைத்துக்கொண்டால் போதுமானது.அப்போதும் சூடு , சொரனைக்கென்று மாத்திரை வருமோ என்னமோ. ஏன் என்றால் பல “அரசியல்வியாதிகளுக்கு” அதை கலக்கி கொடுத்தாவது நம் நாட்டை நன்றாக்கி விடலாம் என்ற பேராசை தான் மனதில்... 

Monday 15 September 2014

கலைகின்ற கனவுகள் – I

                                                                  கலைகின்ற கனவுகள் – I

                                     எவ்வளவு ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் நாம் ஒவ்வொருவரும் வாழ எத்தனித்து கொண்டே இருக்கிறோம். ஒரு கனவு கலைவது என்பது எவ்வளவு பெரிய வலிகளை நமக்கு தருகிறது. நம் கனவுகள் பெரும்பாலும் தன்னலம் சார்ந்ததாக மட்டும் இருப்பதில்லை.


                                              நம்முடைய கனவுகளில் அல்லது எண்ணங்களில் நமது சுற்றத்தார் அல்லது நமக்கு மிகவும் பிரியமானவர்களுடன் ஒரு வாழ்கையை அந்த கனவுகளுடன் பயணப்பட முற்படுகிறோம். ஆனால் அது உடைந்து நம்மையும் நம் கனவுகளுடன் சேர்ந்து பயணிப்பவர்களையும் திசை மாற்றி செல்ல வைக்கிறது என்பது மிக பெரிய வேதனை என்பது ஒரு எலி கூண்டுக்குள் அகப்பட்டுக்கொண்டு விடுபட எத்தனிப்பதை போன்றது என்றே கருத தோன்றுகிறது.சில கனவுகள் சிதையும்போது ஒரு தலைமுறையே கருகும் பிளாஸ்டிக் பைகளை போல படராமல் இருக்க ஒரு வித வேதனையுடன் சகித்து ஜீரணிக்க முற்படுகிறோம். ஆனால் சில கனவுகள் உடைந்தால் பின் அதை யாதொரு காலத்திலும் அதை திரும்ப பெறுவதற்க்கான வாய்ப்புகள் இல்லாமலேயே மனித வாழ்க்கை முடிந்து போவது நிச்சயம் ஒரு மனமரணம் தான்..


                                                                        வண்டி

                                         ஒரு குழந்தை வளரத்தொடங்குவது முதல் வாகனங்கள் அல்லது வண்டிகள் ஒரு பிரமிப்பூட்டும் ஆச்சரியமாக தான் இருக்கிறது.ஒரு பெரிய வாகனம் ஒரு அழகு தான். ஒரு மனிதனின் வாழ்கையை ஒரு வாகனம் எவ்வளவு கச்சிதமாக மாற்றி விடுகிறது. ஒரு பேருந்தையோ, ஒரு வேனையோ , ஒரு ஷேர் ஆட்டோவையோ, ஒரு லாரியையோ வைத்துக்கொண்டு ஒரு குடும்பத்தை மிகவும் அழகாக நகர்த்திக்கொண்டு செல்லும் எத்தனை அப்பாக்கள் இன்று நம்மிடையே இருக்கின்றனர். எத்தனை குழந்தைகள் அப்பாக்களின் அந்த அழகிய வாகனங்களில் ஒரு வித ஆசை , சந்தோஷத்துடன் ஏறி அமர்ந்து செல்கின்றனர். எத்தனை மனைவிமார்கள் தங்கள் கனவுகளை அந்த ஒரு வாகனத்துடன் இணைத்துப்பார்க்கின்றனர். ஒரு வாகனம் வைத்திருக்கும் ஒரு அப்பாவுக்கு அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துக்கொண்டு தன் மகள் ,மகன்களின் படிப்பு மற்றும் உணவு உடைகளுக்கு வசதி ஏற்படுத்த பாடுபடுகின்றனர் .அதில் கிடைக்கும் வருமானத்தை சிறுக சேமித்தும் அதை நம்பியும் தான் பல குடும்பங்களுக்கு பல கனவுகள் மெய்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பது உண்மையே. ஒரு பெண் பிள்ளையின் கல்யாண கனவுகள் , ஒரு வயதான அப்பா , அம்மாக்களின் மருத்துவ செலவுகள் என அனைத்தையும் ஒரு வாகனத்தை வைத்துக்கொண்டு நிறைவேற்றும் எத்தனை அப்பாக்கள் இங்கு இருகின்றனர்.எத்தனை தங்கைகளின் தம்பிகளின் வாழ்கையை அண்ணன்கள் ஒரு வாகனத்துடன் பூர்த்திப்பெற வைக்க உழைகின்றனர். எத்தனை சிரமங்களின் இடையில் இன்று ஒரு வண்டி மட்டுமே வைத்துக்கொண்டு எத்தனையோ சாதாரணமானவர்கள் வாழ்க்கையை சாதுரியமாக முன்னெடுத்துச் செல்கின்றனர். 


                                                   எவ்வளவு எதிர்பார்ப்புகளுடன் ஒரு மனிதன் தங்கைகளின், மனைவியின் , பெற்ற தாயின் தாலி மாலையை கழற்றி விற்றோ அடமானம் வைத்தோ, பல தெரிந்த தெரியாத நபர்களிடம் கடன் வாங்கி ஒரு ஆட்டோவோ,லாரியோ,டம்போவோ வாங்குகின்றனர். அதில் நிச்சயம் நேர்த்தியாக வருமானம் வரும் தம் குடும்ப தேவைகள் நிறைவுப்பெறும் வாழ்கையை இனிதாக முன்னெடுத்துச் சென்றுவிடலாம் என்ற கனவுகளுடன் சில பல மனக்கணக்குகள் மற்றும் பணக்கணக்குகளுடன் தான் ஒரு வாகனத்தை ஒரு ஷோவ்ரூமில் இருந்து எடுத்து வருகின்றனர். எத்தனை கடவுள்களுக்கு அர்ச்சனைகள், வழிபாடுகள்,நேர்த்திகடன்கள் என செய்து அந்த வாகனத்தை வீட்டின் முன் கொண்டு நிப்பாட்டும் போது ஒரு குடும்பமே அல்லது ஒரு மனித வாழ்க்கையே அதை ஒரு கடவுளாக ஒரு வரம் தரும் கோயிலாக பார்க்கிறது.எத்தனை எதிர்கால கனவுகள் அந்த சில கணங்களில் அந்த குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினர்க்கும் வந்து போகிறது.

                                                     ஒரு முறை யோசித்து பாருங்கள் மொத்த இந்தியாவில் எத்தனை கோடி வாகனங்கள் அதில் எத்தனை பேர் ஒரே ஒரு வாகனத்தை மட்டும் நம்பி வாழும் மனிதர்கள். எத்தனை குடும்பங்கள் ஒரு வாகனத்தை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்கையை ரசனையுடன் வாழ முற்படுகின்றனர். ஒரு விதமான பிரமிப்பு வராமல் இல்லை.சில பல ஆயிரங்களை மட்டுமே வருமானமாக தரும்  என்று தெரிந்தும் .சொந்த வாகனத்தை வாங்க பல ஓட்டுனர்களும் விரும்புவது தான் யாரிடமும் கைகெட்டி வேலை பார்க்க வேண்டாம் மற்றும் தான் விரும்பும் நேரங்களில் வண்டியை ஓட்டினால் போதும் என்ற சிறு பரவசம் தான். அதேபோல் குறைந்த வருமானம் வந்தாலும் அதில் பாதியை வங்கிகளுக்கு தவணையில் செலுத்திவிட்டு மீதம் உள்ளதை வைத்து ஒரு குடும்பத்தை ஒரு அரசை விட கச்சிதமாக கணக்கீட்டின் மூலம் முன்னெடுத்து செல்கின்றனர்.


                                      ஆனால் என்றும் ஒரு சராசரி மனிதனின் கனவுகள் எளிதாக கைகூடி விடுவதே இல்லை. அந்த கனவுகளின் பயணம் பல நேரங்களில் பல விதங்களில் தடுக்கப்படுகிறது அல்லது உடைக்கப்படுகிறது. ஏதேனும் ஒரு நிர்பந்தத்தால் ஒரு வாகனம் காவல் நிலையத்தில் போய்விட்டது என்றால் அன்று விழுகிறது முதல் அடி. பல காவல் நிலையங்களில் பிச்சைக்காரர்களுக்கு அரசு யூனிபோர்ம் கொடுத்து உட்கார வைத்துள்ள மனித சாக்கடைகள் எந்த தயவு தாட்சண்யம் இல்லாமல் வாகனத்தை திருப்பி கொடுக்க விலை பேசுவார்கள். அதுவும் 100/200 என்ற வார்த்தைகள் அல்ல. சில பல ஆயிரங்களில் தான் அவர்களின் முதல் வார்த்தை ஆரம்பமாகும்.அதுவும் பொய் வழக்குகள் என்றால் அவர்கள் பழத்தில் ஊசியை சொருகுவதை போல் மிகவும் சாதுரியமாக பேசி கறந்து விடுவார்கள் . சின்னஞ்சிறு தவறுகள் நம் பக்கம் இருந்தால் நம் சொத்தை எழுதி வாங்காமல் விடமாட்டார்கள். ஏன் மனைவிகளின் தாலி மாலையுடன் சிறு குழந்தைகளின் இடுப்பு கொடியை வரை விற்றாவது தான் பல வாகனங்கள் காவல் நிலையத்தில் இருந்தும் வெளியே கொண்டுவரப்படுகிறது.


                                            ஒரே ஒரு முறை அந்த வாகனம் உள்ளே சென்று வெளியே வந்தால் அந்த சாதாரணமானவர்களின் கனவுகள் சிறியதாக உடைய தொடங்குகிறது. ஆனாலும் அதில் இருந்து மீண்டு வந்துவிடலாம் என்ற சிறு நம்பிக்கையுடன் தான் கண்ணீருடனும், வேதனையுடனும் திரும்ப பழையபடி வேலையை பார்க்க புறப்படுகின்றனர்.
ஆனால் அந்த பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுக்க வேண்டாம் என்ற மனநிலையில் இருந்தாலும் பல நேரங்களில் அந்த பிச்சைக்கார கூட்டம் வழக்கை காவல் நிலையங்களில் முடிக்க முனையும். அதற்கு தான் ஒவ்வொரு மனிதனும் ஆசையும் படுவான். அதற்கு காரணம் இரண்டு நாள் கழித்து தான் நீதிமன்றத்தில் இருந்து திரும்ப கொண்ட வர முடியும் என்றால் அது மேலும் பல சிக்கல்களை அவர்களுக்கு ஏற்படுத்தும் என்பதை தெரிந்தே இந்த பாவப்பட்டவர்கள் கடன் மற்றும் பண்டப்பாத்திரங்களை விற்றாவது சீக்கிரம் வாகனத்தை வெளியே எடுக்க முற்படுகின்றனர்.


                                          ஆனால் பணம் புரட்ட முடியாமல் போனால் அது தான் அவர்களின் வாழ்வில் ஏற்படும் முதல் கிரகணம் என்றால் அது மிகையல்ல. ஒரு மாதம் அந்த வாகனம் அந்த காவல் நிலையத்தில் இருந்தால் அதற்கு பிறகு எந்தவொரு ஒட்டுனர்க்கும் தன் சொந்த வாகனத்தை அடையாளம் கண்டுபிடிக்கவே தனி சிபிஐ வைக்கவேண்டியது தான் என்பது போய் வந்தவர்களின் கண்ணீர் பதில்கள் .

                                        அங்கே உருகுலைக்கப்பட்டு கிடப்பது அந்த ஒரு வாகன ஓட்டியின் வாகனம் மட்டுமல்ல ஏதோ ஒரு அம்மாவின் தாலி மாலையின் கடைசி கண்ணியும் தான், ஒரு மனைவியின் எதிர்பார்ப்புக்கள் மட்டும் அல்ல அந்த மொத்த குடும்பத்தின் எதிர்காலமே தான். எத்தனை பாவப்பட்டவர்கள் வாழ்கை ஓட்டத்தையே முடித்துள்ளனர் என்பதை அங்கே ஓடாமல் ஒய்ந்து போய் காற்றில்லாமல் நிற்கும் சக்கரங்கள் சொல்லும்...

Monday 1 September 2014

மனித மிருகங்கள்

     மனித மிருகங்கள்  


                             இன்றைய சூழலில் மனிதன் என்ற வார்த்தைக்கு ஒரே பொருள் மிருக குணம் கொண்டலையும் இரண்டு கால் கொண்ட மனம் புழுத்த  பிணங்கள். மனிதநேயம் என்ற வார்த்தைக்கு இனி மனித மனங்களிலோ , இல்லை வார்த்தைகளிலோ கூட இடம் இருக்கும் என்று நம்புவது மிகப்பெரும் கடினம் என்பது இன்றைய தினசரி வாழ்க்கை நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்ற பாடம் என்பது திண்ணம்.

            
                               சகமனிதனை நாம் மனிதனாக பார்க்காவிட்டால் கூட பரவாயில்லை.ஆனால் உயிரும்,உணர்வும் உள்ள ஒரு ஜீவன் என்றாவது எண்ணுவதற்கு ஏன் நம் புத்தியோ இல்லை இதயமோ இடமளிக்கவில்லை என்பது வேதனையிலும் வேதனை தான். மனிதமனங்கள் இன்று மலத்தை விடவும் நாற்றம் அடிக்கும் சாக்கடையாக ஏன் வைத்துக்கொண்டு நடக்கின்றோம் என்று நினைத்து பார்பதற்கு கூட நமக்கு இன்று நேரம் இல்லை. இவ்வளவு பரபரப்பாக எதை தேடி, எதை காப்பாற்ற நாயை விட கேவலமாக அலைந்து திரிந்துக்கொண்டு இருக்கிறோம்.


                          தடுக்கி விழுந்தவனை கைக்கொடுத்து எழுப்பி விடுவதற்கோ , பிழை செய்தவனை அன்புடன் அரவணைத்து ஆதரவு காட்டி திருத்தவோ நாம் இன்று சிறு முயற்சிகள் கூட எடுக்க விருப்பப்படுவதும் இல்லை. நம் முன்னால் ஒருவன் ஓடினால் அவனை தடுக்கி விழவைத்து சிரித்து அவனை வேதனைப்படுத்துவதில் நாம் இன்று மிகவும் ஒற்றுமையுடன் தான் இருக்கின்றோம். இன்றைய நிலையில் நம் அனைவருக்கும் கையில் துப்பாக்கியை தந்து உங்களுக்கு பிடிக்காதவர்களை இந்த ஒருவாரத்தில் கொல்லலாம் என்று அரசாணை பிறப்பித்தல் அடுத்த வாரம் இந்தியாவில் ஒரு மனிதனும் மிஞ்ச மாட்டான் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.


                    ஒரு நிமிடம் மனம் கொண்டு நமக்கு பிடித்தவர்களிடம் பேசவோ , இன்னொருவரின் வேதனையை கேட்டு கண்ணீர் விடவோ இன்று ஒருவருக்கும் நேரமில்லை. அந்த ஒரு நிமிடம் கிடைத்தால் ஒரு வாடிக்கையாளர் முன் குரங்கை போல் வேடிக்கை காட்டி அவனை மடையனாக்கி 5-ரூபாய் சம்பாதிக்க தான் யோசிக்கிறோம். இன்று பணம் என்ற ஒரு விஷயத்திற்காக நாம் நேரடியாக,மறைமுகமாக பலபேரை வேதனை மற்றும் துயரங்களை அனுபவிக்க வைக்கிறோம். பல நேரங்களில் பலரையும் கேவலப்படுத்துகிறோம். பணம் இல்லாதவனை கையால் ஆகாதவன் என்றும், பிச்சைகாரனை போலவும் காத்திருக்க வைத்து வேடிக்கை காட்டுகிறோம்.

                  
                     மற்றொருவர் படும் வேதனை அவர்கள் வாழும் சூழ்நிலை, அவர்களுக்கு வேண்டிய தேவைகள் என எதுவும் நாம் அறியவேண்டிய நிர்பந்தம் இல்லை என்ற ஒரு குறுகிய கண்ணோட்டத்துடன் தான் இன்று நமது வாழ்க்கை அமைத்துக்கொண்டு இருக்கிறோம். அதை தான் பிறருக்கும் போதிக்கிறோம். நமது அடுத்த தலைமுறைக்கும் இந்த விஷ எண்ணங்களை பிஞ்சு மனங்களில் சிறு வயது முதல் ஏற்றுகிறோம். இந்த முற்கால வினைகள் பிற்காலத்தில் திரும்பவும் வரும் என்று யோசிப்பதும் இல்லை. பணம் தான் நீ சம்பாதிக்க வேண்டும் என்றும் நல்ல குணமோ, இரக்ககுணமோ அல்ல என்று சொல்லி வளர்க்கப்படும் ஒவ்வொரு குழந்தையும் எதிர்காலத்தில் உங்கள் உபயோகங்களும் முடிந்த உடன் உங்களையும் அதே போல் குப்பை தொட்டியில் தூக்கி வீசும் என்பதையும் நினைவில் கொள்க.

                            


                              ஒருகாலத்தில் மனித மனங்களில் விரக்தி குறைவாக தான் இருந்தது என்பது உண்மை. இன்று உதவும் குணம் என்பது அரிதாகிவிட்டது . அடுத்தவர் துயர்கண்டு கண்ணீர் விடும் மனங்கள் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு சுருங்கி விட்டது என்பது உண்மையே. இன்று பக்கத்து வீட்டில் நடக்கின்ற துயரங்கள் கூட ஏதோ ஆயிரம் கிலோமீட்டர்க்கு அப்பால் நடந்தை போலவும், அறியாததை போலவும் , அமைதியாக கதவுகளை மூடிவிட்டு உள்ளே சிரித்து விளையாடி கொண்டிருக்கின்றோம். அல்லது அதற்கு முயற்சிக்கின்றோம்.


           

                              சொந்தங்களின் மரணங்கள் , நண்பர்களின் பிரிவுகள் என எதுவும் நம்மை அதிர்ச்சி அடையவோ , வேதனை அடையவோ செய்வதில்லை. அதை பணம் ,அல்லது அவர்களின் அந்தஸ்து தான் தீர்மானிக்கின்றது என்பதை என்னவென்று சொல்வது. பக்கத்து வீட்டில் யாரேனும் இடும் மரண ஓலங்கள் கூட நம்மை அசைப்பது இல்லை. இத்தனை கொடூரமான பிணங்களாக வாழ்ந்து எதை சாதித்து விட்டோம்.

அடுத்தவரின் வேதனைகளை கூட வேடிக்கை பார்ப்பதில் நமக்கு அவ்வளவு ஆர்வம். பத்து குழந்தைகள் ஒரு விபத்தில் சிக்கி கொண்டனர் என்பது இன்று நொறுக்கி தீனி தின்று கொண்டே கேட்டு விட்டு அடுத்த சேனலை சீக்கிரம் மாற்றி திரைபடத்தில் வரும் கற்பழிப்பு காட்சியை ரசனையுடன் பார்க்கும் புண்ணியவான்களாக நாம் மாறிக்கொண்டு இருக்கிறோம் என்பது எவ்வளவு அவலம். அந்த குழந்தைகளின் நிலை என்ன என்றோ அவர்களின் வேதனை என்ன என்றோ நாம் சிந்திப்பதும் இல்லை அதை பற்றி அடுத்தவரிடம் ஒரு மனக்குமுறலை வெளிப்படுத்த உண்டான மனம் கூட நம்மிடம் இல்லை. நமக்கு வரும்வரை அனைத்தும் நமக்கு ஒரு பொழுதுபோக்கு செய்தி மட்டுமே. அதில் வரும் எந்த அதிர்ச்சியோ,வேதனையோ நம்மை எவ்விதத்திலும் சீண்டபோவதே இல்லை என்பது நாம் மனிதர்கள் அல்ல மலங்கள் அல்லது மனித மிருகம் என்று நிரூபிக்கிறது...