Monday 1 September 2014

மனித மிருகங்கள்

     மனித மிருகங்கள்  


                             இன்றைய சூழலில் மனிதன் என்ற வார்த்தைக்கு ஒரே பொருள் மிருக குணம் கொண்டலையும் இரண்டு கால் கொண்ட மனம் புழுத்த  பிணங்கள். மனிதநேயம் என்ற வார்த்தைக்கு இனி மனித மனங்களிலோ , இல்லை வார்த்தைகளிலோ கூட இடம் இருக்கும் என்று நம்புவது மிகப்பெரும் கடினம் என்பது இன்றைய தினசரி வாழ்க்கை நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்ற பாடம் என்பது திண்ணம்.

            
                               சகமனிதனை நாம் மனிதனாக பார்க்காவிட்டால் கூட பரவாயில்லை.ஆனால் உயிரும்,உணர்வும் உள்ள ஒரு ஜீவன் என்றாவது எண்ணுவதற்கு ஏன் நம் புத்தியோ இல்லை இதயமோ இடமளிக்கவில்லை என்பது வேதனையிலும் வேதனை தான். மனிதமனங்கள் இன்று மலத்தை விடவும் நாற்றம் அடிக்கும் சாக்கடையாக ஏன் வைத்துக்கொண்டு நடக்கின்றோம் என்று நினைத்து பார்பதற்கு கூட நமக்கு இன்று நேரம் இல்லை. இவ்வளவு பரபரப்பாக எதை தேடி, எதை காப்பாற்ற நாயை விட கேவலமாக அலைந்து திரிந்துக்கொண்டு இருக்கிறோம்.


                          தடுக்கி விழுந்தவனை கைக்கொடுத்து எழுப்பி விடுவதற்கோ , பிழை செய்தவனை அன்புடன் அரவணைத்து ஆதரவு காட்டி திருத்தவோ நாம் இன்று சிறு முயற்சிகள் கூட எடுக்க விருப்பப்படுவதும் இல்லை. நம் முன்னால் ஒருவன் ஓடினால் அவனை தடுக்கி விழவைத்து சிரித்து அவனை வேதனைப்படுத்துவதில் நாம் இன்று மிகவும் ஒற்றுமையுடன் தான் இருக்கின்றோம். இன்றைய நிலையில் நம் அனைவருக்கும் கையில் துப்பாக்கியை தந்து உங்களுக்கு பிடிக்காதவர்களை இந்த ஒருவாரத்தில் கொல்லலாம் என்று அரசாணை பிறப்பித்தல் அடுத்த வாரம் இந்தியாவில் ஒரு மனிதனும் மிஞ்ச மாட்டான் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.


                    ஒரு நிமிடம் மனம் கொண்டு நமக்கு பிடித்தவர்களிடம் பேசவோ , இன்னொருவரின் வேதனையை கேட்டு கண்ணீர் விடவோ இன்று ஒருவருக்கும் நேரமில்லை. அந்த ஒரு நிமிடம் கிடைத்தால் ஒரு வாடிக்கையாளர் முன் குரங்கை போல் வேடிக்கை காட்டி அவனை மடையனாக்கி 5-ரூபாய் சம்பாதிக்க தான் யோசிக்கிறோம். இன்று பணம் என்ற ஒரு விஷயத்திற்காக நாம் நேரடியாக,மறைமுகமாக பலபேரை வேதனை மற்றும் துயரங்களை அனுபவிக்க வைக்கிறோம். பல நேரங்களில் பலரையும் கேவலப்படுத்துகிறோம். பணம் இல்லாதவனை கையால் ஆகாதவன் என்றும், பிச்சைகாரனை போலவும் காத்திருக்க வைத்து வேடிக்கை காட்டுகிறோம்.

                  
                     மற்றொருவர் படும் வேதனை அவர்கள் வாழும் சூழ்நிலை, அவர்களுக்கு வேண்டிய தேவைகள் என எதுவும் நாம் அறியவேண்டிய நிர்பந்தம் இல்லை என்ற ஒரு குறுகிய கண்ணோட்டத்துடன் தான் இன்று நமது வாழ்க்கை அமைத்துக்கொண்டு இருக்கிறோம். அதை தான் பிறருக்கும் போதிக்கிறோம். நமது அடுத்த தலைமுறைக்கும் இந்த விஷ எண்ணங்களை பிஞ்சு மனங்களில் சிறு வயது முதல் ஏற்றுகிறோம். இந்த முற்கால வினைகள் பிற்காலத்தில் திரும்பவும் வரும் என்று யோசிப்பதும் இல்லை. பணம் தான் நீ சம்பாதிக்க வேண்டும் என்றும் நல்ல குணமோ, இரக்ககுணமோ அல்ல என்று சொல்லி வளர்க்கப்படும் ஒவ்வொரு குழந்தையும் எதிர்காலத்தில் உங்கள் உபயோகங்களும் முடிந்த உடன் உங்களையும் அதே போல் குப்பை தொட்டியில் தூக்கி வீசும் என்பதையும் நினைவில் கொள்க.

                            


                              ஒருகாலத்தில் மனித மனங்களில் விரக்தி குறைவாக தான் இருந்தது என்பது உண்மை. இன்று உதவும் குணம் என்பது அரிதாகிவிட்டது . அடுத்தவர் துயர்கண்டு கண்ணீர் விடும் மனங்கள் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு சுருங்கி விட்டது என்பது உண்மையே. இன்று பக்கத்து வீட்டில் நடக்கின்ற துயரங்கள் கூட ஏதோ ஆயிரம் கிலோமீட்டர்க்கு அப்பால் நடந்தை போலவும், அறியாததை போலவும் , அமைதியாக கதவுகளை மூடிவிட்டு உள்ளே சிரித்து விளையாடி கொண்டிருக்கின்றோம். அல்லது அதற்கு முயற்சிக்கின்றோம்.


           

                              சொந்தங்களின் மரணங்கள் , நண்பர்களின் பிரிவுகள் என எதுவும் நம்மை அதிர்ச்சி அடையவோ , வேதனை அடையவோ செய்வதில்லை. அதை பணம் ,அல்லது அவர்களின் அந்தஸ்து தான் தீர்மானிக்கின்றது என்பதை என்னவென்று சொல்வது. பக்கத்து வீட்டில் யாரேனும் இடும் மரண ஓலங்கள் கூட நம்மை அசைப்பது இல்லை. இத்தனை கொடூரமான பிணங்களாக வாழ்ந்து எதை சாதித்து விட்டோம்.

அடுத்தவரின் வேதனைகளை கூட வேடிக்கை பார்ப்பதில் நமக்கு அவ்வளவு ஆர்வம். பத்து குழந்தைகள் ஒரு விபத்தில் சிக்கி கொண்டனர் என்பது இன்று நொறுக்கி தீனி தின்று கொண்டே கேட்டு விட்டு அடுத்த சேனலை சீக்கிரம் மாற்றி திரைபடத்தில் வரும் கற்பழிப்பு காட்சியை ரசனையுடன் பார்க்கும் புண்ணியவான்களாக நாம் மாறிக்கொண்டு இருக்கிறோம் என்பது எவ்வளவு அவலம். அந்த குழந்தைகளின் நிலை என்ன என்றோ அவர்களின் வேதனை என்ன என்றோ நாம் சிந்திப்பதும் இல்லை அதை பற்றி அடுத்தவரிடம் ஒரு மனக்குமுறலை வெளிப்படுத்த உண்டான மனம் கூட நம்மிடம் இல்லை. நமக்கு வரும்வரை அனைத்தும் நமக்கு ஒரு பொழுதுபோக்கு செய்தி மட்டுமே. அதில் வரும் எந்த அதிர்ச்சியோ,வேதனையோ நம்மை எவ்விதத்திலும் சீண்டபோவதே இல்லை என்பது நாம் மனிதர்கள் அல்ல மலங்கள் அல்லது மனித மிருகம் என்று நிரூபிக்கிறது...

No comments:

Post a Comment