Monday, 25 December 2017

சிறுகதை - நாதியற்றவர்கள் ( இணைய மாத இதழில் வெளிவந்தது )

நாதியற்றவர்கள்



                   நாங்கள் பல நாட்கள் அப்பா இரவு பதினோரு மணிக்குப் பின் வந்து சேரும் நேரத்தில் வாங்கி வரும் ஆளுக்கு இரண்டு சோளா பட்டூராதான் எனக்கு மிகவும் பிடித்த ஒரே உணவு . அவர் அந்நேரத்திலும் ஊட்டிக்கூட விடுவார் . என் அப்பாவின் கருணை மற்றும் அன்பைத் தவிர எதுவுமே எனக்கு நினைவில் வருவதேயில்லை, எவ்வளவு யோசித்தாலும். நான் இப்போதும் நம்பத் தயாராக இல்லை, மதராசியில் ஒரு ஆள் எட்டொன்பது மணிநேரம் வேலை செய்தாலே நானூறு ரூபாய் சம்பளம் தருவார்கள் என்று நண்பனின் அப்பா சொன்னதை.
அவரை, போன மாதம் நண்பனை காணச் சென்றபோது, நெடுநாட்களுக்குப் பின் சந்தித்தேன். அப்போதுதான் எனக்கு சைதாப்பேட் என்ற ஒரு வார்த்தை கேள்விப்பட முடிந்தது. மிகவும் வித்தியாசமாக இருந்தது.  எங்கள் ஊர் பெயர்கள் எல்லாம் ஆண்கள் கோபத்துடன் அடிக்கப் பாயும் போது போடும் கூச்சலைப் போல இருக்கும். அதைக் கேட்டு வளர்ந்த எனக்கு ஒரு பெண்ணை ஒரு அம்மா அன்பாகவோ சற்று அதட்டியோ கூப்பிடுவதைப் போன்ற ஒரு பெயராகதான் சைதாப்பேட் என்ற வார்த்தை அவர் சொல்லும்போது தெரிந்தது. பிஜனோர் என்ற ஊரில் தாழ்ந்த சாதியில் நான் பிறந்ததாக ஆ.எம்.மிஸ்ரா என்ற ஆசிரியர் ஒன்றாவது படிக்கும்போது சொன்னது புரியவே எட்டாவது வரை படிக்க வேண்டியிருந்தது.
ஜஸ்ராம் யாதவ் என்றவரிடம் தான் அப்பா வேலை பார்த்துவந்தார்.
முகல்சராய் நிறுத்தத்திலிருந்து மதராஸ் செல்லும் விரைவு ரயில் வண்டி கான்பூர்,ஜான்சி, இட்டார்சி, நாக்பூர், பல்லார்ஷ்ஷாவாராங்கல், விஜயவாடா மார்க்கமாக போவதாகவும், இன்னும் சற்று நேரத்தில்  புறப்படும் எனவும் அம்மாவின் குரலையொத்த ஒரு பெண் மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பது என் அம்மாவின் கவலை தோயிந்த முகத்தை நினைவுறுத்திக்கொண்டே இருந்தது.
நானும் நண்பனின் அப்பாவும் இந்த ரயிலில் ஏறி சுமார் ஒரு மணிநேரமேனும் தாண்டி இருக்கும். அவள் புறப்படும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாள். ஆனால் புறப்படுவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை. வெயில் ஜன்னல் வழியே உள்ளே அடித்துக்கொண்டிருந்தது. நண்பனின் அப்பாவின் முழுப் பெயர் எனக்கு இப்போதும் தெரியாது. நானும் அவரை அப்பா என்று தான் அழைத்துக்கொண்டு இருக்கிறேன். ரயில் ஏற இந்தப் பெரிய கட்டிடத்தின் முன்வரும்போதே அவர் திரும்பத் திரும்ப சொன்ன ஒரே விஷயம் எக்காரணம் கொண்டும் இருக்கையில் அமர்ந்த பின்பு இடத்தை விட்டு நகரக்கூடாது. அப்படி நகர்ந்து விட்டால் நாளை மறுநாள் வரை நான் கீழேயோ அல்லது கக்கூசின் அருகிலோதான் இருக்க நேரும் என்று.
ஒரு ரயில் பெரும் சத்தத்துடன் எங்கள் ரயிலின் அருகில் வந்து நின்றது.  அதில் ஒவ்வொரு இருக்கையிலும் ஒருவர்தான் இருந்தார். நான் இருந்த இருக்கையில் சுமார் ஆறு பேர் இருந்தோம். ஒருவேளை அந்த ரயில் திரும்பி வருவதாக இருக்கலாம். நாங்கள் இப்போதுதானே போகப் போகிறோம்.
எனது பழைய பள்ளிக்கூட கிழிந்த பையில்தான் எனது இரண்டு கால்சட்டை மற்றும் கொஞ்சம் பழைய சட்டை மூன்றையும் அடுக்கி வைத்திருந்தேன். இருபுறமும் பை கொஞ்சம் கிழிந்திருந்தது. ஆனாலும் அது ஒரு அழகான பைதான். என் அம்மாதான் இவரிடம் என்னையும் மதராஸ் கூட்டிச் செல்லுமாறு கேட்டாள். முதலில், சின்னப் பையனை ஏன் அங்கு வரை அனுப்ப வேண்டும், இரண்டு வருடம் யாதவ்ஜியிடமே வேலைக்குப் போகட்டும் பின்னால் வேண்டுமானால் அங்கு அழைத்துச் செல்கிறேன்,என்று அம்மாவிடம் சொன்னபோது அம்மா எந்த பதிலையும் சொல்லாமல் அழுதுக்கொண்டு மட்டுமே நின்றாள். பின் அவராகவே சரி என்னோடே வரட்டும் என்றார்.என்னை நோக்கி, அடுத்த வெள்ளிக்கிழமை கிளம்பலாம் என்று சொன்னார்.
இன்று அந்த வெள்ளிக்கிழமை. அம்மா அழகான இரண்டு பெரிய ஆலூ பராட்டாவை நெடுநாள்களுக்குப்பின் மிகவும் பிடித்த புதினா சட்டினியுடன் தந்தாள். இன்னும் ஒன்று சாப்பிட ஆசை இருந்தது. ஆனால் அந்தப் பாத்திரத்தில் இருந்ததே அதிகம் போனால் நாலோ ஐந்தோ பராட்டாவுக்கான மாவுதான். வீட்டில் அம்மா, என் மூன்று தங்கைகள்,மற்றும் மங்கலாக கண்தெரியும் அப்பா வழிப்பாட்டி, எல்லோர்க்கும் இவ்வளவு மாவில்தான் வயிற்றை நிரப்ப வேண்டும். எனக்குத் தெரியும், அவர்களுக்கு அம்மா இனி தரப்போகும் பராட்டாக்கள் நான் சாப்பிடுவதில் பாதி அளவுக்கூட இருப்பது கடினம். அம்மா எப்போதும் பின் கதவினை ஒட்டியே அமர்ந்திருப்பாள், நினைவுதெரிந்த நாள்முதல்.
பக்கத்து ரயில் மெதுவாக செல்லத் தொடங்கியது. ஆனால் கொஞ்ச நொடிகள் கழிந்தபோது புரிய தொடங்கியது, நான் இருந்த ரயில்தான் முன்னால் சென்றுகொண்டிருப்பது. மேலே காற்றாடி வேகமாகச் சுழலும் சத்தம் இப்போது தெளிவாக காதில் விழத் தொடங்கியது.ஆனாலும் வியர்வை நிற்கவே இல்லை. காலை நீட்டக்கூட முடியவில்லை. அதிகமான ஆட்கள் நிரம்பி இருந்தனர். வேறு ஒரு ரயில் இப்போது கொஞ்சம் தூரத்தில் நின்றிருந்தது.அதைப் பார்க்கும்போது ஒன்று புரிந்தது, பலர் இப்படிச் சேர்ந்து இருக்கவில்லை.தனித்தனியாகதான் ஒவ்வொரு ஆளும் இருந்தனர். ஒரு பெட்டியில் மட்டுமே எங்களைப் போல நிறைய பேர் கூடி இருந்தனர். நான் அப்பாவிடம் கேட்டேன், ஏன் அந்தப் பெட்டிகளில் கூட்டமே இல்லை? அது முன்னமே பணம் கொடுத்து தனித் தனி இருக்கை அவர்களுக்கென உடம்படி செய்யப் பட்டதென்று சொல்லி  நாங்கள் இப்போது வெளியிலிருந்து பயணச் சீட்டு வாங்கி வந்ததையும் நினைவுபடுத்தினார். அது காசு அதிகம் என்றும் சொல்லிக்கொண்டே, பக்கத்தில் இருந்த வேறு ஒரு பெரியவரின் எங்கே போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தொடங்கினார்.
என் பக்கத்தில் இருந்த ஒருவர் காலின் இடையிலிருந்து ஒரு பழைய பெரிய பிளாஸ்டிக் நெளிந்திருந்த பாட்டிலில் இருந்து தண்ணீரை ஆடி ஆடி கஷ்டப்பட்டுக் குடித்தார்.கொஞ்சம் என் தொடையிலும் தெறித்தது. அவர் பாட்டிலை மூடி மீண்டும் அதே பையில் வைத்தார்.  நான் போட்டிருந்த கால்சட்டை அப்பா சுமார் ஐந்தாறு வருடங்களுக்கு முன் வாங்கித் தந்ததுஎனக்குப் பிடித்த நிறமே சிகப்புதான். அவரிடம் கெஞ்சி தான் இந்த நிறத்தை எடுக்க முடிந்தது. ஒரு வேளை அது தீபாவளியாகவோ அல்லது ஹோலியாகவோ இருக்கலாம். எனக்குச் சரியாக நியாபகம் இல்லை. அம்மாவிடம் கேட்டால் சரியாகச் சொல்வாள்.  ஆனால் இதை எடுத்துத் தந்த வருடம்தான் அவர் செத்துப்போனார்.  யாதவ்ஜியின் கக்கூஸ் தொட்டியில் ஏதோ அடைப்பு என அதிகாலையிலே அவர் வீட்டின் முன் உள்ள கட்டிடத்தில் கடை வைத்திருக்கும் ஸ்ரிவாஸ்தவா வந்து சொல்லிவிட்டு போனார். அப்பா அவசரம் அவசரமாக எழுந்து அவர் பின்னால் ஓடியதைப் பாட்டியின் அருகில் கிடந்து அரை உறக்கத்தில் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் பத்து மணிக்கு பள்ளியில் போய் அமர்ந்த பத்தாவது நிமிடத்தில் என் நண்பனின் அப்பாவான இவர்தான் பள்ளிக்கு வந்தார். ஆசிரியரிடம் ஏதோ சொன்னவர் என்னிடம் எதுவும் சொல்லாமல் என் கையைப் பிடித்துக்கொண்டார்.
எனக்கு நன்றாக நினைவு உள்ளது, அன்று எனக்கு அதிகமான ஜலதோஷம். மூக்கு நிற்காது வடிந்துக் கொண்டிருந்தது. அவர் என் கையை கொஞ்சம் அழுத்திதான் பிடித்திருந்தார். அந்நேரம் பார்த்து காக்கி நிக்கர் அவிழப் பார்த்தது. அதை ஒரு மாதமாகவே ஒரு முட்டுப்பின்னால் தான் கோர்த்து வைத்திருந்தேன். நான் வேறு தூக்குப் பையை வலது கையில் போட்டிருந்ததால் இடது கையால் என் நிக்கரைப் பிடிக்க கொஞ்சம் வசதி இருந்தது. அவர் நேராக யாதவ்ஜியின் வீடு இருக்கும் சாலைக்குதான் என்னை அழைத்துச் சென்றார். பல நாட்கள் அப்பாவுடன் இந்த வழியாக வந்துள்ளேன். யாதவ்ஜி இருந்தால் என்னை வீட்டின் உள்ளே செல்ல விடமாட்டார்கள். என்னை அவர்கள் பசு கட்டியிருக்கும் தொழுவத்தின் அருகிலூடே வீட்டின் பின் பக்கத்துக்கு கூட்டிச் செல்வார்கள். ஆனால் யாதவ்ஜி வீட்டில் இல்லை என்றால் வலது புறமாக இருக்கும் கதவு போட்டு மூடி வைத்திருக்கும் சிறிய வழியோடு அழைத்துச் செல்வார் அப்பா.
நான் தூரத்தில் வரும்போதே கடைசி தங்கை, நண்பனின் அம்மா கையில் இருப்பது தெரிந்தது. ஒரு பெரும் அழுகையின் சத்தம் நெருங்க நெருங்க கேட்கதொடங்கியது. சுமார் இருபது முப்பது பேர் நின்றிருந்தனர். பக்கத்தில் நெருங்கும்போதே அது அம்மாவின் குரல் என அடையாளம் கண்டு கொண்டேன். என் அண்ணன் மற்ற இரண்டு தங்கைகளின் கையைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான். நின்றிருந்த கால்களின் இடைவெளி வழியே என் அப்பா கீழே மல்லாந்து படுத்திருப்பது தெரிந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.அப்பாவின் கண்கள் திறந்திருந்தன. அப்பாவின் உடம்பில் இருந்துதானோ என்னவோ, மல வாடை அடித்துக்கொண்டிருந்தது. அம்மா நெஞ்சில் அடித்து அழுதுகொண்டு இருந்தாள்.அப்பா வெறும் ஒரு துண்டை மட்டுமே கட்டி இருந்தார். ஒரு புறம் தொடைக்கு மேல் அது ஏறி இருந்தது.
யாதவ்ஜியை அங்கே காணவே இல்லை. என் நண்பனின் அப்பாவுடன் பார்த்துள்ள இரண்டு பேர் யாதவ்ஜியின் தம்பியுடன் ஏதோ பேசிக்கொண்டு இருந்தனர். அவர் இவர்கள் இரண்டு பேரையும் அடிக்கப் பாய்ந்து வந்தார்.  சிலர் அவரைத் தடுத்தனர். பின்னர் அப்பாவை உடனே அங்கிருந்து தூக்கி கொண்டு போக வேண்டும், என்று கத்தினார். என் அப்பா அவசரம் அவசரமாக போட்டுக்கொண்டு ஓடிய அந்த அக்குள் கிழிந்த சட்டை அந்த வீட்டின் முன் மரத்தில் தொங்குவதை என்னால் கண்டு நிற்கவே முடியவில்லை. அப்பாவின் உடம்பை எனக்கு பார்க்கவே தைரியப்படவில்லை, சட்டையில்லாமல். நேராக ஓடிச் சென்று அதை எடுத்து வந்தேன். அதில் இருந்த ஒரு பான் பராக்கும்ஒரு கட்டு பீடியும் கீழே விழுந்தது. ஐந்து ரூபாய் நாணயம் இரண்டு கீழே சிதறி ஓடியது.  நான் அனைத்தையும் எடுத்து என் நிக்கரின் பாக்கெட்டில் போட்டுவிட்டு சட்டையை அப்பாவின் அருகில் இருந்த பாட்டியிடம் கொடுத்தேன். அவள் அதை வாங்கி அப்பாவின் முகத்தை மெதுவாகத் துடைத்தாள். ஒரு பைக்கை யாரோ கொண்டு வந்தனர். என் நண்பனின் அப்பா (இவர்தான்) ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தார். அப்பாவை இரண்டு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர். வண்டியை எடுத்து வந்தவர் சற்று தள்ளி நின்றுகொண்டார்.
பின்னால் என் அண்ணனை ஏறச் சொன்னார்கள். அண்ணன் கண்ணீருடன் ஏறி அமர்ந்து அப்பாவை அணைத்துக்கொண்டான். வண்டியை மெதுவாக முன்னகர்த்திச் செல்லத் தொடங்கினர். சண்டை போட்டுக்கொண்டிருந்த அந்த மாமாவின் கையில் யாதவ்ஜியின் தம்பி கொஞ்சம் காசு கொடுப்பதைக் கண்டேன். பின் அனைவரும் வண்டியின் பின்னால் வேகமாக நடக்கத் தொடங்கினோம். அம்மா அலறிக்கொண்டே வண்டியின் பின்னால் நடந்தாள். நான் தங்கைகளை பிடித்துக்கொண்டே வந்தேன். தலையை விரித்த நிலையில் இருந்த பாட்டி தடுமாறி கீழே விழவே மீண்டும் பேட்டா…பேட்டா…என்ற கதறலுடன் எழுந்து ஓடத் தொடங்கினாள். கொஞ்சம் தூரம் சென்றவுடன் என்னை அறியாமல் யாதவ்ஜியின் வீட்டைத் திரும்பிப் பார்த்தேன். அங்கு யாதவ்ஜி மேலே மொட்டை மாடியில் நின்று எங்களைப் பார்த்துக்கொண்டு இருந்ததை தூரத்திலிருந்து கண்டேன். வேறொரு ரயில் மறுபுறம் எங்கள் எதிர்த் திசை நோக்கி சத்தம் எழுப்பிக்கொண்டே மிக மிக வேகமாகச் சென்றது.
இரண்டாவது நாள் மாலை வேளை எங்கள் வண்டி வேகமாக நெல்லூர் என்ற இடத்தை அடைந்தது. மிகக் கடுமையான மழையை அன்று பார்த்தேன், பல மாதங்களுக்குப் பிறகு.நான் இருந்த ஜன்னல் ஓரத்தில் மழை நீர் உள்ளே தெறித்தது. என்னுடன் இருந்த யாரும் நீரைத் தடுக்க சொல்லவேயில்லை. நேரம் செல்லச் செல்ல ரயிலின் வேகத்துடன் மழையின் வேகம் போட்டிபோடத் தொடங்கியிருந்தது. நாங்கள் மதராஸ் வந்து சேரும் வரை மழையும் எங்களுடனே பயணித்தது.
மக்களின் திரள் என்னை கொஞ்சம் பயமுறுத்தியது. மிகச் சரியாக சொல்வதென்றால் நாலாம் வகுப்பு படிக்கும்போது தாத்தாவுடன் அலகாபாத் கும்பமேளா சமயத்தில் கண்ட கூட்டத்தைப் போல் இருந்தது. மெதுமெதுவாக என் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டே ரயில் நிலையத்தை விட்டு வெளியே கொண்டு வந்தார் அப்பா.ரயில் நிலையத்தின் முன்னால் முட்டளவு நீர். அந்த இடத்தில் ரயில்  கட்டிடத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என நினைக்கிறேன். எங்கும் இருட்டு. இந்தக் கட்டிடத்தில் இருந்து வந்த வெளிச்சத்திலும் வாகனங்கள் அங்கும் இங்கும் மெதுவாகச் செல்லும்போது தந்த வெளிச்சத்திலும் நாங்கள் நடக்கத் தொடங்கினோம். அப்பா அவரது நண்பருக்கோ, வேலை பார்க்கும் முதலாளிக்கோ பல முறை கைபேசியில் பேச முயன்றுக்கொண்டே இருந்தார்.கோபத்தில் அவர் யார் அம்மாவையோ  வசவால் திட்டிக்கொண்டே நடந்தார். நான் எதுவும் கேட்க பயந்துக்கொண்டே பின்னால் அவருடன் இறங்கி நடக்கத்தொடங்கினேன்.
ஏதோ குகை போல ஒரு வழி கீழே இறங்கிச் செல்ல தொடங்கியது. அதில் ஒரு இரண்டு மூன்று படி இறங்கியவுடன் கீழே நின்ற காவலர் மேலே திரும்பிச் செல்ல கைகாட்டினார்.நானும் அப்பாவும் கீழே எட்டிப் பார்த்தோம். ஒரு ஆள் கழுத்தளவு தண்ணீரில் நின்று அந்த காவலருடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அப்பா சொன்னார், மழை நன்றாக தொடர்ந்து பெய்கிறதால்தான் இவ்வளவு தண்ணீர் உள்ளே வந்துள்ளது. அதனால் சுரங்கப்பாதை வழியே மறுபுறம் செல்ல முடியாது. எனக்கு ஆசையாக இருந்தது.  நான் இதுவரை மண்ணுக்குள் இறங்கி நடந்ததே இல்லை. பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்த நாட்களில் பெரிய விருப்பம் இருந்தது. என் ஊரில் உள்ள ராம்நகர் கோட்டை முதல் ராம்நகரின் வேறு பகுதியில் உள்ள துர்கா மந்திர் வரை அப்படி ஒரு பாதை உண்டு என கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஆனால் இப்போது அது மூடி வைக்கப்பட்டுள்ளதாக அம்மா சின்ன வயதில் சொல்லுவாள். நான் பல நாள் நினைத்ததுண்டு, நாங்கள் புது வீடு கட்டும்போது ஒரு கிணறு தோண்டவேண்டும் என்றும் அப்படிச் செய்யும்போது சுரங்கப்பாதை என் கிணற்றைக் கிழித்து இரண்டு பக்கமாக போகும் என்றும் அதில் இறங்கி நடந்து திரும்பி வரவேண்டும் என்றும். ஆனால் இன்று அந்த ஆசையில் பாதியை இந்த மழை இல்லாதிருந்தால் நிவர்த்தி செய்திருக்கலாம். என்னுடைய தலையில் பள்ளிக்கூடப் பையை வைத்துக்கொள்ள அப்பா சொன்னார். புது இடம் மற்றும் புது மழையினால் ஒரு வேளை காய்ச்சல் வந்தால்? நான் அவர் சொன்னது போலவே செய்தேன். மழை காரணமாக செல்போன் சமிக்ஞைக்களும் இல்லை என்றார்மிகவும் மெதுவாக ஒவ்வொரு ஆளின் பின்னாலாக நடந்து சென்னை பார்க் என்ற சிறிய ரயில் நிலையத்தை அடைந்தோம். அப்பா பயணச்சீட்டு வாங்க வரிசையில் போய் நின்று கொண்டார். நானும் அவரின் அருகில் போய் நின்றேன். மழை பேய்க்காற்றுடன் இப்போதும் அடித்துக்கொண்டுதான் இருந்தது.
மழையின் காரணமாக ரயில் இன்னும் கொஞ்ச நேரம் கழித்தே வரும் என்று அறிவித்தனர். அங்கும் மிக அதிக கூட்டம்.  பட்டணம் என்பதன் பொருளே எனக்கு இப்போதுதான் புரியத்தொடங்கியிருந்தது. அப்பா என்னிடம் பேசிக்கொள்ளவே இல்லை. ரயில் மிக மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. நான் வந்த வண்டியைப்போல மிகப்பெரிய முன்பெட்டி இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அதில் ஏறி நின்றோம். ரயில் மெதுமெதுவாக நகர்ந்தது. ரயிலில் யாருமே எதுவுமே பேசாமல் இருந்தது எனக்கு புதியதாக தெரிந்தது. இந்த மக்கள் யாரிடமும் பேசமாட்டார்கள் போல…! ரயில் ஒவ்வொரு இடமாக நின்று கொண்டே சென்றது. ஒரு இடத்தில் அதிக நேரம் நிறுத்தி இருந்தனர். பிறகு தெரிந்ததுரயில் அதற்கு மேல் போகாது என. ஏதோ ஆற்றின் மேல் தண்டவாளத்தைத் தாண்டி தண்ணீர் செல்லத் தொடங்கியிருப்பதாக யாரோ சொல்வது கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இறங்கி நடக்கத்தொடங்கினர்.
அப்பா என்னிடம் நடந்தே போய்விடலாம்பக்கம்தான் அவர் குடியிருக்கும் வீடு என்றார்.மழையில் மீண்டும் நனைந்துகொண்டே நடக்கத்தொடங்கினோம். நாம் வந்த கெட்ட நேரம் என முனகிக்கொண்டே  நடந்தார். மிகப்பெரிய மின்னல் மழையைக் கிழித்து இறங்கியது.இடி முழக்கம் என் நெஞ்சில் சிறியதொரு பயத்தை விதைத்தது. எங்கோ தனிமையில் காட்டிலோ பாலைவனத்திலோ நடந்து செல்வதாகப்பட்டது.  கை கால் கொஞ்சம் நடுங்க தொடங்கியிருந்தது. அப்பா… ரயில் நின்ன இடம் பேரு என்ன என்றேன். மாம்பல் என்று சொன்னார். அடுத்த நிறுத்தம்தான் சைதாபேட் என்றும் அது வரை சென்று நிறுத்தி இருந்தால் இவ்வளவு நடக்க வேண்டியது இல்லாமல் போயிருக்கும் என்றும் சொன்னார்.அதோடு ரயில் நிலையத்தின் அருகில்தான் வீடு என்றும் வீட்டில் இருந்தால் ரயில் போவதைப் பார்க்கலாமாம். அந்த இடத்தில் இருக்கும் பாலத்தின் மேலே தான் தண்ணீர் செல்வதாக சொன்னார். ஏதோ சகதி நிறைந்த ஒரு தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினோம். அது வயலுக்குள் இறங்கி நடப்பதைப் போல தோன்றியது. எங்கும் இருட்டின் அமைதி. நீர். நீர். சகதி…. எங்கள் ஊரில் ஹோலி முடிந்த அடுத்த நாள் இப்படிதான் சாலைகள் எங்கும் ஆள் நடமாட்டம் இருக்காது. ஆனால் பட்டணமான இங்கு ஒரு மழை பெய்தால் வாகனங்கள் இல்லை, மின்சாரம் இல்லைஅவ்வளவு பேர் ரயிலில் இருந்து இறங்கியவர்கள் எங்குதான் சென்று மறைந்தார்களோ? நாங்கள் நடந்து செல்லும் பாதையில் இரண்டு மூன்று மாடுகள் நனைந்துகொண்டே நின்றிருந்தன. கொஞ்சம் தூரமாக பத்திருபது பன்றிகளும் ஒரு ஓலைக் குடிசையின் முன்னால் ஒண்டி நின்றுக்கொண்டிருந்தன.
நாங்கள் சென்று ஒரு இடத்தில் நின்றோம். தூரத்தில் செல்போனில்  இருந்து வரும் சிறிய வெளிச்சத்தால் அடித்துப்பார்த்தார். அதுதான் அந்த ஆறு. ஆறு நிறைந்து அதன் அலை மிக மெதுவாக கரையில் இருந்த ஒரு வீட்டின் வாசலில் மோதியபடி இருந்தது. ஆற்றின் நீர் குடிசையின் அருகிலேயே வேகமாக பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது கொஞ்சம் அதிர்ச்சியை தந்தது. ஏற்கனவே எனக்கு உடம்பும் குளிரால் நடுக்கம் கண்டிருந்தது. அப்பா மெதுவாக அவரின் கைப்பையில் இருந்த ஒரு சாவியால் கதவைத் திறந்தார். அதுவும் சிறிய ஒரு ஓலைக் குடிசை. நாங்கள் உள்ளே சென்று பைகளை வைத்துவிட்டு மாற்றுத் துணிகளை அணிந்துவிட்டு அமர்ந்தோம். அவர் மூலையில் ஒதுக்கி வைத்திருந்த மதுக் குப்பியை திறந்து வேகமாக இரண்டு மூன்றுமிடறு வாயெடுக்காமல் குடித்தார்.
என்னா குளிர்?
ஆமா
சாப்பிட வேணாமா? நாம படுத்து தூங்குவோம். வேணுமுன்னா ஒரு வாய் இதக் குடிச்சுக்கோ. குளிர் தெரியாது. உடம்பு ரொம்ப நடுங்குது. மழை வேற நிற்காம பெய்துக்கிட்டே இருக்கு. ராத்திரி எப்படியும் நின்றிடும்.  மதராஸ்காரன் மழை பாக்கிறதே இப்படி எல்லாம்தான். நம்ம ஊர் போல கிடையாது. தண்ணீர் இங்க ஊருக்குள்ள வரும்,இல்லன்னா ஏதாவது ஆபத்து அப்படின்னு தெரிஞ்சா சர்க்கார் துரிதமா உதவுவாங்க. நம்ம ஊர் கோயில்லகூட வருஷா வருஷம் மிதிபட்டு ஒரு ஆயிரம் பேர் சாவானுங்க. அங்க கடவுள் கூடகாப்பாத்த மாட்டார். ஆனா இங்க சர்க்கார் கடவுள் செய்ய வேண்டியதக்கூட செய்து தருவாங்க. ம்ம்ம்…. இப்போ கூட மழை நிற்கவேயில்லை அப்படீனா போலீஸ் வந்து சொல்லி நம்மள பத்திரமா கூட்டிகிட்டு போயிடுவாங்க. அதனால மழை நைட் நின்னாச்சுன்னா நாளைக்கு காலையில மாமூல் வாழ்க்கை தொடங்கிடும்.  இப்போ இருக்கிறத சாப்பிட்டு தூங்குவோம்என்றார்.
அப்பாவின் நம்பிக்கையும் அவரது பல வருட மதராஸ் வாழ்க்கையும் நிறைய கற்றுக் குடுத்திருக்கு இந்த ஊர் பற்றி. அரசாங்கத்தையும் மக்களையும் பற்றி. எங்கள் ஊரில் இருக்கும் அம்மாவையும், தம்பி தங்கையையும் யோசித்தேன். அழ ஆசை வந்தது.ஆனால் இவரைப் போல் இங்கே எவ்வளவு கஷ்டபட்டேனும் குடும்பத்தை காப்பாற்றுவேன். குளிர் என்னை ஆட்டிப்படைத்தது. ஒரு நம்பிக்கையில் மது குப்பியில் இருந்து இரண்டு வாய் குடித்தேன். குமட்டியது. அப்பா எதுவும் சொல்லவில்லை. நான் அப்பாவின் பையைத்  திறந்து எடுத்து வந்திருந்த நாலு சப்பாத்தியை அவருக்கும், எனக்கு மீதி இரண்டையும் எடுத்தேன். பின் அந்த பாலித்தேன் பையில் இருந்த இரண்டு வெங்காயத்தை ஆளுக்கொன்றாக வைத்துவிட்டு அதில் இருந்த மூன்று பச்சை மிளகாயில் இரண்டை அவருக்கு கொடுத்து ஒன்றை நானும் எடுத்துக்கொண்டேன். எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக குளிர் குறையத் தொடங்கியது. அவர் மீண்டும் குப்பியில் இருந்ததைக்  குடித்துவிட்டு கொஞ்சம் எனக்கும்  தந்துவிட்டு அங்கேயே படுத்துவிட்டார்.இரண்டு நாள் பயணத்தின் களைப்பு மற்றும் குளிர் காரணமாக நானும் மெதுவாக ஒரு மூலையில் படுத்துக்கொண்டேன்.
என் அப்பாவின் முகம் பல நாட்களுக்குப் பின்னர் எனக்கு மனதில் தெளியத்தொடங்கியது அவரது உடம்பின் மணம் மூக்கில் நன்றாக உணர முடிந்தது.அவரது அழகான வெற்றுடம்பில், கழட்டி வைத்திருந்த சட்டையைப் போட வேண்டும் என்று விரும்பி, அதை எடுத்துக்கொண்டு அவர் அருகில் நான் வேகமாக நெருங்கிக்கொண்டிருந்தேன்.
**********************************************************
இக்கதை இணைய இதழில் சிறந்த கதை என தெரிவுச்செய்யப்பட்டு  தனித்தன்மையுடன் கூடிய இணைய பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது https://padhaakai.com/2018/02/10/the-destitute/
இதேபோல் பலரது சிறந்த கதைகளை படிக்க பதாகை  இணையத்தளத்தை பார்வையிடவும்.

No comments:

Post a Comment