Monday, 1 November 2021

டாட்டா வாங்கிய ஏர் இந்தியா... ஜனநாயகத்தின் மனசாட்சியை உலுக்காதது ஏன்...?


 

உண்மையில் இந்தியாவில் இருக்கின்ற நடுநிலைவாதிகள் முதல் ஏதாவது ஒரு “இஸம்” மேல் பற்றுள்ளவர்கள் வரை யாருமே அதை பற்றி கொஞ்சம் கூட வருந்தவுமில்லை அதை பற்றிய ஒரு சிறு முணுமுணுப்பை கூட பெரிய அளவில் எங்கும் காண முடியவில்லை. காரணம் மிக எளிதாக புரிந்துகொள்ள முடிந்ததாக நாம் உருவாக்கிய கற்பனை பிம்பம் தான். உண்மையில் விற்றது சரியா? அல்லது எடுத்தவர்களிடமே திரும்ப அந்த நிறுவனம் சென்றது உண்மையில் விதி வலியதன் காரணமாகவா? அல்லது நம்மை போன்ற இந்த தலைமுறை ஆட்களுக்கு, அதை புரிந்துக்கொள்ளும் தகுதி மற்றும் நேரம் இல்லையா?
 
ஒரு புறம் பல செய்தி ஊடகங்கள் சொன்ன விஷயம் அது டாட்டாவிடம் இருந்து அரசு தன் வலிமையை பிரயோகித்து நேரு காலத்தில் தன்வசப்படுத்திய நிறுவனம். அதனால் இப்போது அது திரும்ப நல்லவரான டாட்டாவிடமே சென்றது ஒருவிதத்தில் நல்லது என்பது போலவும்.
 
இன்னொரு எல்லையில் ஆளும் மத்திய அரசின் கொள்கை விளம்பிகள் டாட்டாவுக்கு நேரு செய்த துரோகத்தை இதன் மூலம் மோடி சரி செய்து நாட்டு மக்களுக்கு புண்ணியத்தின் பங்கை சம்பாதித்து கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். 
 
உண்மையில் இது யாருடைய சொத்து? இப்போதைய அரசு உருவாக்கிய நிறுவனமா? அல்லது இப்போதைய அல்லது முன் காலத்தில் இருந்த மந்திரிகள் உருவாக்கிய நிறுவனமா? அல்ல... இது மக்களின் வரிப்பணம் மூலம் வாங்கப்பட்ட விமானங்கள் மற்றும் கடைசி மனிதன் வரை கொடுத்த சிறிய சிறிய அளவிலான வரிபணத்தின் மூலம் உருவாகி வந்த ஒரு ஸ்தாபனம்.
ஆனால் அதை மிக மிக மிக சொற்ப என்பதை விட இலவசமாகவே கொடுத்திருப்பதை கூட பற்றி வருத்தப்படாத நம்மை என்ன சொல்வது.
 
கொஞ்சம் தீர்க்கமாக பார்போம்:-
மத்திய அரசின் அறிவிப்பு படியே வைத்துகொண்டால் கூட ஏர் இந்திய நிறுவனத்துக்கு ஐம்பதாயிரம் கோடி ரூபாய்க்கான சொத்துமதிப்பு உள்ள நிறுவனமாகும். அதேநேரம் சுமார் அறுபத்தி இரண்டாயிரம் கோடி ருபாய் அளவுக்கு இப்போதைக்கு கடனும் உள்ளது.
 
உண்மையில் இந்த கடன் தொகையான அறுபத்தி இரண்டாயிரம் கோடி ரூபாயை தாங்களே அடைத்துக்கொள்வதாக இப்போது டாட்டா ஏற்றுள்ளதா? இல்லை.
 
சரி, அப்படி செய்யாமல் அந்த நிறுவனத்தின் சொத்துமதிப்பான ஐம்பதாயிரம் கோடி ரூபாயையேனும் கொடுத்து தான் இப்போது டாட்டா இதை வாங்கி உள்ளதா? இல்லவே இல்லை.
 
ஆனால் உண்மையில் டாட்டா நிறுவனம் அரசுக்கு கொடுத்துள்ளது வெறும் இரண்டாயிரத்து ஏழுநூறு கோடிகள் மட்டுமே.
 
அதேபோல் அறுபத்தி இரண்டாயிரம் கோடி ருபாய் அளவுக்கு இப்போதைக்கு இருக்கும் கடனை வரும் காலத்தில் தீர்க்குமா என்று பார்த்தால்...?????
அதற்கு அவர்கள் சொல்லும் பதில் பதினைந்தாயிரத்து முந்நூறு கோடி ரூபாயை டாட்டா கொடுக்கும். ஆனால் அதையும் இந்த வானூர்திகளை வைத்து பிழைத்துக்கொண்டே அதில் லாபம் வந்தால் அதில் சிறுக சிறுக கொடுத்து தான் இந்த பதினைந்தாயிரத்து முந்நூறு கோடி ரூபாயை ஈடு கட்ட போகிறார்களாம். மீதி நாற்பத்தி ஆறாயிரம் கோடி ரூபாயை பற்றி பின்னர் சொல்கிறேன்.
இது தான் இப்போது அரசு ஏற்படுத்தி உள்ள ஒப்பந்தம். இதை கேட்டால் எதை கொண்டு சிரிப்பது என்பது தான் உண்மையில் புரியவில்லை. இந்த ஒப்பந்தம் சரி என்று எந்த கணக்கு தெரிந்தவனாவது ஒத்துக்கொள்வானா. ஆனால் இப்போது நமக்கு வாய்த்திருக்கும் வணிக அடிமைகள் செய்வார்கள். செய்கிறார்கள். நாம் கையால் ஆகாமல் பார்த்து நொந்துக்கொண்டு மட்டுமே உள்ளோம்.
 
இதே அரசு அதாவது இப்போது இருக்கின்ற மத்திய அரசு 2௦17-18 ஆம் வருடத்தில் இதை விற்க யோசிக்கும்போது ஒரு முன்வரைவை உருவாக்கியது. அதில் ஏர் இந்திய நிறுவனத்தின் பங்கை நூறு சதவிகிதம் விற்க நினைக்கவில்லை. இருபத்தி நாலு சதவிகித பங்கை வைத்துக்கொண்டு மீதியை மட்டுமே விற்கலாம் என்று யோசித்தது. அதேப்போல் அன்று இருந்த கடனின் அளவிலிருந்து சுமார் முப்பத்தி நாலாயிரம் கோடி ரூபாயை வாங்கும் நிறுவனம் ஏற்க வேண்டும் என்றும் ஒரு சரத்தை வைத்திருந்தது. அப்போது ஒருவர் கூட வாங்க முன்வரவில்லை. ஏன், இந்த டாட்டா கூட அந்த திசையில் அப்போது தலை வைத்து படுக்கவில்லை.
 
இதை எல்லாம் தாண்டி ஒரு விஷயம் இருப்பது தான் உண்மையில் இந்திய மக்களின் தலையில் மிளகாய் அரைப்பதின் உச்சம். அதாவது இந்த அறுபத்தி இரண்டாயிரம் கோடி ருபாய் கடனில் சிறுக சிறுக விமானம் ஓட்டி அதை வைத்து அடைப்பதாக சொல்லிய அந்த பதினைந்தாயிரத்து முந்நூறு கோடி ரூபாயை தவிர மீதி உள்ள சுமார் நாற்பத்தி ஆறாயிரம் கோடி ரூபாயை நம் மக்கள் பணத்தில் கடனை கழிக்க வேண்டும்.
 
 நம் வரிபணத்தின் மூலம்...
 எவ்வளவு நல்ல டீல் இது??? அக்காவை வைத்து பேக்கரி வாங்கியதை விட ஒரு கேவலமான இந்த டீலை நாம் என்னவென்று சொல்வது.
 
சரி. இந்த கேவலமான கதையின் மறுபக்கத்தையும் கொஞ்சம் பார்ப்போம். ஏர் இந்தியா அப்படி ஒரு மட்டமான கம்பெனி தானா இப்போது?
 
உண்மையில் ஏர் இந்தியாவின் வசம் சுமார் நூற்றி முப்பதுக்கும் மேற்பட்ட விமானங்கள் உள்ளது. அதாவது உலகத்தின் பெரிய நிறுவனங்களில் வரிசையில் உள்ளது தான் இப்போதும். இரண்டாவது மன்மோகன்சிங் ஆட்சியில், அதாவது 2௦௦7 வருடங்களில் தான் இந்த நிறுவனம் இவ்வளவு கீழாக செல்ல தொடங்கியது என்னவோ உண்மை தான். அப்போது வாங்கிய பல விமானங்களின் மூலம் ஏற்பட்ட கடனை மீட்ட முடியாமல் தான் அந்த நிறுவனம் திணறியது. 
 
இதில் முக்கிய திருப்பம் இப்போது நடந்தது என்னவென்றால் அப்படி இந்திய அரசு கடன் எடுத்து வாங்கிய விமானங்கள் இப்போது டாடாவுக்கு இலவசமாகவே அரசு கொடுத்துள்ளது. மீதி கடன் காசையும் கொடுப்பது அரசு தான், நம் வரிப்பணம் மூலம்.
 
நீங்கள் எந்த கட்சி ஆளாக இருந்தாலும் இது சரி என்று சொல்ல முடியுமா?
சரி கொஞ்சம் வரலாற்றை திருப்பி பார்த்தோமானால் இந்த டாட்டா விமான நிறுவனம் தொடங்கிய வருடம் 1932-ம் வருடம்தான். ஆனால் அதை அரசுடமை ஆக்கிய வருடம் 1953-ஆம் ஆண்டு. அந்த வருடம் அரசு இதை கையப்படுத்தும் போது உண்மையில் அதில் டாடாவுக்கு வெறும் இருபத்தி ஐந்து சதவிகித பங்கு தான் உண்மையில் இருந்தது. அப்போதே அரசுக்கு நாற்பத்தி ஒன்பது சதவிகித பங்கு இருந்தது. அரசு அதை கையகப்படுத்தும்போது அரசு அப்போதைய மதிப்பில் டாட்டாவின் பங்குகளை சுமார் 2.8 கோடி ரூபாய் கொடுத்து தான் வாங்கியது. அல்லாமல் அரசு பலவந்தமாக கைப்பற்றவில்லை. ஆனால் அப்படி தான் நாம் நம்பிக்கொண்டு திரிகிறோம்.
 
அரசு அப்போது ஏன் அதை வாங்கியது என்றால் அப்போது உலகம் முழுவதும் புதிதாக விடுதலை பெற்ற பல நாடுகளும் சொந்தமாக ஒரு விமான நிறுவனம் நிறுவி நடத்துவதை ஒரு தேசிய பெருமிதமாக நினைத்துக்கொண்டிருந்த காலம் அது.
 
இப்போது சொல்லுங்கள் அரசு உண்மையில் செய்ய வேண்டியது சேவையா, வணிகமா என்பது ஒருபுறம் யோசித்துக்கொண்டே...
 
மறுபுறம் கொஞ்சம் பரந்துபட்டு யோசித்தால்... டாடாவுக்கு முன்னமே இரண்டு வானூர்தி சேவை நிறுவனங்கள் இருக்கின்றது ஏர் ஆசியா மற்றும் ஏர் விஸ்தார என்ற பெயரில்... அவை லாபத்தில் தான் இயங்குகின்றதா என்ற கேள்வியை நாம் ஒருமுறையேனும் யோசித்தோமா... அப்படி என்றால் இதை அவர்கள் ஏன் இப்போது வாங்கினார்கள்? ஏன் 2௦17-இல் வாங்க முன்வரவில்லை? 
 
இப்போது இலவசம்... போனால் போகட்டும் போடா... என்று வாங்கி வைத்துக்கொள்கிறார்கள்.
 
மறுபுறம் நம்மை போன்ற இளிச்சவாயன்களும், பான்பிராக் வாயன்களும்...
வாழிய நாடு...! வாழ்க எம்மக்கள்...!

Sunday, 15 August 2021

குழந்தைகள் மீதான வன்முறைகள் மற்றும் பாலியல் அத்துமீறல்கள்

 

CHILD abuse and TN education system:

பள்ளிக்கல்வித்துறை மாற்றி சிந்திக்க வேண்டிய சரியான தருணம் இதுதான்...

பழையகால கல்வி வழிமுறைகளை தூக்கிப் போட வேண்டிய சரியான நேரம் இது. அதற்கு கரோனா ஒரு காரணமாகவும் பல பள்ளிகளில் நடக்கின்ற பாலியல் அத்துமீறல்கள் ஒரு காரணமாகவும் கொண்டு இப்போதே அரசும் ஒவ்வொரு பெற்றோர்களும் இதன் தேவையை முதலில் உணர வேண்டும்.

இந்த தகவல் புரட்சி யுகத்தில் மிகப்பிரம்மாண்டமான கட்டிடங்களை வைத்துக்கொண்டு பள்ளி நடத்துவதை முதலில் மாற்றியே தீர வேண்டும் இரண்டாவதாக மனித உடல்களை பற்றி மனித உணர்வுகளை பற்றி மனித வாழ்க்கை முறையை பற்றி எந்த ஒரு குழந்தையும் கல்லூரி முடியும் காலம்வரை உணர வழி முறைகள் இந்த பாடத்திட்டங்களில் இல்லை. அதன் காரணமாக பல்வேறு வாழ்க்கைப் பிரச்சினைகளையும் ஒவ்வொரு மாணவ/மாணவியரும் பள்ளி காலகட்டங்களை முடித்து வெளியே வரும்போது எதிர்கொள்கிறார்கள்.

அரசு உடனடியாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தே தீர வேண்டும். எந்த மத நிறுவனங்களும், சாதிகளும் ஒரு பள்ளியை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட கூடாது. ஒருகாலத்தில் அதன் தேவை இருந்தது.இப்போது தேவையில்லை. ஒரு மாணவி இன்று குறைந்தபட்சம் 6 லிருந்து 10 முறை கடவுள் சம்பந்தமான பாடல்கள், பிரார்த்தனைகள் போன்ற மூடநம்பிக்கையை மட்டும் வளர்த்துகின்ற விடயங்கள் இன்று பள்ளிகளில் தேவையின்றி கட்டாயத்தின் பேரில் அனுபவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறாள். எந்த மதத்தை சார்ந்த பள்ளியில் சேர்ந்து படித்தாலும் ஒரு அடிமையை நடத்துவதைவிட கீழ்தரமாகவே ஒரு மாணவன் அல்லது மாணவி கடவுள் என்ற பெயரில் நடத்தப்படுகிறார்கள். பள்ளிக்கூடங்கள் அதற்கான இடம் அல்ல.

அவர்கள் கடவுளை பற்றி சொந்த வீடுகளில் வேண்டுமானால் கற்றுக்கொள்ளட்டும். ஒரு மாண- வன் /வி க்கு என்று எந்த ஒரு குரலும் பள்ளிக்கூடங்களில் ஒலிப்பதற்கு அல்லது அவர்களது சந்தேகங்களை / குறைகளை முறைப்படி ஆராய்ந்து தீர்ப்பதற்கு ஒரு வழிமுறையும் இல்லை என்பதை மீறி சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என மிரட்டவும் செய்கிறார்கள்.

இதில் மிக கொடூரமான நிலை என்னவென்றால் பி டி ஏ (PTA) என்ற பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் என்ற ஒரு அமைப்பை பள்ளிக்கூடங்கள் வைத்திருந்தாலும் அதன் பயன் என்ன என்பது இதுவரை யாரும் கண்டடைந்தது கிடையாது. காரணம் அது யாருக்காக வை க்கப்பட்டு இருக்கிறதோ அவர்கள் அதில் பங்குதாரர்கள் அல்ல அல்லது கருத்து கூற அல்லது கூறுகின்ற கருத்துக்கு எந்த மரியாதையும் இல்லை.

Ex:- ஒரு திருமணத்தை பெற்றோர்கள் சேர்ந்து முடிவெடுத்து நடத்தினாலும் இப்போதைய நடைமுறையில் குறைந்தபட்சம் பிடித்திருக்கிறதா என்ற ஒரு கேள்வியாவது இந்த சமுதாயம் இப்போது அந்த ஆண்/பெண்ணிடம் கேட்கிறது. ஆனால் குழந்தைக்கு அந்த பள்ளியில் என்ன பிரச்சனை என்று பொதுவெளியில், வீட்டில், பள்ளிக்கூடத்தில் எங்குமே யாருமே கேட்பதில்லை கேட்பதற்கான உரிமையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. பிள்ளைகளுக்கான அனைத்து முடிவுகளும் தாங்கள் சரியாகத்தான் எடுக்கிறோம் என நம்புகின்ற ஆசிரியர்கள் ஒருபுறம், மறுபுறம் கட்டிய பணத்துக்கு தேவையான பணம் சம்பாதிக்கும் வசதியான விஷயங்கள் மட்டும் தான் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்தால் போதும் அது தான் தேவை என்று நம்புகிற பெற்றோர்கள் மறுபுறம் இருப்பதால் எந்த ஒரு மாணவனும் அவனுக்குத் தேவையான சந்தேகங்களை, உணர்வுகளை, பிரச்சனைகளை, கற்பனைகளை, திட்டங்களை எதையும் கேட்பதற்கு ஒரு காது இல்லாத ஒரு சூழ்நிலையில் வாழுகிறான்.

இப்படி ஒரு இக்கட்டில் இருக்கின்ற மாணவன் அல்லது மாணவி வகுப்பில் ஏற்படுகின்ற எந்த பிரச்சனையை பத்தாம் வகுப்பு வரைக்கும் யாரிடம் பேசி புரிய வைக்க முடியும். எந்த விதமான விளக்கங்களை கொடுத்து பெற்றோர்களை நம்பவைக்க முடியும்.

எடுத்துக்காட்டாக:- ஒரு ஆசிரியர் ஒரு மாணவியின் நெஞ்சை கசக்கி விட்டால் அதை எப்படி முயன்றாலும் ஒரு குழந்தையால் அதை நிரூபிக்க முடியாது. காரணம் அதற்கு அவள் தான் ஒரே சாட்சி. இப்படியான விஷயங்களை பொது வெளியில் பேசுவதற்கு முதலில் பெற்றோர்களும் அஞ்சுகிறார்கள். பெற்றோர்களிடமும் சொல்லி இதை தடுப்பதற்கு வழி முறைகள் என்று எதுவுமே இல்லாத ஒரு கல்வி பின்புலத்திலிருந்து மாணவிகளை காப்பாற்றுவது சாதாரணமான விஷயமல்ல.

ஆனால் அரசு இதற்கு மிக எளிதான தீர்வுகளைக் கண்டறிய முடியும். பள்ளிக்கூடங்கள் அனைத்துமே பத்து முதல் ஆயிரம் மாணவர்களை இணையம் மூலம் இணைத்து இன்று தகவல் புரட்சி யுகத்தில் அனைத்துமே அவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே கற்பிக்க முடியும். ஒரு நாளில் குறைந்தபட்ச நேர ஒதுக்கீடு செய்து மற்ற நேரங்களில் பலவிதமான விஷயங்களில் ஒரு மாணவ மாணவியரை பங்களிக்க வைக்க முடியும். செய்முறை பயிற்சி என்பது மிக தேவையான ஒன்று என்பதால் அதை கற்பிப்பதற்கு அரசு மாவட்டத்தின் பல இடங்களில் இப்போது இருக்கக்கூடிய பள்ளிக்கூடங்களை பயிற்சி கூடங்கள் ஆக மாற்றி ஒவ்வொரு நாட்களும் கொஞ்சம் மாணவர்களை கொஞ்சம் நேரம் அங்கு அனுப்பி வைக்க முடியும். அந்த இடங்களில் மிக தெளிவான வழிகாட்டு முறைகளுடன் கூடிய கற்பித்தல் அதோடு கண்காணிப்பு செய்ய முடியும். அனைத்துமே, அதாவது ஒரு ஆசிரியர் பேசுவது, மாணவர்களிடம் பேசப்படுகின்ற ஒவ்வொரு விஷயமும் இணையத்தில் பெற்றோர்கள் பார்க்கக்கூடிய அளவுக்கு ஒரு வருடம் சேமித்து வைக்கும் செயல்களை செய்திருக்கவேண்டும். ஒரு வருடம் முடிந்த பின்னரும் அதை எங்கிருந்தும் ஒவ்வொரு பெற்றோரும் பார்க்கும் படி செய்யலாம். மூன்று வருடத்துக்கு பின்னர் அதை நீக்கம் செய்யலாம்.

அடுத்ததாக கல்வி முறையில் நிச்சயம் ஐந்தாம் வகுப்பு முதல் பாலியல் கல்வியை சேர்த்தே ஆக வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். காரணம் இன்று ஒரு குழந்தை ஒன்றாம் வகுப்பில் படிக்கும்போதே பாலியல் சார்ந்த பலவிதமான காணொளிகள் tv மற்றும் பல விதங்களில் காண பெறுகிறார்கள். ஆனால் அந்த வயதில் அதன் முழு அகலம் தெரியாது என்பதால் ஐந்தாம் வகுப்பு முதல் நிச்சயம் இதற்கான கல்வித் திட்டத்தை உருவாக்கியே தீர வேண்டும்.

ஆனால் இதில் பிரச்சனை அனைத்து பெற்றோர்களும் பாலியல் கல்வி என்ற வார்த்தை கேட்டவுடனே "புணர்தல்" அல்லது "penetrative" என்ற விஷயத்தைப் பற்றி தான் யோசிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக:- உங்களுக்கு உடம்பில் ஒரு பாகத்தில் சொறிவது போல தோன்றினால் உங்கள் கை அதுவாகவே சொறிந்துவிடும். அதற்கு உங்களுக்கு தனிப் பயிற்சி தர வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அதே போல் தான் இந்த விஷயத்தை ஒரு பூனைக்கும், யானைக்கும், எலிக்கும் தெரிவது போல குழந்தை பெற்றுக் கொள்வார்கள்.

ஆனால் உண்மையில் கற்றுக் கொடுக்க வேண்டிய விஷயம் எப்படி உயிருடன் உடல் கொண்டிருக்கும் நமது காதலன்/லி அல்லது கட்டிய மனைவி / கணவரோடு இதை கையாள வேண்டும் என்பதை தான். எப்படி இன்னொரு உடலின் மேல் வன்முறை செலுத்தாமல் பாதுகாப்புடன், அரவணைப்புடன், அன்புடன், தெளிவுடன், வாஞ்சையுடன், வெறுப்பின்றி கோபம் இல்லாமல் வன்முறையற்ற முறையில் அவர்களுக்குள் இன்பம் துய்க்க முடியும் என்பதை சொல்லி கற்றுக்கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. உடல் மாற்றங்கள், வலிகள், வேதனைகள் போன்ற அனைத்தையும் கற்பிக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக MUTUAL CONSENT என்பதன் பொருளை, அதன் தேவையை, அதன் வரன்முறையை ஒவ்வொரு குழந்தைக்கும் சொல்லி கற்று கொடுக்க வேண்டும்... அனுமதி இல்லாமல் இன்னொருவரின் முடியை கூட தொட கூடாது என்பதை ஆழ் மனதில் பதிப்பிக்க வேண்டும். இன்றைய மாணவர்கள் தானே நாளைய ஆசிரியர்கள்.

இப்படி ஒரு கல்வி கொடுக்காமல் இந்த சமுதாயம் மாறும் என நினைத்தால் அது பகல் கனவு தான்.

Thursday, 18 January 2018

சிறுகதை - நினைவைப் புதைத்தல் ( இணைய மாத இதழில் வெளிவந்தது )


நேற்றுவரை தன்னுடன் விளையாடி மகிழ்ந்த தாத்தாவுடன்தான் இருந்தான் சுடலை. ஆனால் இப்போது அவர் குளிர்ந்து விறைத்த தேகமாக. மிகவும் நீண்ட உருவம். எப்படியும் எண்பது வயது தாண்டியிருக்கும். அம்பாசிடர் காரின் பின்புறம், மடியில் அவரது கால்கள். காலில் இருந்த அழுக்கு அப்படியே தான் இருக்கிறது. நகம் நீளமாக என்பதை விட அளவோ அழகோ இல்லாத ஒரு அழகில் அவர் கால்களில்.
சுடலை பள்ளிக்கூடம் போய்விட்டு பக்கத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு நேராகச் சென்றதே குறைவு. சாயங்காலம் வாசலில் அவன் தென்பட்டவுடன் ‘ஓடிவாடியே’ என்று மனைவியை அழைப்பதுதான் தாத்தாவின் தினவழக்கம். அவரது கத்தி அழைக்கும் குரல் மற்றும் புளங்காகிதமே பக்கத்து வீட்டில் இருக்கும் அம்மாவுக்கு அவன் வருகையை உணர்த்திவிடும். பாட்டி நடந்து வரும்போதே சாப்பிடுவதற்கு அவனுடைய வாயும் வயிறும் தயாராகிவிடும்.
ஒருமுறை பாட்டியை எட்டி உதைத்ததை பார்த்தவுடனே அவனை அறியாமல் அழுதுவிட்டான். பாட்டியும் உதையை வாங்கிக்கொண்டு முனகிக்கொண்டே ஒரு மூலையில் போய் அமர்ந்து ‘இந்த சவத்து கிழவனுக்க காலு வெளங்காத போவ. காலனுக்க விளி இதுக்கு வரல்லியே,’ என்றவாறே சுடலையை அழைத்து அணைத்துக்கொண்டாள் . கண்ணீர் நிற்காமல் வடிந்துக்கொண்டே இருந்தது. அவளும் துடைத்துக்கொண்டே இருந்தாள். அது நடந்து ஏழெட்டு வருடங்கள் இருக்கலாம்.
சுடலை அவன் தாத்தா நகம் வெட்டுவதற்கென இருக்கும் நகவெட்டியை உபயோகித்து பார்த்ததேயில்லை. எப்போதும் கையில் கொண்டு நடக்கும் சிறு வெட்டுக்கத்தியால்தான் லாகவமாக வெட்டுவார் . ஆனால் ஒரு நாள் கூட வெட்டிய நகங்களை வயலில் வீசவே மாட்டார். அவன் சொல்லியும் பார்த்தான், “பக்கத்தில் ஓடும் சிறு ஓடையில் வீசுங்க”, என. அவர் அதற்காக திட்டியதுடன் தண்ணீரில் எக்காரணத்தைக் கொண்டும் எச்சில் துப்பவோ, குப்பைகளை வீசவோ கூடாது என்றும், நகம் மூதேவியின் அம்சம் என்பதால் அதை யாருடைய காலடியும் பதியாத இடத்தில்தான் களைய வேண்டும் என்றதும் அவனுக்கு நினைவுள்ளது .
இதையேதான் பாட்டியும் சொன்னாள், நகங்கள் காளானாய் உருமாறும் என. அதை வயலில் போட்டால் சாமிகள் கோபமாவார்கள் என்றும், நீரில் போட்டால் தண்ணீர் கிடைக்காமல் கடைசி காலத்தில் இறக்க நேரும் எனவும்.
தாத்தா நகங்களை சிறு காய்ந்த இலையில் சேகரித்து எடுத்து வந்து தார்ச்சாலையின் ஓரத்தில் போடுவார், அல்லது இவனிடம் போடச்சொல்வார். இவன் பயத்தால் ஒரு நகத்தைக்கூட சிந்தாமல் அவ்வளவு தூரம் நடந்து வந்து போட்டுச் செல்வான். அவரும் அதை தொலைவில் இருந்து கவனிப்பார். பாட்டி சொல்வாள், நகக்கண்ணில் தோன்றும் வெள்ளைப்புள்ளிகள் அதிர்ஷ்டத்தின் வருகை என. ஒவ்வொரு புள்ளிக்கும் புதுத் துணி கிடைக்கும் எனவும், கிடைத்தவுடன் புள்ளிகள் மறைந்துவிடும் என்றும். நகம் அவனுக்கு வேகமாக வளரும். ஆனால் தங்கைக்கு அப்படி அல்ல. பள்ளி விடுமுறைக் காலங்களில் அதில் அவ்வளவு அழுக்கு படியும். அதே கைகளுடன் சாப்பிடவே பாட்டி விடமாட்டாள். ஆனால் அப்போதெல்லாம் தாத்தா தான் அவனுக்காக பேசுபவர்.நேற்று இரவிலும் இவன் வெற்றிலை பாக்கை கல்லில் வைத்து இடித்துக் கொடுத்தான். இரவு பதினொரு மணிவாக்கில்தான் கண் திறக்க முடியவில்லை என பாட்டியை கூப்பிட்டார். பாட்டி ஓடிச்சென்று அவரை எழுப்பப் பார்க்கும்போதே நிலைகுத்திய பார்வை. பாட்டியின் அரட்டல் கேட்டுத்தான் சுடலை எழுந்தான். பக்கத்து வீட்டில் இருக்கும் அப்பாவை அழைக்க ஓடினான். அவர் அதற்கு பக்கத்து வீட்டில் இருக்கும் டிரைவர் அண்ணாச்சியை கூப்பிட ஓடினார். அவரது கருப்பு அம்பாசிடர் காரில்தான் தூக்கிச் சென்றனர். ஆஸ்பத்திரியில் சேர்க்கும்போதே தாத்தா செத்துப்போவார் என சுடலைக்கு தோன்றியது. அதுதான் நடந்ததும். ஒரு மணி அளவில் உடம்பை எடுத்துப் போகச் சொல்லிவிட்டனர்.

இப்போது அவனது அப்பாவும், பாட்டியும் இவனுடன் அழுது கொண்டே வந்தனர். வாகனம் வந்து நின்றதும் சுடலையின் அம்மாவின் அழுகையும், அந்த இரவில் எதிரொலிக்கத் தொடங்கியது. மரங்களில் இருந்த காகங்கள் கத்திக்கொண்டே பறந்தது. தாத்தாவின் காலை இவன் பிடித்துக் கொண்டான். பிணத்தை அப்புறப்படுத்தி அதை வீட்டு வெளி வராந்தாவில் வைத்தனர். வெற்றிலைக் கறைகூட அவர் உதட்டில் இருந்தது.
பக்கத்து வீடுகளில் இருந்து ஒவ்வொரு ஆளாக வரத்தொடங்கினர். சுடலையின் அப்பாவிடம் பேசிவிட்டு ஒவ்வொரு ஆட்களையும், சுடலையை ஒத்த பதின்வயதுடைய பசங்களையும் ஒரு பெரியவர் ஒவ்வொரு ஊருக்கும் சென்று தகவல் தெரிவிக்க பிரித்து வழி சொல்லி, பெயர் சொல்லி, அடக்கம் செய்யப்போகும் நேரத்தைச் சொல்லி அனுப்பிக்கொண்டிருந்தார்.
சுடலை மட்டுமே இப்போது அவ்விடத்தில் இளவயதில் இருப்பவன். அவனது அப்பா வேகமாக வந்து தாத்தாவின் நண்பரிடம், புகைப்படத்தையும் இறப்புச் செய்தியையும் பத்திரிக்கைகளில் போடவேண்டும், என்றார். அதற்கு, தம்பி கொஞ்சம் பணம் ஆகுமே என்றவரிடம், எவ்வளவு செலவானாலும் அது மட்டும் செய்யாமல் இருக்கவே முடியாது, என்று கொஞ்சம் ஆவேசமாக சொன்னார் அப்பா.
ஏதாவது பழைய புகைப்படம் ஒன்றை தேடி எடுத்துவரச் சொன்னார் சுடலையிடம். தாத்தாவின் பாதி உடைந்த அலமாரியில் எதுவும் இல்லை. வீட்டில் பெரிது பெரிதாக காந்தி, நேரு, இந்திரா, ஏன் லால் பகதூர் சாஸ்திரியின் புகைப்படம்கூட இருந்தது. ஆனால் அவரின் ஒரு புகைப்படமும் சிக்கவில்லை. நினைவில் வந்தவனாய், அப்பாவின் கல்யாண படத்தில் அவர் பாட்டியுடன் உட்கார்ந்துகொண்டு இருப்பதைப் போன்ற படத்தை எடுக்க வீட்டுக்குச் சென்று கொஞ்சம் மங்கிய அந்த கருப்புவெள்ளை படத்தை எடுத்துக்கொண்டு பெரியவரிடம் காட்டினான். அவர் கையில் இருந்த நீண்ட டார்ச் லைட்டை அதன்மேல் அடித்துப்பார்த்தார். இது அவ்வளவு தெளிவில்லையே தம்பி, வேற இருக்குதாணு பாருப்பா, என்றார். அப்பா அதை பார்த்துக்கொண்டே வேகமாக அருகில் வந்து, இந்த ஒண்ணுதான் கொஞ்சம் தெளிவா இருக்கு, என்றார்.
சரி… என்றவர், இப்போ பத்திரிக்கை ஆபீஸ் அனுப்ப வேற ஆள் இல்லை, தம்பியை போகச் சொல்லலாமா, என்றவாறே அப்பாவைப் பார்த்தார். சரி, என்றவர் கையில் கொஞ்சம் காசை திணித்துவிட்டு நடந்தார். சுடலை புகைப்படத்துடன் பல பத்திரிக்கை அலுவலகங்கள் இருந்த நாகர்கோவிலின் முக்கிய சாலையை அடைந்தான்.
முதலில் இருந்த ஆங்கில பத்திரிக்கை அலுவலகத்தின் வாசலிலேயே இறப்புச் செய்திகளுக்கு இப்போது ஐந்து சதவிகித தள்ளுபடி விலையில் பதிப்பித்து தருவதாக எழுதப்பட்டிருந்தது. இறப்புச் செய்தி அவ்வளவு சந்தோசமான செய்தி என எப்படி இந்த மடையர்கள் யோசித்தார்கள்? ஒரு வேளை செத்தவர்கள் செத்த பின்னும் பிள்ளைகளுக்கு சேமித்துக்கொடுக்கிறார்கள் என்ற நினைப்பில் எழுதி வைத்திருக்கலாம். அந்தச் செய்தியே அவனுக்கு கோபத்தையும், கசப்பையும் அந்த பத்திரிக்கை மேல் தோன்றச் செய்தது. தாத்தா எக்காரணத்தைக் கொண்டும் அந்த பத்திரிக்கையில் மட்டும் வரவே கூடாது என்று முடிவெடுத்தவனாய் பக்கத்து அலுவலகத்துக்குச் சென்றான்.
அங்கு இப்போது இது சேவை என்பதால் சரியான காசுக்கு பதிலாக இருபத்தைந்து சதவிகிதம் விலை குறைத்துள்ளதாக பறைசாற்றி எழுதி வைத்திருந்தது. மனிதாபிமான செயல் தான் என்பதால் உள்ளே சென்றான். அங்கிருந்தவரிடம் விவரத்தை சொன்னபின் அவர் சொன்ன விளம்பர விலை இவன் கையில் வைத்திருந்ததைவிட இருபத்தைந்து சதவிகிதம் அதிகமாகதான் இருந்தது.
அப்பா ஏன் பத்திரிக்கையில் போட பிரியப்படுகிறார், சுடலைக்குத் தெரிந்து அந்த ஊரில் அப்படி யாருமே போடுவது வழக்கமில்லை. ஒருமுறை சுடலை வீட்டு வராண்டாவில் விளையாடிக்கொண்டிருந்த நேரம் வெற்றிலைக்கான புகையிலை வாங்கி வந்த பொட்டலத்தில் இருந்த பழைய செய்தித்தாளை பார்த்துக்கொண்டே தென்னைக்கு உரமேற்ற குழி தோண்டிக்கொண்டிருந்த அப்பாவிடம், இதற்கெல்லாம் ரொம்ப காசு கேப்பானுகளோ?, என்று செய்தித்தாளில் இருந்த யாரோ ஒருவரின் மரண அறிவிப்பை பார்த்துக்கொண்டே கேட்டார். அப்பாவும் பெரிய சிரத்தையில்லாமல், ஆமா… கொஞ்சம் கேப்பானுவ, என்றார். போட்டு எதுக்கு? யாருக்காக?, என அப்பா முணுமுணுத்ததும் நினைவுக்கு வந்தது. ஒருவேளை தாத்தாவின் ஆகப்பெரிய கடைசி கனவாக தன் புகைப்படமும் பெயரும் மரணத்துக்குப் பின் செய்தித்தாளில் வரவேண்டும் என்பதாகவே இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் ஏன் அந்த செய்தித்தாளின் கிழிந்த துண்டை கூரையின் இடையில் திருகி வைத்துக்கொண்டார்.
இப்படிச் செய்வதால் சுற்றியிருக்கும் பத்தோ பதினைந்தோ கிராமங்களைத் தாண்டி எங்குமே செல்லாத, யாரையுமே தெரியாத, எந்த சொந்த பந்தமும் இல்லாத, தாத்தாவை யார் அடையாளம் காண்பார்கள். அப்படி பார்த்து ஒருவர்கூட வருவார் என நம்பிக்கை சுடலைக்கு ஒரு துளி கூட கிடையாது. இதைவிட பெரிய விஷயம் இவர்கள் வீட்டில்கூட செய்தித்தாள் வரவழைப்பதும் இல்லை. ஏன் பக்கத்து வீடுகளிலும் இதே தான் நிலை.
அப்பாவுக்கு ஆங்கிலமும் தெரியாது. தமிழும் தட்டுத் தடுமாறிதான் வாசிப்பார். தாத்தாவுக்கு ஒரு எழுத்தாவது தெரியுமா என்பது சந்தேகம். அப்படியிருந்தும் ஏன் இதற்கு விருப்பப்படுகின்றனர். சந்தேகத்துடனே இவன் அடுத்திருந்த பத்திரிக்கை அலுவலகத்தில் நுழைந்துவிட்டான்.
அங்கிருந்தவர் என்ன என்பது போல் தலையை மட்டுமே ஆட்டிக் கேட்டார். இவன், செத்த செய்தி போடணும், என்றான். அவர் மெதுவாக எழுந்து வெளியே சென்று வாயில் இருந்த வெற்றிலையை துப்பினார். நெருங்கி அருகில் வந்து தோளில் கைவைத்து உட்காரச் சொன்னார்.
பெயர், விலாசம், வயது போன்ற தகவல்களை கேட்கத்தொடங்கினார். சுடலைக்கு பயம் வந்துவிட்டது. வெருக்கென எழுந்தவன், எவ்வளவு ஆகும், எனக் கேட்டான். அவர் பதிலே சொல்லாமல் அமரச் சொன்னார், சைகையில். தயக்கத்துடனே இரும்பு நாற்காலியில் மீண்டும் அமர்ந்தான். அவர் கையை நீட்டி வாயைக் குவித்து தலையை கொஞ்சம் மேலாக தூக்கிக்கொண்டு, போட்டோ இருக்கா?, என்றார்.
இவன் கையில் இருந்த போட்டோவை நீட்டினான். அவர் அந்த போட்டோவை பார்த்துவிட்டு, தாத்தா உன்னை போலதான், என்றார். பின் மெதுவாக உள்ளறைக்கு எழுந்து நடந்தார். சுடலை அறையின் சுற்றும் முற்றும் தெளிவாக பார்த்தான். அங்கு கிடந்த பத்திரிக்கைகள், படங்கள் எதிலும் தமிழ் எழுத்தே இல்லை. அவனுக்கு அப்போதுதான் உறைக்கத்தொடங்கியது அது மலையாள பத்திரிக்கை விளம்பர அலுவலகம் என்று. என்ன செய்வது என்று நினைக்கும்போதே அவர் வந்து போட்டோவைத் திருப்பி கையில் கொடுத்துவிட்டு கிளம்பச் சொன்னார். நாளைய பத்திரிக்கையில் செய்தி வரும் என்றவர் மீண்டும் வெற்றிலை துப்ப வெளியே சென்றார். அவர் உள்ளே வரும்வரை காத்திருந்துவிட்டு, காசு எவ்வளவு, எனக் கேட்டான். இதற்கு இலவசம் தானே, அவர் சாவதானமாகச் சொல்லிவிட்டு மீண்டும் உள்ளறைக்கு திரும்பினார்.
சுடலைக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. நாளைக்கு மலையாள பத்திரிக்கைகள் உலகம் முழுவதும் சென்று தாத்தாவின் இறந்த செய்தியை அறிவிக்கும். மரண செய்தி கேட்டு பல பேர் நிச்சயம் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் ரோட்டை கடந்து நடக்கத்தொடங்கினான்.
**********************************************************
இக்கதை இணைய இதழில் சிறந்த கதை என தெரிவுச்செய்யப்பட்டு        தனித்தன்மையுடன்கூடிய இணைய பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.   https://padhaakai.com/2018/03/10/burying-memories/
இதேபோல் பலரது சிறந்த கதைகளை படிக்க பதாகை  இணையத்தளத்தை பார்வையிடவும்.

Monday, 25 December 2017

சிறுகதை - நாதியற்றவர்கள் ( இணைய மாத இதழில் வெளிவந்தது )

நாதியற்றவர்கள்



                   நாங்கள் பல நாட்கள் அப்பா இரவு பதினோரு மணிக்குப் பின் வந்து சேரும் நேரத்தில் வாங்கி வரும் ஆளுக்கு இரண்டு சோளா பட்டூராதான் எனக்கு மிகவும் பிடித்த ஒரே உணவு . அவர் அந்நேரத்திலும் ஊட்டிக்கூட விடுவார் . என் அப்பாவின் கருணை மற்றும் அன்பைத் தவிர எதுவுமே எனக்கு நினைவில் வருவதேயில்லை, எவ்வளவு யோசித்தாலும். நான் இப்போதும் நம்பத் தயாராக இல்லை, மதராசியில் ஒரு ஆள் எட்டொன்பது மணிநேரம் வேலை செய்தாலே நானூறு ரூபாய் சம்பளம் தருவார்கள் என்று நண்பனின் அப்பா சொன்னதை.
அவரை, போன மாதம் நண்பனை காணச் சென்றபோது, நெடுநாட்களுக்குப் பின் சந்தித்தேன். அப்போதுதான் எனக்கு சைதாப்பேட் என்ற ஒரு வார்த்தை கேள்விப்பட முடிந்தது. மிகவும் வித்தியாசமாக இருந்தது.  எங்கள் ஊர் பெயர்கள் எல்லாம் ஆண்கள் கோபத்துடன் அடிக்கப் பாயும் போது போடும் கூச்சலைப் போல இருக்கும். அதைக் கேட்டு வளர்ந்த எனக்கு ஒரு பெண்ணை ஒரு அம்மா அன்பாகவோ சற்று அதட்டியோ கூப்பிடுவதைப் போன்ற ஒரு பெயராகதான் சைதாப்பேட் என்ற வார்த்தை அவர் சொல்லும்போது தெரிந்தது. பிஜனோர் என்ற ஊரில் தாழ்ந்த சாதியில் நான் பிறந்ததாக ஆ.எம்.மிஸ்ரா என்ற ஆசிரியர் ஒன்றாவது படிக்கும்போது சொன்னது புரியவே எட்டாவது வரை படிக்க வேண்டியிருந்தது.
ஜஸ்ராம் யாதவ் என்றவரிடம் தான் அப்பா வேலை பார்த்துவந்தார்.
முகல்சராய் நிறுத்தத்திலிருந்து மதராஸ் செல்லும் விரைவு ரயில் வண்டி கான்பூர்,ஜான்சி, இட்டார்சி, நாக்பூர், பல்லார்ஷ்ஷாவாராங்கல், விஜயவாடா மார்க்கமாக போவதாகவும், இன்னும் சற்று நேரத்தில்  புறப்படும் எனவும் அம்மாவின் குரலையொத்த ஒரு பெண் மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பது என் அம்மாவின் கவலை தோயிந்த முகத்தை நினைவுறுத்திக்கொண்டே இருந்தது.
நானும் நண்பனின் அப்பாவும் இந்த ரயிலில் ஏறி சுமார் ஒரு மணிநேரமேனும் தாண்டி இருக்கும். அவள் புறப்படும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாள். ஆனால் புறப்படுவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை. வெயில் ஜன்னல் வழியே உள்ளே அடித்துக்கொண்டிருந்தது. நண்பனின் அப்பாவின் முழுப் பெயர் எனக்கு இப்போதும் தெரியாது. நானும் அவரை அப்பா என்று தான் அழைத்துக்கொண்டு இருக்கிறேன். ரயில் ஏற இந்தப் பெரிய கட்டிடத்தின் முன்வரும்போதே அவர் திரும்பத் திரும்ப சொன்ன ஒரே விஷயம் எக்காரணம் கொண்டும் இருக்கையில் அமர்ந்த பின்பு இடத்தை விட்டு நகரக்கூடாது. அப்படி நகர்ந்து விட்டால் நாளை மறுநாள் வரை நான் கீழேயோ அல்லது கக்கூசின் அருகிலோதான் இருக்க நேரும் என்று.
ஒரு ரயில் பெரும் சத்தத்துடன் எங்கள் ரயிலின் அருகில் வந்து நின்றது.  அதில் ஒவ்வொரு இருக்கையிலும் ஒருவர்தான் இருந்தார். நான் இருந்த இருக்கையில் சுமார் ஆறு பேர் இருந்தோம். ஒருவேளை அந்த ரயில் திரும்பி வருவதாக இருக்கலாம். நாங்கள் இப்போதுதானே போகப் போகிறோம்.
எனது பழைய பள்ளிக்கூட கிழிந்த பையில்தான் எனது இரண்டு கால்சட்டை மற்றும் கொஞ்சம் பழைய சட்டை மூன்றையும் அடுக்கி வைத்திருந்தேன். இருபுறமும் பை கொஞ்சம் கிழிந்திருந்தது. ஆனாலும் அது ஒரு அழகான பைதான். என் அம்மாதான் இவரிடம் என்னையும் மதராஸ் கூட்டிச் செல்லுமாறு கேட்டாள். முதலில், சின்னப் பையனை ஏன் அங்கு வரை அனுப்ப வேண்டும், இரண்டு வருடம் யாதவ்ஜியிடமே வேலைக்குப் போகட்டும் பின்னால் வேண்டுமானால் அங்கு அழைத்துச் செல்கிறேன்,என்று அம்மாவிடம் சொன்னபோது அம்மா எந்த பதிலையும் சொல்லாமல் அழுதுக்கொண்டு மட்டுமே நின்றாள். பின் அவராகவே சரி என்னோடே வரட்டும் என்றார்.என்னை நோக்கி, அடுத்த வெள்ளிக்கிழமை கிளம்பலாம் என்று சொன்னார்.
இன்று அந்த வெள்ளிக்கிழமை. அம்மா அழகான இரண்டு பெரிய ஆலூ பராட்டாவை நெடுநாள்களுக்குப்பின் மிகவும் பிடித்த புதினா சட்டினியுடன் தந்தாள். இன்னும் ஒன்று சாப்பிட ஆசை இருந்தது. ஆனால் அந்தப் பாத்திரத்தில் இருந்ததே அதிகம் போனால் நாலோ ஐந்தோ பராட்டாவுக்கான மாவுதான். வீட்டில் அம்மா, என் மூன்று தங்கைகள்,மற்றும் மங்கலாக கண்தெரியும் அப்பா வழிப்பாட்டி, எல்லோர்க்கும் இவ்வளவு மாவில்தான் வயிற்றை நிரப்ப வேண்டும். எனக்குத் தெரியும், அவர்களுக்கு அம்மா இனி தரப்போகும் பராட்டாக்கள் நான் சாப்பிடுவதில் பாதி அளவுக்கூட இருப்பது கடினம். அம்மா எப்போதும் பின் கதவினை ஒட்டியே அமர்ந்திருப்பாள், நினைவுதெரிந்த நாள்முதல்.
பக்கத்து ரயில் மெதுவாக செல்லத் தொடங்கியது. ஆனால் கொஞ்ச நொடிகள் கழிந்தபோது புரிய தொடங்கியது, நான் இருந்த ரயில்தான் முன்னால் சென்றுகொண்டிருப்பது. மேலே காற்றாடி வேகமாகச் சுழலும் சத்தம் இப்போது தெளிவாக காதில் விழத் தொடங்கியது.ஆனாலும் வியர்வை நிற்கவே இல்லை. காலை நீட்டக்கூட முடியவில்லை. அதிகமான ஆட்கள் நிரம்பி இருந்தனர். வேறு ஒரு ரயில் இப்போது கொஞ்சம் தூரத்தில் நின்றிருந்தது.அதைப் பார்க்கும்போது ஒன்று புரிந்தது, பலர் இப்படிச் சேர்ந்து இருக்கவில்லை.தனித்தனியாகதான் ஒவ்வொரு ஆளும் இருந்தனர். ஒரு பெட்டியில் மட்டுமே எங்களைப் போல நிறைய பேர் கூடி இருந்தனர். நான் அப்பாவிடம் கேட்டேன், ஏன் அந்தப் பெட்டிகளில் கூட்டமே இல்லை? அது முன்னமே பணம் கொடுத்து தனித் தனி இருக்கை அவர்களுக்கென உடம்படி செய்யப் பட்டதென்று சொல்லி  நாங்கள் இப்போது வெளியிலிருந்து பயணச் சீட்டு வாங்கி வந்ததையும் நினைவுபடுத்தினார். அது காசு அதிகம் என்றும் சொல்லிக்கொண்டே, பக்கத்தில் இருந்த வேறு ஒரு பெரியவரின் எங்கே போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தொடங்கினார்.
என் பக்கத்தில் இருந்த ஒருவர் காலின் இடையிலிருந்து ஒரு பழைய பெரிய பிளாஸ்டிக் நெளிந்திருந்த பாட்டிலில் இருந்து தண்ணீரை ஆடி ஆடி கஷ்டப்பட்டுக் குடித்தார்.கொஞ்சம் என் தொடையிலும் தெறித்தது. அவர் பாட்டிலை மூடி மீண்டும் அதே பையில் வைத்தார்.  நான் போட்டிருந்த கால்சட்டை அப்பா சுமார் ஐந்தாறு வருடங்களுக்கு முன் வாங்கித் தந்ததுஎனக்குப் பிடித்த நிறமே சிகப்புதான். அவரிடம் கெஞ்சி தான் இந்த நிறத்தை எடுக்க முடிந்தது. ஒரு வேளை அது தீபாவளியாகவோ அல்லது ஹோலியாகவோ இருக்கலாம். எனக்குச் சரியாக நியாபகம் இல்லை. அம்மாவிடம் கேட்டால் சரியாகச் சொல்வாள்.  ஆனால் இதை எடுத்துத் தந்த வருடம்தான் அவர் செத்துப்போனார்.  யாதவ்ஜியின் கக்கூஸ் தொட்டியில் ஏதோ அடைப்பு என அதிகாலையிலே அவர் வீட்டின் முன் உள்ள கட்டிடத்தில் கடை வைத்திருக்கும் ஸ்ரிவாஸ்தவா வந்து சொல்லிவிட்டு போனார். அப்பா அவசரம் அவசரமாக எழுந்து அவர் பின்னால் ஓடியதைப் பாட்டியின் அருகில் கிடந்து அரை உறக்கத்தில் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் பத்து மணிக்கு பள்ளியில் போய் அமர்ந்த பத்தாவது நிமிடத்தில் என் நண்பனின் அப்பாவான இவர்தான் பள்ளிக்கு வந்தார். ஆசிரியரிடம் ஏதோ சொன்னவர் என்னிடம் எதுவும் சொல்லாமல் என் கையைப் பிடித்துக்கொண்டார்.
எனக்கு நன்றாக நினைவு உள்ளது, அன்று எனக்கு அதிகமான ஜலதோஷம். மூக்கு நிற்காது வடிந்துக் கொண்டிருந்தது. அவர் என் கையை கொஞ்சம் அழுத்திதான் பிடித்திருந்தார். அந்நேரம் பார்த்து காக்கி நிக்கர் அவிழப் பார்த்தது. அதை ஒரு மாதமாகவே ஒரு முட்டுப்பின்னால் தான் கோர்த்து வைத்திருந்தேன். நான் வேறு தூக்குப் பையை வலது கையில் போட்டிருந்ததால் இடது கையால் என் நிக்கரைப் பிடிக்க கொஞ்சம் வசதி இருந்தது. அவர் நேராக யாதவ்ஜியின் வீடு இருக்கும் சாலைக்குதான் என்னை அழைத்துச் சென்றார். பல நாட்கள் அப்பாவுடன் இந்த வழியாக வந்துள்ளேன். யாதவ்ஜி இருந்தால் என்னை வீட்டின் உள்ளே செல்ல விடமாட்டார்கள். என்னை அவர்கள் பசு கட்டியிருக்கும் தொழுவத்தின் அருகிலூடே வீட்டின் பின் பக்கத்துக்கு கூட்டிச் செல்வார்கள். ஆனால் யாதவ்ஜி வீட்டில் இல்லை என்றால் வலது புறமாக இருக்கும் கதவு போட்டு மூடி வைத்திருக்கும் சிறிய வழியோடு அழைத்துச் செல்வார் அப்பா.
நான் தூரத்தில் வரும்போதே கடைசி தங்கை, நண்பனின் அம்மா கையில் இருப்பது தெரிந்தது. ஒரு பெரும் அழுகையின் சத்தம் நெருங்க நெருங்க கேட்கதொடங்கியது. சுமார் இருபது முப்பது பேர் நின்றிருந்தனர். பக்கத்தில் நெருங்கும்போதே அது அம்மாவின் குரல் என அடையாளம் கண்டு கொண்டேன். என் அண்ணன் மற்ற இரண்டு தங்கைகளின் கையைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான். நின்றிருந்த கால்களின் இடைவெளி வழியே என் அப்பா கீழே மல்லாந்து படுத்திருப்பது தெரிந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.அப்பாவின் கண்கள் திறந்திருந்தன. அப்பாவின் உடம்பில் இருந்துதானோ என்னவோ, மல வாடை அடித்துக்கொண்டிருந்தது. அம்மா நெஞ்சில் அடித்து அழுதுகொண்டு இருந்தாள்.அப்பா வெறும் ஒரு துண்டை மட்டுமே கட்டி இருந்தார். ஒரு புறம் தொடைக்கு மேல் அது ஏறி இருந்தது.
யாதவ்ஜியை அங்கே காணவே இல்லை. என் நண்பனின் அப்பாவுடன் பார்த்துள்ள இரண்டு பேர் யாதவ்ஜியின் தம்பியுடன் ஏதோ பேசிக்கொண்டு இருந்தனர். அவர் இவர்கள் இரண்டு பேரையும் அடிக்கப் பாய்ந்து வந்தார்.  சிலர் அவரைத் தடுத்தனர். பின்னர் அப்பாவை உடனே அங்கிருந்து தூக்கி கொண்டு போக வேண்டும், என்று கத்தினார். என் அப்பா அவசரம் அவசரமாக போட்டுக்கொண்டு ஓடிய அந்த அக்குள் கிழிந்த சட்டை அந்த வீட்டின் முன் மரத்தில் தொங்குவதை என்னால் கண்டு நிற்கவே முடியவில்லை. அப்பாவின் உடம்பை எனக்கு பார்க்கவே தைரியப்படவில்லை, சட்டையில்லாமல். நேராக ஓடிச் சென்று அதை எடுத்து வந்தேன். அதில் இருந்த ஒரு பான் பராக்கும்ஒரு கட்டு பீடியும் கீழே விழுந்தது. ஐந்து ரூபாய் நாணயம் இரண்டு கீழே சிதறி ஓடியது.  நான் அனைத்தையும் எடுத்து என் நிக்கரின் பாக்கெட்டில் போட்டுவிட்டு சட்டையை அப்பாவின் அருகில் இருந்த பாட்டியிடம் கொடுத்தேன். அவள் அதை வாங்கி அப்பாவின் முகத்தை மெதுவாகத் துடைத்தாள். ஒரு பைக்கை யாரோ கொண்டு வந்தனர். என் நண்பனின் அப்பா (இவர்தான்) ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தார். அப்பாவை இரண்டு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர். வண்டியை எடுத்து வந்தவர் சற்று தள்ளி நின்றுகொண்டார்.
பின்னால் என் அண்ணனை ஏறச் சொன்னார்கள். அண்ணன் கண்ணீருடன் ஏறி அமர்ந்து அப்பாவை அணைத்துக்கொண்டான். வண்டியை மெதுவாக முன்னகர்த்திச் செல்லத் தொடங்கினர். சண்டை போட்டுக்கொண்டிருந்த அந்த மாமாவின் கையில் யாதவ்ஜியின் தம்பி கொஞ்சம் காசு கொடுப்பதைக் கண்டேன். பின் அனைவரும் வண்டியின் பின்னால் வேகமாக நடக்கத் தொடங்கினோம். அம்மா அலறிக்கொண்டே வண்டியின் பின்னால் நடந்தாள். நான் தங்கைகளை பிடித்துக்கொண்டே வந்தேன். தலையை விரித்த நிலையில் இருந்த பாட்டி தடுமாறி கீழே விழவே மீண்டும் பேட்டா…பேட்டா…என்ற கதறலுடன் எழுந்து ஓடத் தொடங்கினாள். கொஞ்சம் தூரம் சென்றவுடன் என்னை அறியாமல் யாதவ்ஜியின் வீட்டைத் திரும்பிப் பார்த்தேன். அங்கு யாதவ்ஜி மேலே மொட்டை மாடியில் நின்று எங்களைப் பார்த்துக்கொண்டு இருந்ததை தூரத்திலிருந்து கண்டேன். வேறொரு ரயில் மறுபுறம் எங்கள் எதிர்த் திசை நோக்கி சத்தம் எழுப்பிக்கொண்டே மிக மிக வேகமாகச் சென்றது.
இரண்டாவது நாள் மாலை வேளை எங்கள் வண்டி வேகமாக நெல்லூர் என்ற இடத்தை அடைந்தது. மிகக் கடுமையான மழையை அன்று பார்த்தேன், பல மாதங்களுக்குப் பிறகு.நான் இருந்த ஜன்னல் ஓரத்தில் மழை நீர் உள்ளே தெறித்தது. என்னுடன் இருந்த யாரும் நீரைத் தடுக்க சொல்லவேயில்லை. நேரம் செல்லச் செல்ல ரயிலின் வேகத்துடன் மழையின் வேகம் போட்டிபோடத் தொடங்கியிருந்தது. நாங்கள் மதராஸ் வந்து சேரும் வரை மழையும் எங்களுடனே பயணித்தது.
மக்களின் திரள் என்னை கொஞ்சம் பயமுறுத்தியது. மிகச் சரியாக சொல்வதென்றால் நாலாம் வகுப்பு படிக்கும்போது தாத்தாவுடன் அலகாபாத் கும்பமேளா சமயத்தில் கண்ட கூட்டத்தைப் போல் இருந்தது. மெதுமெதுவாக என் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டே ரயில் நிலையத்தை விட்டு வெளியே கொண்டு வந்தார் அப்பா.ரயில் நிலையத்தின் முன்னால் முட்டளவு நீர். அந்த இடத்தில் ரயில்  கட்டிடத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என நினைக்கிறேன். எங்கும் இருட்டு. இந்தக் கட்டிடத்தில் இருந்து வந்த வெளிச்சத்திலும் வாகனங்கள் அங்கும் இங்கும் மெதுவாகச் செல்லும்போது தந்த வெளிச்சத்திலும் நாங்கள் நடக்கத் தொடங்கினோம். அப்பா அவரது நண்பருக்கோ, வேலை பார்க்கும் முதலாளிக்கோ பல முறை கைபேசியில் பேச முயன்றுக்கொண்டே இருந்தார்.கோபத்தில் அவர் யார் அம்மாவையோ  வசவால் திட்டிக்கொண்டே நடந்தார். நான் எதுவும் கேட்க பயந்துக்கொண்டே பின்னால் அவருடன் இறங்கி நடக்கத்தொடங்கினேன்.
ஏதோ குகை போல ஒரு வழி கீழே இறங்கிச் செல்ல தொடங்கியது. அதில் ஒரு இரண்டு மூன்று படி இறங்கியவுடன் கீழே நின்ற காவலர் மேலே திரும்பிச் செல்ல கைகாட்டினார்.நானும் அப்பாவும் கீழே எட்டிப் பார்த்தோம். ஒரு ஆள் கழுத்தளவு தண்ணீரில் நின்று அந்த காவலருடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அப்பா சொன்னார், மழை நன்றாக தொடர்ந்து பெய்கிறதால்தான் இவ்வளவு தண்ணீர் உள்ளே வந்துள்ளது. அதனால் சுரங்கப்பாதை வழியே மறுபுறம் செல்ல முடியாது. எனக்கு ஆசையாக இருந்தது.  நான் இதுவரை மண்ணுக்குள் இறங்கி நடந்ததே இல்லை. பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்த நாட்களில் பெரிய விருப்பம் இருந்தது. என் ஊரில் உள்ள ராம்நகர் கோட்டை முதல் ராம்நகரின் வேறு பகுதியில் உள்ள துர்கா மந்திர் வரை அப்படி ஒரு பாதை உண்டு என கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஆனால் இப்போது அது மூடி வைக்கப்பட்டுள்ளதாக அம்மா சின்ன வயதில் சொல்லுவாள். நான் பல நாள் நினைத்ததுண்டு, நாங்கள் புது வீடு கட்டும்போது ஒரு கிணறு தோண்டவேண்டும் என்றும் அப்படிச் செய்யும்போது சுரங்கப்பாதை என் கிணற்றைக் கிழித்து இரண்டு பக்கமாக போகும் என்றும் அதில் இறங்கி நடந்து திரும்பி வரவேண்டும் என்றும். ஆனால் இன்று அந்த ஆசையில் பாதியை இந்த மழை இல்லாதிருந்தால் நிவர்த்தி செய்திருக்கலாம். என்னுடைய தலையில் பள்ளிக்கூடப் பையை வைத்துக்கொள்ள அப்பா சொன்னார். புது இடம் மற்றும் புது மழையினால் ஒரு வேளை காய்ச்சல் வந்தால்? நான் அவர் சொன்னது போலவே செய்தேன். மழை காரணமாக செல்போன் சமிக்ஞைக்களும் இல்லை என்றார்மிகவும் மெதுவாக ஒவ்வொரு ஆளின் பின்னாலாக நடந்து சென்னை பார்க் என்ற சிறிய ரயில் நிலையத்தை அடைந்தோம். அப்பா பயணச்சீட்டு வாங்க வரிசையில் போய் நின்று கொண்டார். நானும் அவரின் அருகில் போய் நின்றேன். மழை பேய்க்காற்றுடன் இப்போதும் அடித்துக்கொண்டுதான் இருந்தது.
மழையின் காரணமாக ரயில் இன்னும் கொஞ்ச நேரம் கழித்தே வரும் என்று அறிவித்தனர். அங்கும் மிக அதிக கூட்டம்.  பட்டணம் என்பதன் பொருளே எனக்கு இப்போதுதான் புரியத்தொடங்கியிருந்தது. அப்பா என்னிடம் பேசிக்கொள்ளவே இல்லை. ரயில் மிக மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. நான் வந்த வண்டியைப்போல மிகப்பெரிய முன்பெட்டி இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அதில் ஏறி நின்றோம். ரயில் மெதுமெதுவாக நகர்ந்தது. ரயிலில் யாருமே எதுவுமே பேசாமல் இருந்தது எனக்கு புதியதாக தெரிந்தது. இந்த மக்கள் யாரிடமும் பேசமாட்டார்கள் போல…! ரயில் ஒவ்வொரு இடமாக நின்று கொண்டே சென்றது. ஒரு இடத்தில் அதிக நேரம் நிறுத்தி இருந்தனர். பிறகு தெரிந்ததுரயில் அதற்கு மேல் போகாது என. ஏதோ ஆற்றின் மேல் தண்டவாளத்தைத் தாண்டி தண்ணீர் செல்லத் தொடங்கியிருப்பதாக யாரோ சொல்வது கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இறங்கி நடக்கத்தொடங்கினர்.
அப்பா என்னிடம் நடந்தே போய்விடலாம்பக்கம்தான் அவர் குடியிருக்கும் வீடு என்றார்.மழையில் மீண்டும் நனைந்துகொண்டே நடக்கத்தொடங்கினோம். நாம் வந்த கெட்ட நேரம் என முனகிக்கொண்டே  நடந்தார். மிகப்பெரிய மின்னல் மழையைக் கிழித்து இறங்கியது.இடி முழக்கம் என் நெஞ்சில் சிறியதொரு பயத்தை விதைத்தது. எங்கோ தனிமையில் காட்டிலோ பாலைவனத்திலோ நடந்து செல்வதாகப்பட்டது.  கை கால் கொஞ்சம் நடுங்க தொடங்கியிருந்தது. அப்பா… ரயில் நின்ன இடம் பேரு என்ன என்றேன். மாம்பல் என்று சொன்னார். அடுத்த நிறுத்தம்தான் சைதாபேட் என்றும் அது வரை சென்று நிறுத்தி இருந்தால் இவ்வளவு நடக்க வேண்டியது இல்லாமல் போயிருக்கும் என்றும் சொன்னார்.அதோடு ரயில் நிலையத்தின் அருகில்தான் வீடு என்றும் வீட்டில் இருந்தால் ரயில் போவதைப் பார்க்கலாமாம். அந்த இடத்தில் இருக்கும் பாலத்தின் மேலே தான் தண்ணீர் செல்வதாக சொன்னார். ஏதோ சகதி நிறைந்த ஒரு தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினோம். அது வயலுக்குள் இறங்கி நடப்பதைப் போல தோன்றியது. எங்கும் இருட்டின் அமைதி. நீர். நீர். சகதி…. எங்கள் ஊரில் ஹோலி முடிந்த அடுத்த நாள் இப்படிதான் சாலைகள் எங்கும் ஆள் நடமாட்டம் இருக்காது. ஆனால் பட்டணமான இங்கு ஒரு மழை பெய்தால் வாகனங்கள் இல்லை, மின்சாரம் இல்லைஅவ்வளவு பேர் ரயிலில் இருந்து இறங்கியவர்கள் எங்குதான் சென்று மறைந்தார்களோ? நாங்கள் நடந்து செல்லும் பாதையில் இரண்டு மூன்று மாடுகள் நனைந்துகொண்டே நின்றிருந்தன. கொஞ்சம் தூரமாக பத்திருபது பன்றிகளும் ஒரு ஓலைக் குடிசையின் முன்னால் ஒண்டி நின்றுக்கொண்டிருந்தன.
நாங்கள் சென்று ஒரு இடத்தில் நின்றோம். தூரத்தில் செல்போனில்  இருந்து வரும் சிறிய வெளிச்சத்தால் அடித்துப்பார்த்தார். அதுதான் அந்த ஆறு. ஆறு நிறைந்து அதன் அலை மிக மெதுவாக கரையில் இருந்த ஒரு வீட்டின் வாசலில் மோதியபடி இருந்தது. ஆற்றின் நீர் குடிசையின் அருகிலேயே வேகமாக பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது கொஞ்சம் அதிர்ச்சியை தந்தது. ஏற்கனவே எனக்கு உடம்பும் குளிரால் நடுக்கம் கண்டிருந்தது. அப்பா மெதுவாக அவரின் கைப்பையில் இருந்த ஒரு சாவியால் கதவைத் திறந்தார். அதுவும் சிறிய ஒரு ஓலைக் குடிசை. நாங்கள் உள்ளே சென்று பைகளை வைத்துவிட்டு மாற்றுத் துணிகளை அணிந்துவிட்டு அமர்ந்தோம். அவர் மூலையில் ஒதுக்கி வைத்திருந்த மதுக் குப்பியை திறந்து வேகமாக இரண்டு மூன்றுமிடறு வாயெடுக்காமல் குடித்தார்.
என்னா குளிர்?
ஆமா
சாப்பிட வேணாமா? நாம படுத்து தூங்குவோம். வேணுமுன்னா ஒரு வாய் இதக் குடிச்சுக்கோ. குளிர் தெரியாது. உடம்பு ரொம்ப நடுங்குது. மழை வேற நிற்காம பெய்துக்கிட்டே இருக்கு. ராத்திரி எப்படியும் நின்றிடும்.  மதராஸ்காரன் மழை பாக்கிறதே இப்படி எல்லாம்தான். நம்ம ஊர் போல கிடையாது. தண்ணீர் இங்க ஊருக்குள்ள வரும்,இல்லன்னா ஏதாவது ஆபத்து அப்படின்னு தெரிஞ்சா சர்க்கார் துரிதமா உதவுவாங்க. நம்ம ஊர் கோயில்லகூட வருஷா வருஷம் மிதிபட்டு ஒரு ஆயிரம் பேர் சாவானுங்க. அங்க கடவுள் கூடகாப்பாத்த மாட்டார். ஆனா இங்க சர்க்கார் கடவுள் செய்ய வேண்டியதக்கூட செய்து தருவாங்க. ம்ம்ம்…. இப்போ கூட மழை நிற்கவேயில்லை அப்படீனா போலீஸ் வந்து சொல்லி நம்மள பத்திரமா கூட்டிகிட்டு போயிடுவாங்க. அதனால மழை நைட் நின்னாச்சுன்னா நாளைக்கு காலையில மாமூல் வாழ்க்கை தொடங்கிடும்.  இப்போ இருக்கிறத சாப்பிட்டு தூங்குவோம்என்றார்.
அப்பாவின் நம்பிக்கையும் அவரது பல வருட மதராஸ் வாழ்க்கையும் நிறைய கற்றுக் குடுத்திருக்கு இந்த ஊர் பற்றி. அரசாங்கத்தையும் மக்களையும் பற்றி. எங்கள் ஊரில் இருக்கும் அம்மாவையும், தம்பி தங்கையையும் யோசித்தேன். அழ ஆசை வந்தது.ஆனால் இவரைப் போல் இங்கே எவ்வளவு கஷ்டபட்டேனும் குடும்பத்தை காப்பாற்றுவேன். குளிர் என்னை ஆட்டிப்படைத்தது. ஒரு நம்பிக்கையில் மது குப்பியில் இருந்து இரண்டு வாய் குடித்தேன். குமட்டியது. அப்பா எதுவும் சொல்லவில்லை. நான் அப்பாவின் பையைத்  திறந்து எடுத்து வந்திருந்த நாலு சப்பாத்தியை அவருக்கும், எனக்கு மீதி இரண்டையும் எடுத்தேன். பின் அந்த பாலித்தேன் பையில் இருந்த இரண்டு வெங்காயத்தை ஆளுக்கொன்றாக வைத்துவிட்டு அதில் இருந்த மூன்று பச்சை மிளகாயில் இரண்டை அவருக்கு கொடுத்து ஒன்றை நானும் எடுத்துக்கொண்டேன். எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக குளிர் குறையத் தொடங்கியது. அவர் மீண்டும் குப்பியில் இருந்ததைக்  குடித்துவிட்டு கொஞ்சம் எனக்கும்  தந்துவிட்டு அங்கேயே படுத்துவிட்டார்.இரண்டு நாள் பயணத்தின் களைப்பு மற்றும் குளிர் காரணமாக நானும் மெதுவாக ஒரு மூலையில் படுத்துக்கொண்டேன்.
என் அப்பாவின் முகம் பல நாட்களுக்குப் பின்னர் எனக்கு மனதில் தெளியத்தொடங்கியது அவரது உடம்பின் மணம் மூக்கில் நன்றாக உணர முடிந்தது.அவரது அழகான வெற்றுடம்பில், கழட்டி வைத்திருந்த சட்டையைப் போட வேண்டும் என்று விரும்பி, அதை எடுத்துக்கொண்டு அவர் அருகில் நான் வேகமாக நெருங்கிக்கொண்டிருந்தேன்.
**********************************************************
இக்கதை இணைய இதழில் சிறந்த கதை என தெரிவுச்செய்யப்பட்டு  தனித்தன்மையுடன் கூடிய இணைய பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது https://padhaakai.com/2018/02/10/the-destitute/
இதேபோல் பலரது சிறந்த கதைகளை படிக்க பதாகை  இணையத்தளத்தை பார்வையிடவும்.

Monday, 27 November 2017

சென்னை தினம் (மெட்ராஸ் டே) சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற சிறுகதை - முகம்



மழை மேகம் மெதுமெதுவாக ஒன்று சேர தொடங்கிக்கொண்டிருந்தது. காலை முதலே கதிரவன் முகம் காட்டவே இல்லை, நேரம் மணி பத்தை தாண்டி ஓடியதுஅவசரமாக வேலைக்கு போக தயாராகிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் அவனது நண்பன் கைபேசியில் அழைத்து வரும்போது ஒரு இரண்டாயிரம் ரூபாய் எடுத்துவர சொன்னான்,
வெளியே சுமாராக இருட்டி இருந்தது, மழை பக்கத்து ஊர்களில் எங்கோ பெய்வதை காட்ட நல்லதொரு காற்று ஆவேசமாக ஆடி அடங்கியது, வீட்டிலிருந்து ஒரு பதினைந்து நிமிடத்தில் அவனது அலுவலகத்துக்கு போய் விடலாம், இடைப்பட்ட தூரத்தில் இருக்கின்ற ஒரே ஒரு தானியங்கி பணம் கொடுக்கும் இயந்திரம் ஒரு வாரமாக பணம் இல்லை என்று தான் காட்டுகிறது.

இருச்சக்கர வாகனத்தை இயக்கி அதில் ஏறி அமர்ந்தான். இரண்டுமூணு மழை துளிகள் அங்கங்கே விழுந்தது, வாகனத்தின் வேகத்தை கூட்டி சென்றான், மழையையும் , இயந்திரத்தையும் காரணம் காட்டி பணம் எடுக்காமல் செல்லலாம் என்று யோசித்துக்கொண்டே இயந்திரம் இருக்கும் அந்த வளைவை கடக்க முயற்சிக்கையில் ஏதோ ஒரு நொடி கண்கள்   NO CASH பலகை இல்லாததை கண்டு வண்டியை நிறுத்தினான்.

*****
    எழுபது எழுபத்தைந்து வயது இருக்கலாம். உயிர் இருக்குமா என்று சந்தேகிக்கும் அளவான தேகம்,சூம்பிப்போன கைகளில் ஒரு முடி கூட இல்லை,தலையில் நிலைக்கொள்ளாத தொப்பி, குழி விழுந்த அல்லது விதியின் பயனால் உருவாகி வந்த கன்னக்குழிகள், அதிகபட்சம் ஒரு நாற்பது கிலோ இருக்கலாம், நிச்சயம் இந்த ஆள் இப்போதுத்தான் முதன்முதலாக கால்சட்டை என்ற ஒன்றை அணிந்திருப்பான், இல்லையேல் இவரைப்போல் இரண்டு பேர் உள்ளே செல்லும் அளவிலான சட்டையும், கால்சட்டையும் ஏன்  போடவேண்டும், இந்த லட்சணத்தில் டக்கின் வேறு, மேலிருந்து ஆணையிருக்கலாம், இந்த உடைகள் துவைத்து சில வாரங்களேனும் ஆகியிருக்கும் கண்ணாடியின் வளைந்த நிலை மூக்கில் நில்லாமல் ஒரு காதில் முட்டு கொடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. மெதுவாக வெளியே இருந்த நாற்காலியை பிரயத்தனப்பட்டு தூக்கிக்கொண்டு படிகளில் ஏற முற்பட்டான் அந்த கிழவன், மர நாற்காலியின் ஒரு கால் ஒடிந்து அதை முள் ஆணியின் உதவியுடன் சேர்த்திருந்தனர்.

மழை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானது. இவன் வேகமாக படிகளில் ஏறினான், இவன் வருவதை கண்ட கிழவன் நாற்காலியை தூக்கிக்கொண்டு வழியில் இருந்து தள்ளிநின்றான் . மழை காற்றின் வேகத்தில் சாய்வாக அடிக்க தொடங்கியது. கிழவனின் மேல் மழை பொழிந்தது, இவன் உள்ளே நுழைந்ததும் மீண்டும் கதவை வெளியே இழுத்துப்பிடித்துக்கொண்டு ஒற்றை கையால் நாற்காலியை தூக்கி மெதுவாக உள்ளே வைத்தான் கிழவன். அறையின் குளிரூட்டி இருபத்திரண்டு டிகிரியில் சுழன்றடித்தது. உள்ளே இவனால் ஒரு ரெண்டு நிமிடம் நிற்க முடியவில்லை. கிழவன் வெறித்த கண்களுடன் சுற்றிலும் பார்த்தான். கிழவனை பத்து நிமிடம் உள்ளே நிறுத்தி வைத்தால் ஜீவா சமாதி ஆகிவிடும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது, கிழவன் இவன் மூஞ்சியை பார்க்கவேயில்லை. கண்ணாடி கதவுகளின் ஊடே வெளியே நோக்கி நின்றான், இவனும் பணத்தை எடுத்துவிட்டு வெளியே பார்த்தான். மழை புரட்டி எடுத்துக்கொண்டிருந்தது.

சென்னையில் நாலு துளி விழுந்தாலே நாலு நாள் நாறி விடும். ஊரில் உள்ள எல்லா சாக்கடையும் ரோட்டில் தான் முட்டளவு ஓடும்.காலன் பல இடங்களில் காத்துநிற்பான் ஒவ்வொரு காதளவு தூரத்திலும் பாசக்கயிற்றை எந்த திசையில் நின்று கொண்டும் எவ்வடிவிலும் வீசுவான். எந்த சென்னைவாசியும் ஒரு விவசாயியை போல் , ஒரு கிராமத்தானை போல மழையை பரவசத்துடன் வரவேற்பதே இல்லை. அவர்களை சொல்லியும் குற்றமில்லை பரலோகத்தை அனாயசமாக சென்றடைய பல வழிகளை திறந்தே வைத்துள்ள இடத்தில் . நீர் மேலாண்மையின் மிகப்பெரிய தோல்வியின் உதாரணமான  புதிய சிங்கார சென்னையில் யார் தான் பிரியப்படுவர் மழை என்ற சனியனை.

*****

கிழவன் இங்கு வேலைக்கு வந்த இரண்டாம் நாள் இன்று. சுமார் பத்து நாட்களுக்கு முன்னர் தான் ஒரு பெரிய கடையின் முன்னால் இரண்டு நாள் அமர்ந்திருந்தான். ஒருமுறைக்கூட சாப்பிட்டதாய் தெரியவில்லை. பிச்சையெடுக்கவும் கை உயரவே இல்லை எத்தனையோ முறை எண்ணியபோதும். பின்னர் அந்த கடையில் காவலாளியாக இருந்த முதியவரிடம் ஏதாவது வேலை கிடைக்குமா என்று உடைந்த குரலில் கேட்டபோது அவர் கூட்டிச்சென்ற இடம்தான் தனியார் காவலர் முதலாளியிடம் . ஏற இறங்க பார்த்த அந்த மிலிட்டரிக்காரன் யோவ்...! இவர எதுக்கு கூட்டி வந்த? என்றான் சிரத்தையில்லாமல். இல்ல வேல கேட்டாரு,அதான். உமக்கு வேல தந்ததே பாவம் பாத்து, இந்த வயசில இவர வேலைக்கு சேர்த்து நான் ஆசுபத்திரி செலவும் பார்க்கவாமுடியும்.

கிழவன் மெதுவாக இல்ல ஐயா..! ஒரு வேல இருந்தா கொஞ்சம் உதவியா இருக்கும். கொஞ்சம் இருமிய மிலிட்டரி சரி தான்ஆனா  ஒரு வயசு அளவு உண்டில்லையா? உங்களுக்கு இப்போ எத்தன? எழுபத்தி மூணு என்றான் கிழவன் தரையை பார்த்தப்படிஎந்த ஊரு? வந்தவாசி ஐயா, என்றான் தலையை தூக்காமலே. ஏதாவது அடையாள அட்டை வச்சிருக்கீங்க? கையில் இருந்த பாலிதீன் கவரில் இருந்து கொஞ்சம் கிழிந்த வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து நீட்டினான். பல விதமான கேள்விகள், பல மௌன பதில்களும் நேர்த்தியான பதில்களும், பல இடங்களில் கிழவனது கைநாட்டு வாங்கப்பட்டது.

அதோ அந்த அறையில ஒரு செட் துணி இருக்கு, இன்னும் பத்து நாளில புது துணி வரும்,அதுவரைக்கும் இத போட்டுக்கோங்க, ஒரு ஷு-வும் அந்த மூலையில இருக்கு அதையும் எடுங்க என்றான் மிலிட்டரி. உடுத்திருந்த அழுக்கு வேட்டியை ஒருமுறை சரி செய்துக்கொண்டே தலையை நிமிர்த்திய கிழவன் மெல்லிய குரலில் சார் சம்பளம் எவ்வளவு குடுப்பீங்க? பாத்துக்கலாம் என்று சொல்லிக்கொண்டே வெளியில் நின்றிருந்த ஒரு வாலிபனை கூப்பிட்டான். டேய் இன்னைக்கு யாராவது லீவு கேட்டிருக்காங்களா? ஆமாண்ணே. அந்த தெருமுக்கு ஹோட்டல்ல ஒரு ஆளு போகணும்னே, அந்த தாத்தா ஊருக்கு போயிட்டாருல்ல, வாறதுக்கு ரெண்டு நாள் ஆகும்.

கிழவன் மெதுவாக நடந்துச்சென்று பக்கத்து அறையில் தொங்கிக்கொண்டிருந்த சட்டை மற்றும் கால்சட்டையை எடுத்தார். சில நாட்கள் யாரோ அதை உடுத்தியுள்ளனர். அதனை எடுத்து மடக்கி வைத்துக்கொண்டு சுற்றும் முற்றும் ஒரு கவரை தேடினார். பழைய செய்திதாள்கள் மட்டும் தான் மூலையில் கிடந்தது. அதில் ஒரு சில தாள்களை எடுத்து இரண்டையும் சுருட்டிக்கொண்டார்பக்கத்தில் தொங்கிய தொப்பியையும் கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தவுடன் மிலிட்டரி வாலிபனை கூப்பிட்டு எலே...! இவர அந்த ஹோட்டல்ல இறக்கிவிட்டு வா. அவன் பெரியவரே போலாமா என்றவாறே இருச்சக்கர வாகனத்தை அமிழ்த்தி ஏற சொன்னான். கிழவன் பதட்டத்துடன் தம்பி ஒரு நிமிஷம் அந்த ஷு' என்றவாறே மீண்டும் உள்ளே விரைந்தார்மூலையில் ஒரு ஷு கொஞ்சம் அல்ல அதி பழசாகவே இருந்தது. சிலந்தி வலை பின்னியிருந்ததை கைகளால் நீக்கிவிட்டு அதை கையில் எடுத்துக்கொண்டே வேகமாக போய் வண்டியில் ஒரு புறமாக ஏறி அமர்ந்தார். வழியில் யாருடனோ பேசிக்கொண்டே தலையை தோளின் மேல் முட்டுக்கொடுத்து கைபேசியில் சிரித்துக்கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தான்ஒரு பெரிய கடையின் முன் வண்டி நின்றது. பெரியவரே இங்க தான்அந்த சைடுல ஒரு சீட் போட்ட ஒரு இடம் இருக்கும். நான் போய் கடஓனர்க்கிட்ட சொல்லிட்டு போறேன் என்றவாறு கடை நோக்கி நடந்தான்திரும்பி வந்தவன் மணி இப்போ ரெண்டாக போகுது. ஆறு மணிக்கு தான் டைம், நாளைக்கு காலையில ஆறு மணிக்கு கிளம்புங்கமதியம் சாப்பிட்டீங்களா? இல்லயில்ல... அவனே பதிலும் சொல்லிவிட்டு ஒரு இருபது ரூபாய் தாளை எடுத்து நீட்டிவிட்டு திரும்பினான். கிழவன் ரோட்டோரம் இருந்த சிறு தள்ளுவண்டி டீ-கடை சென்று டீ சொன்னான். டீ யானை பசிக்கு பத்தவேயில்லை. கடையில் வைத்திருந்த பலகாரங்களை பார்த்தார். தம்பி இந்த பிஸ்கட் எவ்வளவு. ஒண்ணு அஞ்சு ருவா... நிதானமாய் அந்த பெரிய குப்பியை திறந்து இரண்டு பிஸ்கட்டை எடுத்து சாப்பிட்டான். பின்னர் கொஞ்சம் தண்ணீரை அங்கிருந்த பிளாஸ்டிக் கேன்-இல் அருந்திவிட்டு கடைக்காரன் மீதி காசுக்கு கொடுத்த இரண்டு நீல நிற மிட்டாயை எடுத்துக்கொண்டு துணி மாற்றும் அறையை நோக்கி நடந்தான். கொஞ்சம் தெம்பாய் இருந்தது. அறை போன்ற இடத்தில் ஒரு ஆள் தான் உள்ளே நிற்க முடியும். கஷ்டப்பட்டு வேண்டுமானால் காலை நீட்டாமல் உட்கார முடியும். சுருட்டி வைத்திருந்த காகிதத்தை பிரித்து துணிகளை முகர்ந்துப்பார்த்தான். மீனை கழுவிய தண்ணீரின் வாசம். கால்சட்டையை மெதுவாக போட தொடங்கினான். அது கிழவனின் இடுப்பை விட இரண்டு மடங்கு பெரிதாக இருந்தது. தடுமாறி இரண்டாவது காலையும் உள்ளே நுழைத்தபோது பெரிய கிணற்றில் விட்ட வாளிப்போல் சூம்பிய காலில் தளதளவென ஆடியபோது. அந்த கால்சட்டையுடன் இணைத்திருந்த பெல்ட் அதை முறுக்கிகட்ட உறுதுணை புரிந்தது, பின்னர் தான் கொண்டுவந்த சட்டையை போட்டான்அதில் வயிறு பாகத்தில் பொத்தானும் இல்லை. தொள தொளவென இருந்த சட்டையை கால்சட்டையின் உள்ளே நுழைத்தான். தொப்பி தலையை விட பெருசாக. அந்த சுவரில் மாட்டியிருந்த விசில், கைத்தடி மற்றும் ஹோட்டல் என்ற தட்டியையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். ஷு போட மறந்தது நியாபகம் வந்ததுஅதை எடுத்துக்கொண்டு வாசலில் உட்கார்ந்தான். அவனின் பரந்து விரிந்த காலைவிட அது சிறியதாகவே இருந்தது. உள்ளே நுழையவேயில்லை. மிகவும் சிரமத்துடன் மீண்டும் முயற்சித்து நோக்கினான். அதில் போட்டிருந்த முடிச்சியையும் அவிழ்க்க முடியாது போல. பல சிரமங்களுக்கு பின் ஒருவழியாக அது காலுக்குள் சென்றது. நடக்க முடியாமல் நடந்து ஹோட்டலின் முன் வந்து முன்னால் இருந்த கேஷியரிடம் கண்ணாடி வழியாக பார்த்து வணக்கம் வைத்தான். கேஷியர் யாரோ ஒருவனை அனுப்பி அவன் அருகில் வந்து நேற்று ஏன் வரவில்லை? என்று கேட்டான். உங்க ஓனர் போன் பண்ணினாலும் எடுக்கல என்று கொஞ்சம் கோபமாக கேட்டுவிட்டு சென்றான். அந்த வாலிபன் உள்ளே சென்று பேசாமல் சென்றிருப்பது புரிந்தது. ஹோட்டல் என்ற தட்டியை எடுத்துக்கொண்டு ரோட்டின் ஓரத்தில் நின்றான். தட்டியை மேலும் கீழுமாய் அசைத்தபடியே.

*****
மொபைல் சிணுங்கியதுகடன் கேட்டவன் டேய்..! எங்க இருக்க? மழை வேற அடிச்சு துவைக்குதுஎப்போ வருவ?  சீக்கிரம் வாடா, ஷிப்ட் முடிச்சு நேரம் நெறைய ஆகுது. கொஞ்சம் நின்னுச்சுன்னா உடனே டூ மினிட்ஸ்-ல வந்திடுறேன் மச்சி என்றவாறே ஏ.டி.எம் அறையில் இருந்து வெளியே வந்தான். நாளைக்கு தீபாவளி, இந்த வருட தீபாவளி நமத்து போய்விடும் போலமழை மீண்டும் காற்றினால் சரிவாய் இவன் நிற்கும் இடத்தை நனைக்க தொடங்கியது. மீண்டும் உள்ளே நுழைந்தான். மழ இந்த அடி அடிக்குது. கிழவன் ம்ம்  என்று முனகினான் இவன் முகத்தை நோக்காமல். இன்னைக்கு பூரா இப்படி அடிச்சுகிட்டே இருந்தா ஊருக்கு எவனும் போகமுடியாது. தீபாவளி சென்னையில தான் கொண்டாடனும். கிழவன் இவன் முகத்தை நோக்கி மெதுவாக ஆமா..! என்றான், கிழவனின் உடல் நடுங்க தொடங்கியிருந்தது தெரிந்தது, அந்த ஏ.சி  யை ஆப் பண்ண வேண்டியது தானே. இல்ல... நான் இப்போ தான் இங்க வந்தேன், அதுவுமில்லாம ஆப் பண்ணகூடாதுன்னு வேற சொல்லியிருக்காங்க.

ஊருக்கு கிளம்பல்லியா? எந்த ஊரு  என கேட்டான் கிழவனிடம். வந்தவாசி. மழையை நோக்கியபடி ஊருக்கு போகல்ல! என்றான். இவனுக்கு ஏன்? என்று கேட்க ஆர்வம் பீறிட்டது. ஆனால் கிழவன் பேச விரும்பவில்லை என தோன்றியதால் அமைதியாகிவிட்டான்.

*****
கடையில் கார்கள் அதிகமாக வருவதும் போவதுமாக இருந்ததால் கிழவன் விரைவிலேயே களைத்துப்போனான். நேரம் இரவு பதினொன்றை தாண்டியிருந்தது. கண்ணாடி வழியே ஒருவன் கோழியின் தொடையை பிய்த்திளுப்பதை வெளியிலிருந்தே தெரிந்தது. பசி காதை அடைத்தது. நேரம் போகப்போக வண்டிகள் குறைந்ததால் கடையை சுத்தபடுத்தும் பணி நடந்தது. நேரம் பனிரெண்டரையை  கடந்திருக்கும். கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு மெதுவாக கண்ணாடி கதவை திறந்து உள்ளே சென்றான் கிழவன், நடத்துனர் போல நின்றிருந்த வெள்ளை சட்டைகாரரிடம் சார்...! சாப்பாடு ஏதாவது கொஞ்சம் இருக்குமா? செக்யூரிட்டிக்கு இங்க சாப்பாடு கிடையாதே! நாங்க அப்படி கொடுக்கிறதும் இல்லையே என்றவாறு  துடைப்பவனிடம் ஏதோ சொல்ல போனவர் திரும்பி ஒரு நிமிஷம் என்று சொல்லி உள்ளே சென்று சிறிது நேரத்தில் ஒரு பொதியை கொண்டு வந்து கிழவனிடம் தந்தான். அதில் கொஞ்சம் பிரைட் ரைஸ்சும், கொஞ்சம் வெள்ளை சோறும் அதன் மேல் கொஞ்சமாக கிரேவியும் ஊற்றபட்டிருந்தது. சாப்பிட்டுவிட்டு கைகளை துணிமாற்றும் அறையின் பக்கத்தில் இருந்த குழாயில் கழுவி அதில் கொஞ்சம் நீரை அருந்தியபின் மீண்டும் படியில் வந்தமர்ந்தான்.

நேரம் மெதுவாக வெள்ளையாகி கொண்டது. கண்ணை மூட பயம். ஏதாவது பிரச்னை வந்தால் இந்த வேலையும் போய்விடும். மணி ஆறுக்கு மேல் ஆகியிருக்கும். எழுந்து நடந்தான், கால் கணுக்காலில் சுள்ளென வலி, தோல் கிழிந்திருப்பது தெரிந்தது. கணுக்கால் வீங்கியும்  இருந்ததுஷுவை கழற்றவே பிரயத்தனப்பட்டான் . பெருவிரலின் ஓரம் உராய்ந்து நீர் வடிந்ததுசிறு விரலலும்  வண்டு கடித்ததை போன்று வீக்கமாக. மறுநாள் மதியம் மீண்டும் பழையது போல் தட்டியை தூக்கி நின்றான். இன்று நேற்று போல் அதிக கார்கள் வரவில்லை. எட்டு மணியை தாண்டியபின் தான் ஒன்றிரண்டு வாகனங்கள் வரத்தொடங்கியது. திடீர் என வண்டிகளை திசைகாட்டி ஒதுக்கும் போது பின்பக்கம் அரண் கம்பியில் ஒரு பெரிய கருப்பு நிற கார் பலமாக மோதியது. படாரென்று வாயிலை திறந்து வந்த இளைஞன் தேவுடியா பயலே விசில் என்ன மயித்துக்கு வச்சிருக்க, ஊத மாட்டியா என்று கத்தினான். கிழவன் இல்ல சார்...! நான் ஊதினேன். நான் செவிடனா தாயளி என்று உறுமினான். கிழவன் கொஞ்சம் சத்தமாக மீண்டும் ஊதினேன் என்றதும் காரை பார்த்து நின்றவன் வேகமாக கோபத்தில் சட்டென ஓங்கி மிதித்தான். மயிரு நியாயம் வேற பேசுறியா ? காரில் இருந்து இன்னொருவன் இறங்கி வந்து தடுமாறி எழப்போன கிழவனின் தலையில் ஓங்கி ஒரு உதைவிட்டான். கிழவன் தலைக்குப்புற மண்ணில் விழுந்தான். மீண்டும் வசைமாரி பொழிந்து கொண்டே இருவரும் மிதிக்க வரும்போது யாரோ தடுத்து விட்டனர். இளைஞர்கள்  தடுமாறிக்கொண்டே வண்டியை எடுத்து சென்றனர். மறுநாள் அங்கு வேண்டாம் என்று சொன்னதாய் சொல்லி மிலிட்டரிகாரனின் சகாய் கிழவனை கூடிச்சென்று ஒரு பெரிய குடோனில் காவல் காக்க சொன்னான். அங்கு இதேபோல் வேறொரு கிழவனும் இருந்தான். இருவரும் நெடுநேரம் பேசவேயில்லைஅங்கு ஒன்பது முதல் தான் டூட்டி. அந்த கிழவன் இரண்டு டூட்டி சேர்த்து பார்க்கிறான் போலும்.

இரவுணவு நேரத்தில் தான் அந்த கிழவன் இந்த கிழவனுக்கு சாப்பாட்டை கொஞ்சம் பங்கு கொடுத்தான். மறுநாள் காலைவரை அவர்கள் பேசிக்கொண்டே இருந்தனர். பணம், காமம், காதல், மரணம், மக்கள், மனைவி, பேரன்கள், விவசாயம், மழையின்மை, சண்டைகள், பட்ட அசிங்கங்கள், விரக்தி மற்றும் சென்னை வந்தடைய பட்ட வேதனைகள் வரை ஒரு கதைசொல்லி போல் மாறி மாறி சிரிக்காமல், அழாமல், யோசிக்காமல்... பேசினர். அன்பு காட்டும் நல்லவர்கள் நெடுநாள் நம்முடன் இருப்பதைவிட ஆத்மார்த்தமான சிநேகத்துடன் ஒரு நாள் நம்முடன் இருந்தாலே நம் மனம் அவர்களை வாழ்நாள் எல்லாம் மீண்டும் அவர்களை காணாவிடினும் அந்த நினைவுகளுடன் வாழும் . அதும் இந்த வயசு காலத்தில் ஒரு அனுசரணையான வார்த்தையே போதும்.

காலையில் தான் இந்த கிழவனுக்கு தெரிந்தது அங்கு கக்கூஸ் இல்லையென்று. அது ஆளே இல்லாத குடோன். பகலில் வண்டி வந்து சாமான்களை கொண்டு செல்லும் என்பதும், கிழவனின் வயறு கலங்க தொடங்கியதுஅந்த கிழவன் அரை கிலோமீட்டர் நடந்து சென்று ஒரு சிறு மறைவான சாக்கடை ஓரம் போக சொன்னான். கிழவன் அங்கே சென்று அமர்ந்துவிட்டு சாக்கடையில் கொஞ்சம் தெளிந்து ஓடும் இடத்தில் கழுவிவிட்டு மீண்டும் திரும்பினான். அங்கு சுமார் ஒரு வாரம் காவல் காத்துவிட்டு நேற்று இரவு தான் இந்த ஏ.டி.எம் முன் நிற்க சொன்னார்கள். நேற்று முன்தினம் அந்த கிழவன் வேலைக்கு வரவில்லைமதியம் சாப்பிட இருந்த நேரம், ஒரு மூன்று வாய் தான் சாப்பாடு போயிருக்கும் முதலாளி வந்துவிட்டார். அப்படியே போட்டுவிட்டு போய் கதவை திறந்து அவர் போவது வரை சுமார் அரைமணிநேரம் கூட இருந்துவிட்டு திரும்பி வந்து பார்த்தால், நாய் தின்று ஏப்பம் விட்டுக்கொண்டு நின்றிருந்ததுநேற்று பகல் மொத்தம் ஒரு டீ, இரண்டு வாழை பழம் ஒரு கட்டு பீடியுடன் கழிந்தது.
*****
மழை கொஞ்சம் வெளியே குறைய தொடங்கியது. கிழவன் இயந்திரத்தின் ஓரத்தில் ஒதுக்கிவைத்திருந்த  ஒரு மஞ்சள் பையில் இருந்து ஒரு பீடியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்மழை முற்றாய் நின்றதுஇவன் வாகனத்தை எடுத்து ஆபீஸ் நோக்கி புறப்பட்டான்கிழவனின் நினைவு புகையுடன் குடோனில் வேலை பார்க்கும் கிழவனை நினைத்தது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பால, எந்த பொறாமையும் இல்லாத இயலாமையினால் பேசிக்கொண்டிருந்த நாட்கள். கடைசிவரை இருவரும் பெயர்களை கேட்டுக்கொள்ளாமல்.

ஆபீசை அடைந்தவன் நண்பனை கண்டு காசை கொடுத்துவிட்டு தீபாவளி வாழ்த்தை அனைவரிடமும் சொல்லி சிரிப்புடன் மதியம் ஒரு மணி வரை கடத்தினான். மீண்டும் வெளியே மழை பேய் போல் இடியின் சத்தத்துடன் பக்கத்தில் நிற்பவரை கூட பார்க்க முடியாத அளவு பெய்து முடித்திருந்தது. அரைநாள் விடுப்பு சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான். பணம் எடுத்த ஏ.டி.எம்  இருக்கும் இடத்தை தாண்டி ஒரு நூறு மீட்டர் தூரத்தில் பத்திருபது பேர் நின்றிருந்தனர். ஒரு போலீஸ் வாகனம் மற்றும் ஒரு கார் ஓரத்தில் நின்றது. கடந்து செல்லும்போது ஒரு நொடி கீழே பார்த்தான்அதே கிழவன் தலையிலும், மூக்கிலும் ரத்தம் ஓடிய அடையாளங்களுடன். மழை நீரிலும் ரத்தம் கொஞ்ச தூரம் ஓடியுள்ளது. கையில் இருந்த குஸ்கா சிதறியும் கை கெட்டியாக கவரை  பிடித்தப்படியே படுத்திருந்தார். இவனது வண்டி நேராக சென்றது.    

**********************************************************

 இக்கதையுடன் தேர்வு செய்யப்பட்ட கதைகளையும் கிழக்கு பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. அந்த புத்தகத்தை வாங்க இணையத்தளம் :-

புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் |044 49595818 | 9445901234 | 9500045609