Showing posts with label Shattering Dreams. Show all posts
Showing posts with label Shattering Dreams. Show all posts

Sunday, 15 August 2021

குழந்தைகள் மீதான வன்முறைகள் மற்றும் பாலியல் அத்துமீறல்கள்

 

CHILD abuse and TN education system:

பள்ளிக்கல்வித்துறை மாற்றி சிந்திக்க வேண்டிய சரியான தருணம் இதுதான்...

பழையகால கல்வி வழிமுறைகளை தூக்கிப் போட வேண்டிய சரியான நேரம் இது. அதற்கு கரோனா ஒரு காரணமாகவும் பல பள்ளிகளில் நடக்கின்ற பாலியல் அத்துமீறல்கள் ஒரு காரணமாகவும் கொண்டு இப்போதே அரசும் ஒவ்வொரு பெற்றோர்களும் இதன் தேவையை முதலில் உணர வேண்டும்.

இந்த தகவல் புரட்சி யுகத்தில் மிகப்பிரம்மாண்டமான கட்டிடங்களை வைத்துக்கொண்டு பள்ளி நடத்துவதை முதலில் மாற்றியே தீர வேண்டும் இரண்டாவதாக மனித உடல்களை பற்றி மனித உணர்வுகளை பற்றி மனித வாழ்க்கை முறையை பற்றி எந்த ஒரு குழந்தையும் கல்லூரி முடியும் காலம்வரை உணர வழி முறைகள் இந்த பாடத்திட்டங்களில் இல்லை. அதன் காரணமாக பல்வேறு வாழ்க்கைப் பிரச்சினைகளையும் ஒவ்வொரு மாணவ/மாணவியரும் பள்ளி காலகட்டங்களை முடித்து வெளியே வரும்போது எதிர்கொள்கிறார்கள்.

அரசு உடனடியாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தே தீர வேண்டும். எந்த மத நிறுவனங்களும், சாதிகளும் ஒரு பள்ளியை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட கூடாது. ஒருகாலத்தில் அதன் தேவை இருந்தது.இப்போது தேவையில்லை. ஒரு மாணவி இன்று குறைந்தபட்சம் 6 லிருந்து 10 முறை கடவுள் சம்பந்தமான பாடல்கள், பிரார்த்தனைகள் போன்ற மூடநம்பிக்கையை மட்டும் வளர்த்துகின்ற விடயங்கள் இன்று பள்ளிகளில் தேவையின்றி கட்டாயத்தின் பேரில் அனுபவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறாள். எந்த மதத்தை சார்ந்த பள்ளியில் சேர்ந்து படித்தாலும் ஒரு அடிமையை நடத்துவதைவிட கீழ்தரமாகவே ஒரு மாணவன் அல்லது மாணவி கடவுள் என்ற பெயரில் நடத்தப்படுகிறார்கள். பள்ளிக்கூடங்கள் அதற்கான இடம் அல்ல.

அவர்கள் கடவுளை பற்றி சொந்த வீடுகளில் வேண்டுமானால் கற்றுக்கொள்ளட்டும். ஒரு மாண- வன் /வி க்கு என்று எந்த ஒரு குரலும் பள்ளிக்கூடங்களில் ஒலிப்பதற்கு அல்லது அவர்களது சந்தேகங்களை / குறைகளை முறைப்படி ஆராய்ந்து தீர்ப்பதற்கு ஒரு வழிமுறையும் இல்லை என்பதை மீறி சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என மிரட்டவும் செய்கிறார்கள்.

இதில் மிக கொடூரமான நிலை என்னவென்றால் பி டி ஏ (PTA) என்ற பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் என்ற ஒரு அமைப்பை பள்ளிக்கூடங்கள் வைத்திருந்தாலும் அதன் பயன் என்ன என்பது இதுவரை யாரும் கண்டடைந்தது கிடையாது. காரணம் அது யாருக்காக வை க்கப்பட்டு இருக்கிறதோ அவர்கள் அதில் பங்குதாரர்கள் அல்ல அல்லது கருத்து கூற அல்லது கூறுகின்ற கருத்துக்கு எந்த மரியாதையும் இல்லை.

Ex:- ஒரு திருமணத்தை பெற்றோர்கள் சேர்ந்து முடிவெடுத்து நடத்தினாலும் இப்போதைய நடைமுறையில் குறைந்தபட்சம் பிடித்திருக்கிறதா என்ற ஒரு கேள்வியாவது இந்த சமுதாயம் இப்போது அந்த ஆண்/பெண்ணிடம் கேட்கிறது. ஆனால் குழந்தைக்கு அந்த பள்ளியில் என்ன பிரச்சனை என்று பொதுவெளியில், வீட்டில், பள்ளிக்கூடத்தில் எங்குமே யாருமே கேட்பதில்லை கேட்பதற்கான உரிமையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. பிள்ளைகளுக்கான அனைத்து முடிவுகளும் தாங்கள் சரியாகத்தான் எடுக்கிறோம் என நம்புகின்ற ஆசிரியர்கள் ஒருபுறம், மறுபுறம் கட்டிய பணத்துக்கு தேவையான பணம் சம்பாதிக்கும் வசதியான விஷயங்கள் மட்டும் தான் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்தால் போதும் அது தான் தேவை என்று நம்புகிற பெற்றோர்கள் மறுபுறம் இருப்பதால் எந்த ஒரு மாணவனும் அவனுக்குத் தேவையான சந்தேகங்களை, உணர்வுகளை, பிரச்சனைகளை, கற்பனைகளை, திட்டங்களை எதையும் கேட்பதற்கு ஒரு காது இல்லாத ஒரு சூழ்நிலையில் வாழுகிறான்.

இப்படி ஒரு இக்கட்டில் இருக்கின்ற மாணவன் அல்லது மாணவி வகுப்பில் ஏற்படுகின்ற எந்த பிரச்சனையை பத்தாம் வகுப்பு வரைக்கும் யாரிடம் பேசி புரிய வைக்க முடியும். எந்த விதமான விளக்கங்களை கொடுத்து பெற்றோர்களை நம்பவைக்க முடியும்.

எடுத்துக்காட்டாக:- ஒரு ஆசிரியர் ஒரு மாணவியின் நெஞ்சை கசக்கி விட்டால் அதை எப்படி முயன்றாலும் ஒரு குழந்தையால் அதை நிரூபிக்க முடியாது. காரணம் அதற்கு அவள் தான் ஒரே சாட்சி. இப்படியான விஷயங்களை பொது வெளியில் பேசுவதற்கு முதலில் பெற்றோர்களும் அஞ்சுகிறார்கள். பெற்றோர்களிடமும் சொல்லி இதை தடுப்பதற்கு வழி முறைகள் என்று எதுவுமே இல்லாத ஒரு கல்வி பின்புலத்திலிருந்து மாணவிகளை காப்பாற்றுவது சாதாரணமான விஷயமல்ல.

ஆனால் அரசு இதற்கு மிக எளிதான தீர்வுகளைக் கண்டறிய முடியும். பள்ளிக்கூடங்கள் அனைத்துமே பத்து முதல் ஆயிரம் மாணவர்களை இணையம் மூலம் இணைத்து இன்று தகவல் புரட்சி யுகத்தில் அனைத்துமே அவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே கற்பிக்க முடியும். ஒரு நாளில் குறைந்தபட்ச நேர ஒதுக்கீடு செய்து மற்ற நேரங்களில் பலவிதமான விஷயங்களில் ஒரு மாணவ மாணவியரை பங்களிக்க வைக்க முடியும். செய்முறை பயிற்சி என்பது மிக தேவையான ஒன்று என்பதால் அதை கற்பிப்பதற்கு அரசு மாவட்டத்தின் பல இடங்களில் இப்போது இருக்கக்கூடிய பள்ளிக்கூடங்களை பயிற்சி கூடங்கள் ஆக மாற்றி ஒவ்வொரு நாட்களும் கொஞ்சம் மாணவர்களை கொஞ்சம் நேரம் அங்கு அனுப்பி வைக்க முடியும். அந்த இடங்களில் மிக தெளிவான வழிகாட்டு முறைகளுடன் கூடிய கற்பித்தல் அதோடு கண்காணிப்பு செய்ய முடியும். அனைத்துமே, அதாவது ஒரு ஆசிரியர் பேசுவது, மாணவர்களிடம் பேசப்படுகின்ற ஒவ்வொரு விஷயமும் இணையத்தில் பெற்றோர்கள் பார்க்கக்கூடிய அளவுக்கு ஒரு வருடம் சேமித்து வைக்கும் செயல்களை செய்திருக்கவேண்டும். ஒரு வருடம் முடிந்த பின்னரும் அதை எங்கிருந்தும் ஒவ்வொரு பெற்றோரும் பார்க்கும் படி செய்யலாம். மூன்று வருடத்துக்கு பின்னர் அதை நீக்கம் செய்யலாம்.

அடுத்ததாக கல்வி முறையில் நிச்சயம் ஐந்தாம் வகுப்பு முதல் பாலியல் கல்வியை சேர்த்தே ஆக வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். காரணம் இன்று ஒரு குழந்தை ஒன்றாம் வகுப்பில் படிக்கும்போதே பாலியல் சார்ந்த பலவிதமான காணொளிகள் tv மற்றும் பல விதங்களில் காண பெறுகிறார்கள். ஆனால் அந்த வயதில் அதன் முழு அகலம் தெரியாது என்பதால் ஐந்தாம் வகுப்பு முதல் நிச்சயம் இதற்கான கல்வித் திட்டத்தை உருவாக்கியே தீர வேண்டும்.

ஆனால் இதில் பிரச்சனை அனைத்து பெற்றோர்களும் பாலியல் கல்வி என்ற வார்த்தை கேட்டவுடனே "புணர்தல்" அல்லது "penetrative" என்ற விஷயத்தைப் பற்றி தான் யோசிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக:- உங்களுக்கு உடம்பில் ஒரு பாகத்தில் சொறிவது போல தோன்றினால் உங்கள் கை அதுவாகவே சொறிந்துவிடும். அதற்கு உங்களுக்கு தனிப் பயிற்சி தர வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அதே போல் தான் இந்த விஷயத்தை ஒரு பூனைக்கும், யானைக்கும், எலிக்கும் தெரிவது போல குழந்தை பெற்றுக் கொள்வார்கள்.

ஆனால் உண்மையில் கற்றுக் கொடுக்க வேண்டிய விஷயம் எப்படி உயிருடன் உடல் கொண்டிருக்கும் நமது காதலன்/லி அல்லது கட்டிய மனைவி / கணவரோடு இதை கையாள வேண்டும் என்பதை தான். எப்படி இன்னொரு உடலின் மேல் வன்முறை செலுத்தாமல் பாதுகாப்புடன், அரவணைப்புடன், அன்புடன், தெளிவுடன், வாஞ்சையுடன், வெறுப்பின்றி கோபம் இல்லாமல் வன்முறையற்ற முறையில் அவர்களுக்குள் இன்பம் துய்க்க முடியும் என்பதை சொல்லி கற்றுக்கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. உடல் மாற்றங்கள், வலிகள், வேதனைகள் போன்ற அனைத்தையும் கற்பிக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக MUTUAL CONSENT என்பதன் பொருளை, அதன் தேவையை, அதன் வரன்முறையை ஒவ்வொரு குழந்தைக்கும் சொல்லி கற்று கொடுக்க வேண்டும்... அனுமதி இல்லாமல் இன்னொருவரின் முடியை கூட தொட கூடாது என்பதை ஆழ் மனதில் பதிப்பிக்க வேண்டும். இன்றைய மாணவர்கள் தானே நாளைய ஆசிரியர்கள்.

இப்படி ஒரு கல்வி கொடுக்காமல் இந்த சமுதாயம் மாறும் என நினைத்தால் அது பகல் கனவு தான்.

Monday, 15 September 2014

கலைகின்ற கனவுகள் – I

                                                                  கலைகின்ற கனவுகள் – I

                                     எவ்வளவு ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் நாம் ஒவ்வொருவரும் வாழ எத்தனித்து கொண்டே இருக்கிறோம். ஒரு கனவு கலைவது என்பது எவ்வளவு பெரிய வலிகளை நமக்கு தருகிறது. நம் கனவுகள் பெரும்பாலும் தன்னலம் சார்ந்ததாக மட்டும் இருப்பதில்லை.


                                              நம்முடைய கனவுகளில் அல்லது எண்ணங்களில் நமது சுற்றத்தார் அல்லது நமக்கு மிகவும் பிரியமானவர்களுடன் ஒரு வாழ்கையை அந்த கனவுகளுடன் பயணப்பட முற்படுகிறோம். ஆனால் அது உடைந்து நம்மையும் நம் கனவுகளுடன் சேர்ந்து பயணிப்பவர்களையும் திசை மாற்றி செல்ல வைக்கிறது என்பது மிக பெரிய வேதனை என்பது ஒரு எலி கூண்டுக்குள் அகப்பட்டுக்கொண்டு விடுபட எத்தனிப்பதை போன்றது என்றே கருத தோன்றுகிறது.சில கனவுகள் சிதையும்போது ஒரு தலைமுறையே கருகும் பிளாஸ்டிக் பைகளை போல படராமல் இருக்க ஒரு வித வேதனையுடன் சகித்து ஜீரணிக்க முற்படுகிறோம். ஆனால் சில கனவுகள் உடைந்தால் பின் அதை யாதொரு காலத்திலும் அதை திரும்ப பெறுவதற்க்கான வாய்ப்புகள் இல்லாமலேயே மனித வாழ்க்கை முடிந்து போவது நிச்சயம் ஒரு மனமரணம் தான்..


                                                                        வண்டி

                                         ஒரு குழந்தை வளரத்தொடங்குவது முதல் வாகனங்கள் அல்லது வண்டிகள் ஒரு பிரமிப்பூட்டும் ஆச்சரியமாக தான் இருக்கிறது.ஒரு பெரிய வாகனம் ஒரு அழகு தான். ஒரு மனிதனின் வாழ்கையை ஒரு வாகனம் எவ்வளவு கச்சிதமாக மாற்றி விடுகிறது. ஒரு பேருந்தையோ, ஒரு வேனையோ , ஒரு ஷேர் ஆட்டோவையோ, ஒரு லாரியையோ வைத்துக்கொண்டு ஒரு குடும்பத்தை மிகவும் அழகாக நகர்த்திக்கொண்டு செல்லும் எத்தனை அப்பாக்கள் இன்று நம்மிடையே இருக்கின்றனர். எத்தனை குழந்தைகள் அப்பாக்களின் அந்த அழகிய வாகனங்களில் ஒரு வித ஆசை , சந்தோஷத்துடன் ஏறி அமர்ந்து செல்கின்றனர். எத்தனை மனைவிமார்கள் தங்கள் கனவுகளை அந்த ஒரு வாகனத்துடன் இணைத்துப்பார்க்கின்றனர். ஒரு வாகனம் வைத்திருக்கும் ஒரு அப்பாவுக்கு அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துக்கொண்டு தன் மகள் ,மகன்களின் படிப்பு மற்றும் உணவு உடைகளுக்கு வசதி ஏற்படுத்த பாடுபடுகின்றனர் .அதில் கிடைக்கும் வருமானத்தை சிறுக சேமித்தும் அதை நம்பியும் தான் பல குடும்பங்களுக்கு பல கனவுகள் மெய்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பது உண்மையே. ஒரு பெண் பிள்ளையின் கல்யாண கனவுகள் , ஒரு வயதான அப்பா , அம்மாக்களின் மருத்துவ செலவுகள் என அனைத்தையும் ஒரு வாகனத்தை வைத்துக்கொண்டு நிறைவேற்றும் எத்தனை அப்பாக்கள் இங்கு இருகின்றனர்.எத்தனை தங்கைகளின் தம்பிகளின் வாழ்கையை அண்ணன்கள் ஒரு வாகனத்துடன் பூர்த்திப்பெற வைக்க உழைகின்றனர். எத்தனை சிரமங்களின் இடையில் இன்று ஒரு வண்டி மட்டுமே வைத்துக்கொண்டு எத்தனையோ சாதாரணமானவர்கள் வாழ்க்கையை சாதுரியமாக முன்னெடுத்துச் செல்கின்றனர். 


                                                   எவ்வளவு எதிர்பார்ப்புகளுடன் ஒரு மனிதன் தங்கைகளின், மனைவியின் , பெற்ற தாயின் தாலி மாலையை கழற்றி விற்றோ அடமானம் வைத்தோ, பல தெரிந்த தெரியாத நபர்களிடம் கடன் வாங்கி ஒரு ஆட்டோவோ,லாரியோ,டம்போவோ வாங்குகின்றனர். அதில் நிச்சயம் நேர்த்தியாக வருமானம் வரும் தம் குடும்ப தேவைகள் நிறைவுப்பெறும் வாழ்கையை இனிதாக முன்னெடுத்துச் சென்றுவிடலாம் என்ற கனவுகளுடன் சில பல மனக்கணக்குகள் மற்றும் பணக்கணக்குகளுடன் தான் ஒரு வாகனத்தை ஒரு ஷோவ்ரூமில் இருந்து எடுத்து வருகின்றனர். எத்தனை கடவுள்களுக்கு அர்ச்சனைகள், வழிபாடுகள்,நேர்த்திகடன்கள் என செய்து அந்த வாகனத்தை வீட்டின் முன் கொண்டு நிப்பாட்டும் போது ஒரு குடும்பமே அல்லது ஒரு மனித வாழ்க்கையே அதை ஒரு கடவுளாக ஒரு வரம் தரும் கோயிலாக பார்க்கிறது.எத்தனை எதிர்கால கனவுகள் அந்த சில கணங்களில் அந்த குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினர்க்கும் வந்து போகிறது.

                                                     ஒரு முறை யோசித்து பாருங்கள் மொத்த இந்தியாவில் எத்தனை கோடி வாகனங்கள் அதில் எத்தனை பேர் ஒரே ஒரு வாகனத்தை மட்டும் நம்பி வாழும் மனிதர்கள். எத்தனை குடும்பங்கள் ஒரு வாகனத்தை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்கையை ரசனையுடன் வாழ முற்படுகின்றனர். ஒரு விதமான பிரமிப்பு வராமல் இல்லை.சில பல ஆயிரங்களை மட்டுமே வருமானமாக தரும்  என்று தெரிந்தும் .சொந்த வாகனத்தை வாங்க பல ஓட்டுனர்களும் விரும்புவது தான் யாரிடமும் கைகெட்டி வேலை பார்க்க வேண்டாம் மற்றும் தான் விரும்பும் நேரங்களில் வண்டியை ஓட்டினால் போதும் என்ற சிறு பரவசம் தான். அதேபோல் குறைந்த வருமானம் வந்தாலும் அதில் பாதியை வங்கிகளுக்கு தவணையில் செலுத்திவிட்டு மீதம் உள்ளதை வைத்து ஒரு குடும்பத்தை ஒரு அரசை விட கச்சிதமாக கணக்கீட்டின் மூலம் முன்னெடுத்து செல்கின்றனர்.


                                      ஆனால் என்றும் ஒரு சராசரி மனிதனின் கனவுகள் எளிதாக கைகூடி விடுவதே இல்லை. அந்த கனவுகளின் பயணம் பல நேரங்களில் பல விதங்களில் தடுக்கப்படுகிறது அல்லது உடைக்கப்படுகிறது. ஏதேனும் ஒரு நிர்பந்தத்தால் ஒரு வாகனம் காவல் நிலையத்தில் போய்விட்டது என்றால் அன்று விழுகிறது முதல் அடி. பல காவல் நிலையங்களில் பிச்சைக்காரர்களுக்கு அரசு யூனிபோர்ம் கொடுத்து உட்கார வைத்துள்ள மனித சாக்கடைகள் எந்த தயவு தாட்சண்யம் இல்லாமல் வாகனத்தை திருப்பி கொடுக்க விலை பேசுவார்கள். அதுவும் 100/200 என்ற வார்த்தைகள் அல்ல. சில பல ஆயிரங்களில் தான் அவர்களின் முதல் வார்த்தை ஆரம்பமாகும்.அதுவும் பொய் வழக்குகள் என்றால் அவர்கள் பழத்தில் ஊசியை சொருகுவதை போல் மிகவும் சாதுரியமாக பேசி கறந்து விடுவார்கள் . சின்னஞ்சிறு தவறுகள் நம் பக்கம் இருந்தால் நம் சொத்தை எழுதி வாங்காமல் விடமாட்டார்கள். ஏன் மனைவிகளின் தாலி மாலையுடன் சிறு குழந்தைகளின் இடுப்பு கொடியை வரை விற்றாவது தான் பல வாகனங்கள் காவல் நிலையத்தில் இருந்தும் வெளியே கொண்டுவரப்படுகிறது.


                                            ஒரே ஒரு முறை அந்த வாகனம் உள்ளே சென்று வெளியே வந்தால் அந்த சாதாரணமானவர்களின் கனவுகள் சிறியதாக உடைய தொடங்குகிறது. ஆனாலும் அதில் இருந்து மீண்டு வந்துவிடலாம் என்ற சிறு நம்பிக்கையுடன் தான் கண்ணீருடனும், வேதனையுடனும் திரும்ப பழையபடி வேலையை பார்க்க புறப்படுகின்றனர்.
ஆனால் அந்த பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுக்க வேண்டாம் என்ற மனநிலையில் இருந்தாலும் பல நேரங்களில் அந்த பிச்சைக்கார கூட்டம் வழக்கை காவல் நிலையங்களில் முடிக்க முனையும். அதற்கு தான் ஒவ்வொரு மனிதனும் ஆசையும் படுவான். அதற்கு காரணம் இரண்டு நாள் கழித்து தான் நீதிமன்றத்தில் இருந்து திரும்ப கொண்ட வர முடியும் என்றால் அது மேலும் பல சிக்கல்களை அவர்களுக்கு ஏற்படுத்தும் என்பதை தெரிந்தே இந்த பாவப்பட்டவர்கள் கடன் மற்றும் பண்டப்பாத்திரங்களை விற்றாவது சீக்கிரம் வாகனத்தை வெளியே எடுக்க முற்படுகின்றனர்.


                                          ஆனால் பணம் புரட்ட முடியாமல் போனால் அது தான் அவர்களின் வாழ்வில் ஏற்படும் முதல் கிரகணம் என்றால் அது மிகையல்ல. ஒரு மாதம் அந்த வாகனம் அந்த காவல் நிலையத்தில் இருந்தால் அதற்கு பிறகு எந்தவொரு ஒட்டுனர்க்கும் தன் சொந்த வாகனத்தை அடையாளம் கண்டுபிடிக்கவே தனி சிபிஐ வைக்கவேண்டியது தான் என்பது போய் வந்தவர்களின் கண்ணீர் பதில்கள் .

                                        அங்கே உருகுலைக்கப்பட்டு கிடப்பது அந்த ஒரு வாகன ஓட்டியின் வாகனம் மட்டுமல்ல ஏதோ ஒரு அம்மாவின் தாலி மாலையின் கடைசி கண்ணியும் தான், ஒரு மனைவியின் எதிர்பார்ப்புக்கள் மட்டும் அல்ல அந்த மொத்த குடும்பத்தின் எதிர்காலமே தான். எத்தனை பாவப்பட்டவர்கள் வாழ்கை ஓட்டத்தையே முடித்துள்ளனர் என்பதை அங்கே ஓடாமல் ஒய்ந்து போய் காற்றில்லாமல் நிற்கும் சக்கரங்கள் சொல்லும்...